சுடச் சுடச் செய்திகள்

அதிபர் தேர்தல் அரசியல் போர்: பாஜக தலித் தந்திரம்

ஜனநாயகத்துக்கு, சாதி அரசியலுக்குப் பெயர்போன இந்தியாவில் அடுத்த மாதம் அதிபர் தேர்தல் வந்துவிட்டது. அந்தத் தேர்தல் தெருவுக்குத் தெரு, வீதிக்கு வீதி விழாபோல நடந்து பொதுமக்கள் வாக்களிக்கும் பொதுத் தேர்தல் அல்ல. பதிலாக, நாட்டின் நாடாளுமன்ற இரு அவைகளின் உறுப்பினர்கள் 776 பேரும் பல மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்கள் 4,120 பேரும் ஆக மொத்தம் 4,896 பேர் வாக்களித்து அரசமைப்புச் சட்டப்படி ஆக உயரிய பதவிக்கு ஒருவரைத் தேர்ந்தெடுக்க நடக்கும் தேர்தல் அது. மொத்த வாக்குகள் 10,98,903 ஆகும். மாநிலத்தின் மக்கள் தொகையைப் பொறுத்து சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்கு மதிப்பு இருக்கும். அவர்களின் மொத்த வாக்கை நாடாளுமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையால் வகுத்து நாடாளுமன்ற உறுப்பினர் வாக்கு மதிப்பு கணக்கிடப்படுகிறது.

இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தின்படி அதிபர் பதவி என்பது வெறும் சம்பிரதாயப் பதவிதான். பிரதமர் பதவியைப் போல் அதிகாரமிக்கது அல்ல. அதிபர் பதவி என்பது ஆளும் தரப்பின் கௌரவமாகப் பார்க்கப்படுகிறது. நாட்டின் முதல் குடிமகனாகத் திகழும் அதிபரை எல்லா அரசியல் கட்சிகளும் சேர்ந்து தேர்ந்தெடுக்க ஒவ்வொரு தேர்தலிலும் முயற்சிகள் இடம்பெறும். ஆனால் கடைசியில் போட்டிதான் மிஞ்சும். இதுநாள்வரையில் நடந்துவந்துள்ள 14 அதிபர் தேர்தல்களில், 1977 ஆம் ஆண்டில் நீலம் சஞ்சீவ ரெட்டி அதிபராகிய தேர்தலைத் தவிர இதர எல்லா அதிபர் தேர்தல்களிலும் போட்டி இல்லாமல் இருந்ததில்லை.

இத்தகைய போட்டியில் இப்போதைய ஆளும் கட்சியான பாஜக யாருக்கும் சளைத்தது அல்ல. கடந்த 1997ல், 2002ல் முறையே கே ஆர் நாராயணன், அப்துல் கலாம் இருவரும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அப்போது அவர்களை எதிர்த்தரப்பு எதிர்க்கவில்லை.

அடுத்த மாதம் நடக்க இருக்கும் தேர்தலை ‘அரசியல் போர்’ என்று எதிர்த்தரப்புகள் வர்ணித்து இருக்கின்றன. இந்தியாவில் ஏறக்குறைய ஒரு தலைமுறைக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற்று ஆட்சி அமைத்து மத்திய நிர்வாகத்தில் நிலைத்தன்மையை மேலும் மேலும் உறுதிப்படுத்தி வருகிறது, ஆளும் பாரதிய ஜனதா கட்சி. நாட்டு மக்களில் ஏறக்குறைய 60% ஆதரவை தேர்தல் மூலம் பெற்றுவிட்ட பாஜக,

அரசமைப்பு ரீதியிலும் தன்னை, தன் கோட்பாடுகளைப் பலப்படுத்திக்கொள்ள வியூகமாகக் காய்களை நகர்த்திவருகிறது. அந்த உத்தி யின் ஓர் அங்கமாக, இந்தியாவின் அடுத்த அதிபர் இவர் தான் என்று சொல்லி உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ராம் நாத் கோவிந்த், 71, என்ற சட்டத்துறை வல்லுநரைக் களத்தில் அந்தக் கட்சி இறக்கிவிட்டு உள்ளது. ராம் நாத் கோவிந்த் தலித் இனத்தைச் சேர்ந்தவர். இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தின் பிதாமகன் என்று வர்ணிக்கப்படும் டாக்டர் அம்பேத்கார் போன்றவர், அமைதி யானவர், அறிவாளி என பாஜக பிரகடனப்படுத்தியுள்ளது.

ஆனால் தலித் இனத்தவர்களில் மீரா குமார், 72, போன்ற தகுதியானவர்கள் பலர் இருக்க அவர்களை எல்லாம் விட்டுவிட்டு ஆர்எஸ்எஸ்காரர் என்பதால்தான் ராம் நாத் கோவிந்தை பாஜக களம் இறக்குகிறது என்று எதிர்க்கட்சிகள் புலம்புகின்றன. காங்கிரஸ் தலைமையில் 17 கட்சிகள் மீராகுமாரை பொதுவேட்பாளராக அறிவித்து உள்ளன. இருந்தாலும் பாஜகவின் வேட்பாளர் தலித் என்பதால் எதிர்க்கட்சிகளிலும் சில கட்சிகள் பாஜக வேட் பாளரை ஆதரிக்கின்றன. தமிழகத்தின் ஆளும் அதிமுக வின் பல தரப்புகளும் பாஜக பக்கமே நிற்கின்றன. பாஜக வேட்பாளருக்கு ஏற்கெனவே ஏறக்குறைய 66% ஆதரவு வாக்குகள் குவிந்துவிட்டபடியால் ராம் நாத் கோவிந்த்தான் நாட்டின் அடுத்த அதிபராவது உறுதியாகிவிட்டது.

பாஜக அரசாங்கம் 2019ல் நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திப்பதற்கு முன் எத்தனையோ மசோதாக்கள் நிறைவேற வேண்டும். எத்தனையோ நியமனங்கள் இடம்பெற வேண் டும். அதே காலகட்டத்தில் ஆர்எஸ்எஸ் கோட்பாட்டுக்கு அதிபர் மாளிகையின் கதவைத் திறந்துவிடவேண்டும். இவை எல்லாவற்றையும் ஒரே கல்லில் சாதிக்க மோடி அரசாங்கம் கையில் எடுக்கும் துருப்புச் சீட்டுதான் தலித் இனத்தைச் சேர்ந்த ராம் நாத் கோவிந்த்.

ஜனநாயக ரீதியிலும் அரசமைப்புச் சட்ட ரீதியிலும் நாட்டின் வளர்ச்சிக்கு அரசியல் நிலைத்தன்மை தேவை என்று வலியுறுத்தி வரும் பாஜக, மக்களிடத்திலும் நிர் வாகத்திலும் தன் கோட்பாடுகளைக் கைவிடாமல் தன் பிடியை நிதானமாக இறுக்கிவருகிறது. அதிபர் மாளிகையும் பாஜகவுக்கு வழிவிட ஆயத்தமாகி வருகிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon