புத்தாண்டு பரபரப்பில் லிட்டில் இந்தியா

மாதம் முழுக்க விழாக் கோலம்! தமிழர்கள் சித்திரைப் புத்தாண்டைக் கொண்டாடுவது தவிர, மலையாளிகள், தெலுங்கர், கன்னடர், சீக்கியர் எனப் பலரும் புத்தாண்டைக் கொண்டாடும் மாதம் இது.
இன்று சித்திரைப் புத்தாண்டைக் கொண்டாடும் தமிழர்கள் பலரும் வழிபாட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்காக நேற்று காலையிலிருந்து திரளாக லிட்டில் இந்தியாவுக்கு வந்தனர்.
“வழிபாட்டுக்கான பொருட்கள் மட்டுமின்றி, சமையல் பாத்திரங்கள், புத்தாடைகள் என ஒரு புதிய தொடக்கத்துடன் ஆண்டைத் தொடங்க வேண்டும் என்று கடை கடையாய் ஏறி, புத்தாண்டுக்காக விரும்பியதை வாங்கிச் சென்றனர் வாடிக்கையாளர்கள்,” என்று கூறினார் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமை சங்கத் தலைவர் ராஜ்குமார் சந்திரா.
ஓய்வுபெற்ற 62 வயது திரு தி. ராஜகுமாருக்கு சித்திரைப் புத்தாண்டு என்பது குடும்ப ஒன்றுகூடல் நிகழ்வாகும். திருமணம் புரிந்த தங்களது மகன்களுடன் பேரப்பிள்ளைகளும் தமது வீட்டுக்கு வருவர் என்று கூறிய அவர், மதிய உணவு சமைக்கத் தேவையான பொருட் களை வாங்க தம் மனைவியுடன் நேற்று லிட்டில் இந்தியாவுக்கு வந்திருந்தார்.
லிட்டில் இந்தியா ஆர்க்கேட்டில் இனிப்புப் பலகாரங்களை நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச் சென்றனர் திரு அந்தோனி தம்பதியினர். 
கணவர் கத்தோலிக்கர், மனைவி இந்து என்றாலும் இரு சமயப் பண்டிகைகளிலும் கலந்துகொள்வதில் புது அனுபவம் கிடைக்கிறது என்கின்றனர் இந்தத் தம்பதியினர். 
“எனது குடும்ப உறுப்பினர்களும் சித்திரைப் புத்தாண்டுக் கொண்டாட்டத் தில் கலந்துகொள்வர். இப்படி எல்லா பண்டிகைகளிலும் கலந்துகொள்ளும்போது எங்களுக்கிடையே நல்லிணக்கமும், பிணைப்பும் வலுப்படுகிறது,” என்றார் 53 வயதான திரு அந்தோனி சாமிபிள்ளை. 
வளரும் பருவத்தில் பெரும்பாலும் பெற்றோர்கள்தான் தேவையான பொருட் களை வாங்க சந்தைக்குச் செல்வார்கள் என்பதை 66 வயது இல்லத்தரசி திருமதி மா.ராஜேஸ்வரி நினைவுகூர்ந்தார்.
நவீனமாக மாறினாலும், பாரம்பரியத்தை மறக்காது அடுத்த தலைமுறையினருக்கு இதுபோன்ற பண்டிகைகளின் மகத் துவத்தை வலியுறுத்த தற்காலத் தலை முறையினர் கடப்பாடு கொண்டுள்ளனர் என வலியுறுத்தினார் அவர்.
திருமதி இ.ராஜலட்சுமியோடு அவரது 16 வயது மகன் சு.சதீ‌ஷ்வரனும் 27 வயது தங்கை இ.ரேவதி பிரியாவும் வந்திருந் தனர்.
வீட்டில் பொங்கல் வைத்து, இனிப்புப் பலகாரங்களை கடவுளுக்குப் படைத்து, சைவ உணவு வகைகளை சமைத்து எளிய முறையில் புத்தாண்டைக் கொண்டாடுவதாகக் குறிப்பிட்டார் 37 வயது திருமதி ராஜலட்சுமி. வீட்டுக் கொண்டாட்டங்கள் தவிர, சமூக மன்றங் களில் புத்தாண்டு தொடர்பில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுவது வரவேற்கத் தக்கது என்று கருத்துரைத்தார் அவர்.