முரசொலி

ஈன்றோரைப் பேணுதல் சிங்கப்பூரில் இன்னும் வலுவுடன் உள்ளது

சிங்கப்பூரில் நால்வரில் மூவர் தங்கள் பெற்றோருக்கு மாதம் தவறாமல் $300லிருந்து $500 வரை கொடுப்பது இணையம் வழி 1,000 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது.

பெற்றோரைப் பேணுதல் குறித்து முன்னைய தலைமுறைக்கும் அதற்கடுத்த தலைமுறைகளுக்கும் இடையில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்பதை அறிந்துகொள்ள இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

சிங்கப்பூரில் மூன்று வயதுப் பிரிவினரிடம், அதாவது 18லிருந்து 26வரை, 27லிருந்து 42வரை, 43லிருந்து 58வரை ஆகியோரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில் நம்பிக்கை தரும் நற்செய்தி என்னவென்றால், ஈன்றோரைப் பேணுதல் என்பதில் சிங்கப்பூரர்கள் வலுவான எண்ணம் கொண்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. அதனாலேயே அவர்கள் மாதந்தோறும் தங்கள் பெற்றோருக்கென முடிந்த அளவு பணம் கொடுக்கின்றனர் என்று ஆய்வு முடிவுகள் உணர்த்துகின்றன.

பெற்றோர் தங்கள் பிள்ளைகள் நன்கு வளரவேண்டும் என்ற எண்ணத்தில், பிள்ளைகள் சிறுவயதாக இருக்கும்பொழுது அவர்களுக்காக பல தியாகங்கள் புரிவதும் வளர்ந்தபின் பிள்ளைகள் தங்கள் ஈன்றோரைப் பாதுகாப்பது தம் கடமை என நினைத்துச் செயல்படுவதும் சமுதாயம் நீடித்து நிலைத்திருக்க வழிவகுக்கிறது.

காலப்போக்கில் உலகம் மிகவும் போட்டித்தன்மை மிக்கதாகவும் பலருக்குச் சொல்லொணா மனவுளைச்சலைத் தருவதாகவும் மாறியுள்ளது. இப்படிப்பட்ட உலகில், பிள்ளைகள் தங்களை மட்டுமே கவனித்துக்கொள்ள காரண காரியங்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது. ஆனால், அவற்றை ஒதுக்கிவிட்டு, பாரம்பரிய வழக்கம், எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப பெற்றோரைப் பேண எண்ணுவது உண்மையிலேயே மனத்திற்கு இதந்தருவதாக உள்ளது.

இது ஒருபுறம் இருக்க,பெற்றோருக்குப் பணம் கொடுக்காத பிள்ளைகளுக்கு பெற்றோர்மீது பாசம், அக்கறை இல்லை என்றும் கூறிவிட முடியாது. பெற்றோருக்குப் பணம் கொடுப்பதில் மூன்று அம்சங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். பெற்றோர் தேவை, பிள்ளைகளின் நிதிச் சுமை, பிள்ளைகளிடமிருந்து பண உதவி எதிர்பார்க்கும் பெற்றோர் ஆகியவற்றைப் பொறுத்தது.

பல சமயங்களில் நல்ல நிதி நிலைமையில் இருக்கும் பெற்றோர், தங்கள் பிள்ளைகளுக்கு தேவையில்லாத நிதிச் சுமையை ஏற்படுத்த விரும்புவதில்லை. நிச்சயமற்ற பொருளியல் சூழல், வேலைச் சந்தையில் நிலவும் ஏற்ற இறக்கம் போன்றவையும் பிள்ளைகள் பெற்றோருக்கு உதவி அளிப்பதில் சிரமத்தை ஏற்படுத்துகின்றன.

அதனால், எந்தவொரு தலைமுறையினரையும் ஈன்றோரைப் பேணுதலில் குறைசொல்ல முடியாது. பெற்றோரைப் பேணிப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம், சிங்கப்பூரில் பெருவாரியாக இருக்கும்வரை கவலைப்படத் தேவையில்லை.

பெற்றோரைப் பாதுகாப்பதற்கு ஏற்படுத்தப்பட்ட சட்டம் வழிதவறிச் செல்லும் பிள்ளைகளை நல்வழிப்படுத்த உருவானது. அது தங்களைப் பராமரித்துக் கொள்ள முடியாத பெற்றோருக்கு, ஈன்றோருக்கு உதவி செய்ய முடிந்தும் அவர்களைக் கவனிக்காத பிள்ளைகளைக் குறிவைத்து இயற்றப்பட்டது. அதன்படி, 60 வயதைத் தாண்டிய, தங்களை பராமரிக்க வழியில்லாத சிங்கப்பூரர்கள் பிள்ளைகளிடம் இருந்து நிதியுதவி பெற வழிவகுக்கிறது.

சட்டப் பாதுகாப்பு பெற்றோருக்கு அவசியமே! ஆனால், அது ஒருபுறமிருக்க, தாங்கள் வாழ்க்கையில் அடியெடுத்து வைத்து இவ்வளவு தூரம் முன்னேறியிருப்பது பெற்றோரால்தான் என்பதை பிள்ளைகள் உணர்வது நல்லது.

அந்த உணர்வுடன் பிள்ளைகள் அனைவரும் ‘மாதா, பிதா, குரு, தெய்வம், அவர் மலரடி தினம் தினம் வணங்குதல் செய்வோம்’ என்ற பாட்டு வரிகளை நினைவில்கொள்வதும் நன்மை அளிக்கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!