ஸ்ரீ நாராயண மிஷனில் முதல் திருமணம்: இளம்பருவ பழக்கம்; 70களின் நெருக்கம்

பதின்ம வயது நண்பரான திரு வேலப்பன் வெள்ளையனைப் பார்க்க கடந்த பத்து ஆண்டுகளாக ஸ்ரீ நாராயண மிஷன் தாதிமை இல்லத்திற்கு வாராவாரம் செல்வார் திருவாட்டி சாவித்ரி காளியப்பன். அடுத்த வாரத்திலிருந்து இந்த அலைச்சல் இருக்காது. தமது நீண்ட கால நண்பரை கரம்பிடித்து தமது இல்லத்துக்கே அழைத்துச் செல்லவுள்ளார் சாவித்ரி.

கிட்டத்தட்ட 11 ஆண்டுகளுக்கு முன் நடக்கமுடியாத நிலையில் ஸ்ரீ நாராயண மிஷன் இல்லத்தில் சேர்க்கப்பட்ட திரு வேலப்பன் சில மாதங்களுக்கு முன் ஓரளவு நடக்கத்தொடங்கியதும் அவரைத் தம்முடன் வைத்துப் பராமரிக்க முடிவு செய்தார்.

பதிவுத்திருமணம் செய்து கணவர் என்ற உரிமையோடு அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்ல நினைத்த சாவித்ரிக்கு ஆச்சரியம் காத்திருந்தது.

விருந்தினர் புடைசூழ மேள தாளத்துடன் 71 வயது வேலப்பனுக்கும் 72 வயது சாவித்ரிக்கும் மணவிழா கொண்டாட முடிவு செய்தது ஸ்ரீ நாராயண மிஷன். வரும் 12ஆம் தேதி ஸ்ரீ நாராயண மிஷன் தாதிமை இல்லத்தில் நடக்கும் மணவிழாவுக்காக ஊழியர்களும் இல்லவாசிகளும் குதூகலத்துடன் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். ஊழியர்கள் நிதிசேர்த்து மாங்கல்யம் வாங்கினர். மணப்பெண் அலங்காரம், புகைப்படம், விருந்து என ஏற்பாடுகள் தடபுடலாக நடக்கின்றன.

“எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. 11 ஆண்டுகளாக இந்த இல்லத்திலேயே இருக்கிறேன். சாவித்ரி, எனது உயிரைக் காப்பாற்றிய தெய்வம்,” என்ற திரு வேலப்பனின் முகத்திலும் குரலிலும் குழந்தையின் உற்சாகம் பொங்கி வழிந்தது.

“காலங்களில் அவள் வசந்தம்,” என்று அவர் பாடத்தொடங்கவும் வெட்கப்பட்ட திருவாட்டி சாவித்ரி, இந்த வயதில் எங்களுக்கு வேறு என்ன வேண்டும். அவர் எனக்கு உதவி இருக்கிறார். அவரை நான் பார்த்துக்கொள்வேன். நானும் 10 ஆண்டுகளாக தனியாக இருக்கிறேன்,” என்றார். 

கம்போங் சீலாட் பகுதியில் வசித்த சாவித்ரிக்கும் வேலப்பனுக்கும் சிறுவயதிலேயே அறிமுகம் உண்டு. பிறகு திருமணம், இடமாற்றம் என தொடர்பு இல்லாமல் போனது. பல ஆண்டுகளுக்குப் பின் 2004ல் லிட்டில் இந்தியாவில் வேலை பயிற்சிக்காகச் சென்றிருந்த வேலப்பன், சாவித்ரியை அடையாளம் கண்டு பேசினார். சாப்பிட அழைத்துச் சென்றார். இருவரும் தங்கள் வாழ்க்கைக் கதைகளைப் பகிர்ந்துகொண்டனர். ஒருவருக்கொருவர் உதவினர்.

பள்ளி அலுவலக உதவியாளராக வேலை செய்த சாவித்ரி, வேலப்பன் துப்புரவுப் பணி செய்த இடத்துக்கே காப்பியும் வடையும் வாங்கி வருவார். அவருக்கு உடல் நலமில்லாதபோது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வார். மெல்ல மெல்ல நட்பு வளர்ந்து அன்பாக மலர்ந்தது.  

இந்தியாவில் பிறந்த வேலப்பன், சிறுவயதில் சிங்கப்பூரில் குடியேறினார். கடைகளில் உதவியாளராக இருந்தார். 1974ல் நடந்த அவரது திருமணம் 23 ஆண்டுகளில் முறிந்தது. மணமான அவரது ஒரே மகளும் பல ஆண்டுகளாகத் தொடர்பில் இல்லை. தந்தையுடன் வாடகை வீட்டில் வசித்துவந்த வேலப்பன், தந்தையின் மறைவிற்குப் பின் உடல்நலக்குறைவினால் ஸ்ரீ நாராயண மிஷன் தாதிமை இல்லத்தில் சேர்க்கப்பட்டார். 

சாவித்ரிக்கு 1973ல்  திருமணம் நடந்தது. பத்து ஆண்டுகளுக்கு முன் கணவர் இறந்துவிட்டார். புக்கிட் மேராவிலுள்ள வாடகை வீட்டில் வசிக்கிறார். அவரது ஒரே மகனும் எங்கிருக்கிறார் என்று தெரியாத நிலையில் வேலப்பனின் நட்பு அவரது வாழ்க்கையை மீண்டும் அர்த்தமுள்ளதாக்கி உள்ளது.

“கல்யாணம் ஆனதும் முதலில் அவருக்குப் பிடித்த கருவாட்டுக்கறி சமைத்துத் தருவேன்,” என்ற அவர், வேலப்பனைப் பார்த்து, “15ஆம் தேதி திரைப்படம் பார்க்கப் போவோம்,” என்றார். படம் பார்ப்பதில் ஆர்வம் மிகுந்த வேலப்பன் ஸ்ரீ நாராயண மிஷன் இல்லத்தில் பிரபல பாடகர்.  மிகச் சின்ன வயதில் தமது இரண்டு பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு 1800களின் கடைசியில் சிங்கப்பூருக்கு வந்த தமது பாட்டியைப் போலவே உறுதிமிக்கவரான சாவித்ரி, வேலப்பனை நான் நன்றாகப் பார்த்துக் கொள்வேன் என்றார்.   

சக்கரநாற்காலியில் வலம்வந்த வேலப்பன், இயன் மருத்துவரின் உதவியோடு ஈராண்டுகளுக்கு முன் மெல்ல நடக்கத் தொடங்கினார். திருமணம் முடிவானதும்  தீவர முயற்சி எடுத்து சில மாதங்களிலேயே அவர் நன்கு நடக்கத் தொடங்கிவிட்டதாகக் கூறினார் ஸ்ரீ நாராயண மிஷன் இணை சமூக ஊழியர் இளமாறன் கலைச்செல்வி. திருமண ஏற்பாடுகளைக் கவனித்துவரும் இவர், வேலப்பனுக்குத் தேவையான சமூக உதவித்திட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

“ஸ்ரீ நாராயண மிஷனில் இது முதல் திருமணம். இல்லவாசிகள் மீண்டும் சமூகத்தில் இணைவதே எங்களின் நோக்கம். பலருக்கு அந்த வாய்ப்பு கிடைப்பதில்லை,” என்ற இல்லத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தேவேந்திரன், அத்தகைய ஓர் அரியவாய்ப்பு வேலப்பனுக்குக் கிடைத்ததில் பெரு மகிழ்ச்சி கொண்டுள்ளார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon