ஆதாரமற்ற குற்றச்சாட்டு: ப.சிதம்பரம் அதிருப்தி

சென்னை: தன் குரலை ஒடுக்கும் நோக்கத்துடன் மோசமான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இத்தகைய நடவடிக்கை களால் தன் குரலை ஒடுக்க முடியாது எனக் குறிப்பிட் டுள்ளார். “எங்களிடம் கணக்கில் காட்டப்படாத சொத்துகள் உள்ளன என்று கூறப்படுகிறது.

“இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக எந்தவொரு ஆவணத்தையும் வெளிக்காட்டுவதோடு அவற்றை அரசுக்கு மாற்றவும் எனது குடும்பத்தினர் தயாராக உள்ளனர்,” என்று சிதம்பரம் தமது பதிவில் மேலும் கூறியுள்ளார். சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது சட்ட விரோத பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை சார்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் வெளிநாடு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சிபிஐயும் அமலாக்கத் துறையும் தமது குடும்பத் தாரைக் குறிவைத்து செயல்படுவதாக ப.சிதம்பரம் ஏற்கெனவே குற்றம்சாட்டி உள்ளார்.