இளம்பெண்களுக்குத் தொல்லை தரும் போதை

போதைப்பழக்கத்திற்கு அடிமையாவோரில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் 30 வயதுக்கும் கீழ் இருக்கும் பெண்கள் என்று மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அண்மையில் தெரிவித்தது.

ஈராண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட இது 10 விழுக்காடு அதிகம் என்றும் நம்பப்படுகிறது.

ஈராண்டுகளுக்கு முன்பு மனநலக் கழகம் மேற்கொண்ட கணக்கெடுப்பு ஒன்றில், இளையர்கள் 18 வயதை அடையும் முன்னரே போதைப்பொருளுக்கு அடிமையாவது தெரியவந்தது.

போதைப்புழக்கத்திற்காக சிறைவாசம் அனுபவித்துவரும் இளம்பெண் ஒருவரும், போதையிலிருந்து மீண்டு வந்த இன்னொரு இளம்பெண்ணும் இந்தக் கவலை தரும் போக்கைப் பற்றிய தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

‘அலட்சியம் வேண்டாம்’

ஒற்றைப் பெற்றோருடன் வளர்ந்த வீராவுக்கு (உண்மைப் பெயரன்று) தந்தையின் அரவணைப்பு இல்லாமல் போனது எப்போதும் ஒரு குறையாகவே இருந்து வந்தது. தாயாரும் உடன்பிறந்தவர்களும் தன் தந்தையைப் பற்றி வீராவிடம் எதுவும் பகிர்ந்துகொள்ளவும் இல்லை.

தந்தையுடன் இணைந்துவிட வேண்டுமென்ற குறிக்கோளுடன் இருந்த வீரா, தன் தந்தை எட்டு ஆண்டுகளுக்கு முன்பே மாண்டுவிட்ட செய்தியை தன் அத்தைமூலம் அறிந்தவுடன் மனமுடைந்து போனார்.

தந்தையின் இறப்பை மறக்க நண்பர்களுடன் கனடா சென்றிருந்த வீரா, அங்கு ‘களை’ கலக்கப்பட்ட பீட்சாவைச் சாப்பிட்டார்.

அதனை உண்ட பிறகு வீராவுக்கு ஓய்வெடுப்பதுபோல இருந்தது. ‘களை’யால் ஈர்க்கப்பட்ட வீரா சிங்கப்பூர் திரும்பியதும் ஒவ்வொரு வார இறுதியிலும் போதையை நாடினார். அதனால் கல்வியிலும் அவருக்கு நாட்டம் குறைந்தது.

“நண்பர்களுடன் கூட்டமாக, யாரும் வராத இடத்திற்குச் சென்று திருட்டுத்தனமாக போதைப்பொருள் உட்கொண்டேன். அது எனக்கு ஒரு புதுவித குதூகலத்தை அள்ளித் தந்தது,” என்று சோகத்துடன் சொன்னார் வீரா.

சாதாரண நிலைத் தேர்வுகள் நடைபெறும் ஆண்டில் வீரா வழிதவறிப் போனார். போதைப்புழக்கத்திற்காக முதலில் ஆறு மாதங்கள் சிறை சென்றபோதும் அவர் திருந்தவில்லை.

பலதுறைத் தொழிற்கல்லூரியில் சிறப்புக் கல்வியில் பட்டயப் படிப்பை மேற்கொண்டு வந்த வீரா போதையிலிருந்து விடுபடத் தடுமாறினார்.

மீண்டும் பிடிபட்டு தற்போது கடந்த 12 மாதங்களாகச் சிறையில் இருக்கிறார்.

விடுதலையான பிறகு வாழ்வில் சாதிக்கும் முனைப்புடன் காணப்படும் வீரா, தான் செய்த தவறுகளை எண்ணி இப்போது பெரிதும் வருந்துகிறார்.

“என் வயதில் இருக்கும் பலர் கல்வியில் சிறப்பாகச் செயல்பட்டு, பல வழிகளில் முன்னேறி வருகிறார்கள். ஆனால், நான் போதைக்கு அடிமையாகி, வாழ்வில் பல துன்பங்களை எதிர்நோக்கி கொண்டிருக்கிறேன். போதைப் பொருளை யாரும் அலட்சியமாகக் கருத வேண்டாம்,” என்றார் வீரா.

போதையால் மாறிய பாதை

வீடு, பள்ளி என்றிருந்த தேவியை (உண்மைப் பெயரன்று) போதை தலைகீழாக புரட்டிப்போட்டது. இளவயதில் பருமனாக காணப்பட்ட தேவி, உடல் எடையைக் குறைக்க நண்பரின் பரிந்துரையால் போதைப் பொருள் உட்கொள்ளத் தொடங்கினார்.

ஆனால், அப்போது வெகுளித்தனமாக இருந்த தேவிக்குத் தான் உட்கொள்வது போதை என்று தெரியவில்லை. காதலன் தன்னைப் பிரியும் தறுவாயில் இருந்தபோது, உடல் எடை குறைத்து, அவர்முன் அழகாகத் தோன்ற வேண்டுமென்பதே தேவியின் குறிக்கோளாக இருந்தது.

ஆனால், கூடிய விரைவில் போதைக்கு அவர் அடிமையானார்; குண்டர் கும்பல்களுடன் பழக்கம் ஏற்பட்டது; வாழ்க்கை திசை மாறியது.

மதுக்கூடங்களுக்குச் செல்வது, புகைபிடிப்பது போன்றவற்றில் தேவி அன்றாடம் ஈடுபட்டு வந்தார்.

தேசிய கல்விக் கழகத்தில் தமிழ் ஆசிரியர் பயிற்சி மேற்கொண்டு வந்த தேவி, தனது 21 வயதில் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு நடத்திய சோதனையில் முதலில் பிடிபட்டு ஆறு மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையிலிருந்து விடுபட்ட இரண்டாவது நாளே தேவி மீண்டும் போதைப் பக்கம் திரும்பினார்.

“மாற வேண்டும் என்று நான் ஒருநொடிகூட நினைக்கவில்லை. கல்வி அமைச்சின்கீழ் என்னால் இனிமேல் ஆசிரியராகவும் முடியாது. அதனால் நான் ஏன் வாழ்க்கையைப் பற்றி நினைக்க வேண்டும் என்று அடங்காமல் இருந்தேன்,” என்றார் தேவி.

இரண்டாவது முறை பிடிபட்ட தேவி 18 மாதங்களைச் சிறையில் கழிக்க வேண்டியிருந்தது. பிறகு வெளியே வந்ததும் கிட்டத்தட்ட ஐந்து மாதங்களுக்குப் போதைப் பொருளை தொடாமல் இருந்த தேவி, காதலனின் ஊக்கத்தால் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டார்.

இறுதியாகப் பிடிபட்டபோது தேவி கருவுற்றிருந்தார். அவரின் வாழ்வில் அது ஒரு பெரிய திருப்புமுனை. திருந்தி வாழ தேவிக்கு உந்துதல் வந்தது. பெற்றோருக்குக் கடிதங்கள் எழுதி மன்னிப்புக் கோரியபோதும் தேவியை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

சிறையில் குழந்தையைப் பெற்றெடுத்த தேவி தன் பிள்ளையை பார்க்க முடியாமல் தவித்தார். வளர்ப்பு பெற்றோர் தேவியின் பிள்ளையைப் பார்த்துக்கொண்டனர். பிள்ளைக்கு இரண்டு வயதானபோது தேவியின் தாயார் பிள்ளையை அழைத்துக்கொண்டு இந்துவைப் பார்க்க வந்தார்.

பிள்ளைக்காக திருந்தி வாழ வேண்டுமென்ற எண்ணம் தேவியை மாற்றியது. இன்று ஒற்றைப் பெற்றோராக, பிள்ளையைத் தன் பெற்றோருடன் பார்த்துக்கொள்ளும் தேவி, சிங்கப்பூர்ச் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் ஆலோசனையியல் கல்வி பயின்று வருகிறார்.

தன்னைப்போல போதைக்கு அடிமையாகி தவறான பாதையில் செல்வோருக்கு அறிவுரை கூறி, அவர்களை நல்வழிப்படுத்தும் பணியில் இறங்கவுள்ளார் தேவி.

“போதை காரணமாக இளம்பெண்கள் பலர் பாலியல் வன்முறைகளுக்கு ஆளாகின்றனர். போதைப்பொருள் தொடக்கத்தில் இன்பத்தை அளிக்கும்; தலைகால் புரியாமல் ஒருவரை ஆடவைக்கும். ஆனால், அதன் பின்விளைவுகளை எதிர்நோக்கும்போதுதான் வாழ்வை நாம் புரிந்துகொள்ளவே தொடங்குவோம்,” என்கிறார் தேவி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!