மொழிகளுக்கிடையே பாலமான உமா

அரசு நீதிமன்றத்தில் தாம் குற்றம் புரியவில்லை என்பது நிரூபிக்கப்படுமா அல்லது குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு தண்டனை கிடைக்குமா என்ற கலக்கத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் இருப்பார்.

அவர் நீதிபதியிடம் சொல்ல விரும்புவதைத் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு உடனுக்குடன் பிழையற உரைபெயர்த்துக் கூறும் பணியைக் கடந்த இரண்டு ஆண்டுகளாக குமாரி உமா மகேஸ்வரி மேற்கொண்டு வருகிறார்.

இந்த 28 வயது இளையர், வழக்குகளை அறிவிக்கும் நீதிமன்றம் (mention court), விசாரணை நீதிமன்றம் (trial court) ஆகியவற்றில் உரைபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் தமிழ்மொழியில் மட்டுமே பேசக்கூடிய நிலையில், உமா தம் உரைபெயர்ப்புச் சேவையை வழங்குகிறார்.

நீதிபதியும் அரசாங்க மற்றும் இதர வழக்கறிஞர்களும் ஆங்கிலத்தில் கேட்கும் கேள்விகளை உமா தமிழில் உரைபெயர்த்து குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் தெரிவிப்பார்.

நீதிமன்றத்தில் அமைந்துள்ள பிணை வழங்கும் நிலையத்திற்குக் குற்றம் சாட்டப்பட்டவரின் உறவினர்களும் நண்பர்களும் வரும்போதும் உமாவின் உதவி தேவைப்படும்.

ஆங்கில இலக்கியத் துறையில் பட்டப்படிப்பு முடித்துவிட்டு, உள்ளூர் பிள்ளை பராமரிப்பு இணையத்தளத்தில் துணை ஆசிரியராக பணிபுரிந்த உமா, தம் நண்பர் மூலம் இந்த வேலை வாய்ப்பைப் பற்றி அறிந்து வேலைக்கு விண்ணப்பிக்க முடிவுசெய்தார். 

அப்போது இப்பணிக்கான பொறுப்புகள் என்ன என்று உமாவுக்குத் தெரியாது. பணியில் சேர்ந்த முதல் ஒன்பது மாதங்களில் ஆரம்பப் பயிற்சித் திட்டத்தில் ஈடுபட்டார். 

மூத்த உரைபெயர்ப்பாளர்கள் செய்யும் பணியைக் கூர்ந்து கவனித்துக் குறிப்புகள் எடுத்துப் பணி நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டார்.

அதன் பிறகு சுயமாகச் செயல்படத் தொடங்கினார் உமா. சவால்கள் நிறைந்த இவ்வேலை எளிதானதல்ல.

உடனுக்குடன் உரைபெயர்ப்பு செய்ய வேண்டியிருப்பதால் அகராதியைப் புரட்டிப் பார்க்க முடியாத நெருக்கடிநிலை.

சில ஆங்கிலச் சொற்களை எப்படித் தமிழில் உரைபெயர்ப்பது என்று தெரியாமல் இருக்கலாம்.

‘‘உதாரணத்திற்குக் கட்டுமானத் துறையில் பயன்படுத்தப்படும் கலைச்சொற்கள், குற்றம் சாட்டப்பட்டவருக்குப் புரியாமல் இருக்கலாம்.

அவரிடம் அச்சொல்லைத் தமிழில் மொழிபெயர்த்துப் புரியும் வகையில் விளக்கிச் சொல்ல வேண்டும்,’’ என்று கூறினார் உமா.

மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் நடத்தையைக் சகித்துக்கொள்ளும் தன்மையும் இப்பணிக்கு அவசியமானது என்றார் உமா.

ஏனெனில், சில சமயங்களில் கேட்ட கேள்விக்கு அவர்கள் முறை யாகப் பதில் சொல்லமாட்டார்கள். சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்வார்கள். சிலர் கோபத்தில் குரலை உயர்த்திப் பேசவும் செய்வார்கள்.

ஆனால் அதனைப் பொறுத்துக்கொண்டு உரைபெயர்ப்பதில் கவனம் இழக்காமல் உமா செயல்பட்டு வருகிறார்.

‘‘குற்றம் சாட்டப்பட்டவர்கள்  மீது சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படலாம். வேலையின்மை, நிதி நெருக்கடி எனப் பல்வேறு சூழல்களுக்கு அவர்கள் தள்ளப்பட்டிருப்பர். இந்நிலையில் அவர்களுக்கு எரிச்சலும் கோபமும் வருவது இயல்பு.

அத்தருணங்களில் அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு செயல்பட முயற்சி செய்வேன்,’’ என்று விளக்கினார் உமா. 

சுவாரசியமான அனுபவங்களைப் பெற விரும்பும் இளையர்களுக்கு இப்பணி ஏற்றது. ஒவ்வொரு நாளும் எப்படிப்பட்ட வழக்கு அல்லது நபரைச் சந்திப்போம் என்பது முன்கூட்டியே தெரியாது. உரைபெயர்ப்பாளர்கள் சட்டம் பயின்றவர்கள் அல்ல.

அதனால் அவர்கள் சட்ட ஆலோசனைகளை வழங்க இயலாது.வழக்கில் கடினமான சொற்கள் அறிமுகமாகும்போது நிதானத்துடன் சூழ்நிலையைச் சமாளித்து நீதிபதியோ அரசாங்க வழக்கறிஞரோ பேசும்போது முக்கிய விவரங்களை ஒன்றுவிடாமல் குறித்துக்கொள்வது போன்றவை பணியின் முக்கிய பொறுப்புகளில் அடங்கும். 

‘‘பாரபட்சம் பார்க்காமல் செயல் படுவதோடு நேர்மையுடன் நடந்துகொள்ள வேண்டும். தவறாக ஏதாவது கூறிவிட்டால் அது ஒருவரின் வாழ்க்கையைப் பாதிக்கக்கூடும். தவறாகச் சொல்லிவிட்டால் உடனடியாக அதனைத் தெரியப்படுத்தவும் வேண்டும்,’’ என்றார் உமா. 

‘‘குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் உண்மையில் நிரபராதியாக இருந்தால் அவர் விடுதலை பெற நானும் உறுதுணையாக இருந்திருக்கிறேன் என்பதில் எனக்கு மனதிருப்தி,’’ எனத் தெரிவித்தார் பணியில் தொடர்ந்து பெரும் ஈடுபாட்டுடன் செயல்பட்டு வரும் இளையர் உமா.