‘சூப்பர் சிங்கரில்’ உள்ளூர் பாடகர் சூர்யா

விஜய் தொலைக்காட்சி ஒளிவழியின் சின்னஞ்சிறு குரல் தேடலுக்கான ‘சூப்பர் சிங்கர் ஜூனியர் 6’ போட்டியில் சக்கைப் போடு போட்டுவருகிறார் 12 வயது சிறுவன் சூர்யா ஆனந்த். இந்தியாவில் நடத்தப்படும் இப்போட்டியில் சிங்கப்பூர் சிறுவர் களுக்கும் வாய்ப்பளிக்கும் வகை யில் இவ்வாண்டு செப்டம்பர் மாதம் முதலாம் குரல்வளச் சுற்று இங்கு நடைபெற்றது.

இந்தச் சுற்றுக்கு வருகை புரிந்த மூன்று நடுவர்களுள் சிங்கப்பூரைச் சேர்ந்த பிரபல இசைக் கலைஞரும் பாடகருமான திரு பிரவின் சைவியும் ஒருவர். சிறு வயதிலிருந்தே தம்முடைய தாய் திருமதி ஸ்வப்னஸ்ரீ ஆனந்திடம் கர்நாடக சங்கீதம் கற்று வந்த சூர்யா, தொடக்கப் பள்ளி மூன்றாம் வகுப்பிலிருந்து ‘பாடகர் குழு’ இணைப்பாட நடவடிக்கையைத் தேர்ந்தெடுத்து தமது குரல் வளத்தை மேலும் மேம்படுத்திக் கொண்டார். அட்மிரல்டி தொடக்கப்பள்ளி மாணவரான இவர், தமது பள்ளி ஏற்பாடு செய்த கலைத் திறன், சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் கவியரசு கண்ண தாசன் விழா போன்ற நிகழ்ச்சி களின் பாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு பாட்டுத் திறனை வெளிப்படுத்தி உள்ளார்.

ஆறாம் வகுப்பின் இறுதி ஆண்டு தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த சூர்யா ‘சூப்பர் சிங்கர்’ பாட்டுப் போட்டியின் அறிவிப்பைப் பற்றி தெரிந்து கொண்டதும் அதில் பங்கேற்பது பற்றிய குழப்பத்தில் இருந்தார். இருப்பினும், பெற்றோர்களின் ஆதரவால் தேர்வுகளுக்கு நன்கு படித்ததுடன் இந்த போட்டியில் பங்கெடுக்கவும் தம்மைத் தயார்ப் படுத்திக்கொண்டார் சூர்யா.

சிங்கப்பூரில் நடைபெற்ற இரண்டு குரல்வளச் சுற்றுகளில் கலந்து கொண்ட 300க்கும் மேற்பட்ட சிறுவர்களில் சூர்யா மொத்தம் ஏழு பாடல்களைப் பாடி சிங்கப்பூரின் ஒரே பிரதிநிதியாக அடுத்தடுத்த ‘சூப்பர் சிங்கர்’ சுற்றுகளுக்குத் தகுதி பெற்றார். சென்னையில் தங்கியுள்ள சூர்யா தம்முடைய பாட்டுத் திறனால் தற்போது முதல் 16வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். படம்: விஜய் டிவி