$390,000 கையாடிய ஊழியருக்கு சிறை

‘வேலியுமேக்ஸ்’ அடகுக்கடையில் வேலை செய்த 58 வயது கோ ஆ செங் 2015ல் $390,325 தொகையைக் கையாடிய குற்றத்திற்காக நேற்று நான்கு ஆண்டுகள், இரண்டு மாதங்கள் சிறைத் தண்டனை பெற்றார். ஈஸ்ட்லிங்க் மாலில் உள்ள அடகுக்கடையின் கிளையில் பணிபுரிந்த கோ, 348 போலி அடமானச் சீட்டுகளை உருவாக்கினார். போலிக் கணக்குகள் உருவாக்கியதன் தொடர்பாக பத்து குற்றச் சாட்டுகளையும் மோசடி தொடர்பில் ஒரு குற்றச்சாட்டையும் கோ ஒப்புக்கொண்டார். தண்டனை விதிப்பின்போது மேலும் 40 குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்பட்டன.

வாடிக்கையாளர் ஏற்கெனவே அடகு வைத்த ஒரு பொருளை கோ கடைப் பாதுகாப்பு வைப்புப் பெட்டியிலிருந்து மீட்டு, மறுபடியும் ஒரு போலி அடமானச் சீட்டை உருவாக்கிப் பணத்தைக் கையாடியதாக அறியப்படுகிறது. கணக்கு வழக்கில் காணப்பட்ட முரண்பாட்டைத் தொடர்ந்து போலி அடமானச் சீட்டுகள் யாவும் கோவால் உருவாக்கப்பட்டவை என்று தெரியவந்தது. பணத்தைத் தங்கம் தொடர்பான முதலீட்டுக்கும் கணவரின் மருத்துவச் செலவுக்கும் பயன் படுத்தியதாக தெரிவிக்கப்பட்டது.