ஜெயா, கருணாநிதி இல்லா தேர்தலில் கணக்குப் போடும் கட்சிகள்

இந்தியாவில் அடுத்த  நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு இன்னமும் வெளிவர வில்லை. ஆனாலும் அந்தத் தேர்தலில் வென்று மத்தியில் அமையப்போகும் ஆட்சி எது என்பதைத் தீர்மானிப்பதில் வேறு எந்த மாநிலத்தையும்விட தமிழ்நாடு மிகவும் முக்கியமானதாக இருக்கும் போல் தெரிகிறது.  வட இந்தியாவில் 2014 தேர்தலின்போது இருந்த அளவுக்கு தனக்கு இப்போது செல்வாக்கு இருக்காது என்று ஆளும் பாஜக கணிக்கிறது.  
ஆகையால் அந்த இழப்பை ஈடுசெய்ய, தனக்குப் போதிய ஆதரவு இல்லாத தென் னிந்தியாவைத் தன் பக்கம் சாய்க்க வேண்டும் என அக்கட்சி முடிவு செய்து இருக்கிறது. 
அதேவேளையில் வட இந்தியாவில் முக்கிய மான சில மாநிலங்களில் சென்ற ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் எதிர்பாரா வெற்றிகளைப் பெற்று எழுந்து உட்கார்ந்து இருக்கும் காங்கிரஸ் கட்சியும் தமிழ்நாட்டில் ஒருமித்த கவனத்தைச் செலுத்துகிறது.
தேர்தல் எப்போது என்பது தெரியவில்லை என்றபோதிலும்கூட தேசிய கட்சிகள் அந்த மாநிலத்தில் படுவேகமாக வரிந்துகட்டிவிட் டன. அம்மாநிலத்தில் காலாகாலமாக வேர் ஊன்ற முடியாத நிலையில் இருந்து வரும்  தேசிய கட்சிகள், வழக்கம்போல் இரு பெரும் திராவிடக் கட்சிகளுடன் சேர்ந்து பெரும் கூட்டணியை அமைக்கின்றன.
ஒவ்வொரு கட்சிக்கும் இருக்கும் ஆதர வைக் கணக்கிட்டு அதிக வாக்கு பலத்தைக் கொண்டு இருக்கும் கட்சிகளைச்  சேர்த்துக் கொண்டால் வெற்றி மாலையைப் பங்கு போட்டுக் கொள்ளலாம் என்ற கணக்கில் கூட்டணிகளை அமைக்க முயற்சிகள் இடம் பெறுகின்றன.
ஆளும் அதிமுக அணியில் சேர்ந்து ஐந்து இடங்களில் போட்டியிட பாஜக முடிவு செய்து இருக்கிறது. திமுக அணியில் சேர்ந்து 10 இடங்களில் நிற்பது காங்கிரஸ் கட்சியின் ஏற்பாடாக இருக்கிறது. 
இதற்கு முன் நடந்த 2016 சட்டமன்றத் தேர்தலை வைத்துப் பார்க்கையில், அதிமுக வுக்கு 40.8%, திமுகவுக்கு 31.6%, பாமக வுக்கு 5.3%, பாஜகவுக்கு 2.8%, தேமுதிக வுக்கு 2.4%, தமாகாவுக்கு 0.5%, புதிய தமிழகத்துக்கு 0.5% வாக்குகள் கிடைத்தன.
அதிமுக கூட்டணியில் தேமுதிகவும் சேரும் என்றால்,  இந்த 2016 சட்டமன்றத் தேர்தல்  வாக்குகள் வரும்  நாடாளுமன்றத் தேர்தலில் அப்படியே கிடைக்கும் என்றால், அதிமுக அணி 52.3% வாக்குகளைப் பெற்று பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றுவிடும்.
அதேவேளையில், 2016 சட்டமன்றத் தேர் தலில் திமுகவுக்கு கிடைத்த 31.6% வாக்கு கள், காங்கிரசுக்குக் கிடைத்த 6.4% வாக்கு கள், கம்யூனிஸ்ட் (0.8%), கம்யூனிஸ்ட் எம் (0.7%), விடுதலை சிறுத்தைகள் (0.8%), மதிமுக (0.9%) ஆகிய எல்லாவற்றையும் கூட்டினால் 41.2% வாக்குகள்தான் திமுக அணிக்குக் கிடைக்கும். திமுக படுதோல்வி யைச் சந்திக்கும். 
ஆனால் இப்படியே நடக்குமா என்பதுதான் சந்தேகம். இதற்குப் பல காரணங்கள் இருக் கின்றன. சட்டமன்றத் தேர்தலைப் போலவே நாடாளுமன்றத் தேர்தலைப் பார்க்கும் மனப் போக்கு தமிழக வாக்காளர்களிடம் இருக்காது என்பதையே வரலாறு காட்டுகிறது. 
திராவிட பெருந்தலைகள் கருணாநிதி, ஜெயலலிதா இருவருமே இல்லாத நிலையில்  முதலாவதாக இப்போது தேர்தல் நடக்கிறது. 
ஜெயலலிதா மறைவை அடுத்து நடந்த இடைத்தேர்தலில் இரு  திராவிடக் கட்சிகளை யும் வீழ்த்திவிட்ட சசிகலா ஆதரவாளரான தினகரன் இதுவரை தனித்து நிற்கிறார்.
நடிகர் ரஜினிகாந்த் போட்டியில்லை என் றாலும் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் தொடங்கி இருக்கும் கமல்ஹாசன் தனித்து மூன்றாவது அணியை அமைக்கும் வேலை யைச் செய்வதாகத் தெரிகிறது. 
இப்படி ஓர் அணி அமைந்து அதில் தினகரனும் தேமுதிகவும் ஐக்கியமானால் மும்முனைப் போட்டி எற்படக்கூடும். 
இத்தகைய ஒரு சூழல் ஏற்பட்டால் அது திமுக அணிக்குச் சாதகமாகவும் அதிமுக அணிக்குப் பெரும் பாதகமாகவும் ஆகிவிடும் என்று ஒரு கணக்கு சொல்கிறது.  
இருந்தாலும் பல கணக்குகளையும் யார் போட்டாலும் வாக்காளர்கள் போடும் கணக்கு இந்தத் தேர்தலில் வேறுபட்டுதான்  இருக் கும். இதுவரை கருணாநிதி, ஜெயலலிதா போன்ற திராவிடத் தலைவர்களுக்கும் இதர தேர்தல் கால அனுகூலங்களுக்கும் மயங்கி வந்த வாக்காளர்கள், இனி சுயமாக முடிவு செய்வார்கள் என்று கணிக்க இடமுள்ளது.