சமூகப் பிரச்சினைகளைப் பற்றி சிந்திக்க வைத்த போட்டி

சமூகத்தில் பின்தங்கி இருப்பவர்களுக்கு உதவுவது, சுற்றுப்புறத்தைப் பேணிக் காப்பது, எதிர்கால வேலைகளில் புத்தாக்கத்தைக் கடைப்பிடிப்பது ஆகியவை குறித்து இளையர்களிடையே பல சிந்தனைகளும் கருத்துகளும் நிலவலாம்.

இவற்றைப் பற்றி இளையர்கள் அலசி ஆராய்ந்து அதற்குரிய தீர்வுகளைப் பரிந்துரைக்க அண்மையில் போட்டி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

‘யூத் ஆக்‌‌ஷன் சேலஞ்ச்’ எனும் இப்போட்டியை தேசிய இளையர் மன்றம், முந்திய கலாசார, சமூக, இளையர் அமைச்சு, மக்கள் கழக இளையர் இயக்கம் ஆகியவை இணைந்து நடத்தின.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து 15க்கும் 35 வயதுக்கும் இடைப்பட்ட இளையர்கள், சமூகப் பிரச்சினைகள் குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிந்து, அரசாங்க கொள்கைகளை ஆராய்ந்து, சமூக பிரச்சினைகளுக்கான தீர்வுகளையும் முன்வைத்தனர்.

57 குழுக்களிலிருந்து 12 குழுக்கள் வழங்கிய சிறந்த தீர்வுகள், போட்டியின் இறுதிச் சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டன.

தீர்வுகளை இன்னும் ஆக்கபூர்வமாக்க பொது, தனியார் துறைகளை சேர்ந்த நிபுணர்களும் இக்குழுக்களுக்கு உதவினர்.

போட்டி முடிவுகள் இம்மாதம் அறிவிக்கப்பட்டதில், ‘மக்களுக்கு விருப்பமான குழு’ எனும் பிரிவில், ‘புரோஜெக்ட் ஜுவனைல் கிரைம்’ குழு வெற்றி பெற்றது.

அக்குழுவில் இடம்பெற்ற தொழில்நுட்பக் கல்வி கழக (மேற்கு கல்லூரி) மாணவியான குமாரி மு.கனிமொழி, சமூகத்தில் தவறான பாதையில் செல்லும் இளையர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தமது குழு ஒரு தோழமைத் திட்டத்தை வகுத்ததாகச் சொன்னார்.

அத்திட்டத்தின்படி, ‘கயாக்கிங்’ எனும் படகோட்ட விளையாட்டில் அபாய நிலையிலுள்ள இளையர்கள் ஈடுபடுவர். அவர்களுக்கு வழிகாட்டியாக இளம் பயிற்றுவிப்பாளர் ஒருவர் இடம்பெறுவார்.

‘கயாக்கிங்’ போட்டித் திறன்களை அவர்கள் கற்றுக்கொண்டதும் தாங்களும் இதற்குரிய திறன் பயிற்சி பெற்று, திட்டத்தில் சேரும் புதியவர்களுக்கு வழிகாட்டியாக விளங்கி இளைய சமூகத்தினருக்கு பங்களிக்கலாம்.

இதன் தொடர்பில், தவறான பாதையில் செல்லக்கூடிய இளையர்களுக்கு ஆதரவு தரும் லாப நோக்கமற்ற அமைப்புடன் செயல்பட கனிமொழியின் குழுவினருக்கு வாய்ப்பு கிடைத்தது.

“கயாக்கிங் விளையாட்டில் ஈடுபடும்போது இளையர்கள் கைபேசியைப் பயன்படுத்த இயலாது. ஆனால், தங்களது வழிகாட்டியிடம் மனம்விட்டுப் பேசி அறிவுரை பெறவாய்ப்பு கிடைகிறது,” என திட்டத்தை விவரித்தார் நிதி சேவைத் துறையில் பயிலும் இரண்டாம் ஆண்டு மாணவியான குமாரி கனிமொழி, 18.

திட்டத்திற்கு பொதுமக்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அவர், தவறான பாதையில் செல்லக்கூடிய இளையர்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்பு கொடுத்து, அவர்களிடம் பக்குவமாக பேசும் முறை குறித்து தாம் கற்றுக்கொண்டதாகக் கூறினார்.

கடைத்தொகுதியில் பொருள் வாங்கும் பற்றுச்சீட்டுகள் பெற்றதோடு கனிமொழியின் குழுவுக்கு திட்டத்தை செயல்படுத்த $30,000 நிதி ஆதரவும் வழங்கப்படும்.

“கொவிட்-19 நோய்ப் பரவல் முறியடிப்பு நடவடிக்கைகள் நடப்பில் இருந்தபோதிலும், போட்டியில் கலந்துகொண்ட இளையர்கள் தங்களது எண்ணங்களை செயல் வடிவமாக்கியது பாராட்டுக்குரியது,” என்று தெரிவித்தார் தேசிய இளையர் மன்றத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் சுவா.