சக்தி கொடுக்கும் ‘சக்தி’  

திருமதி லைனி அஜையன் (ஸ்ரீதேவி), 43, வேலைசெய்யும் வீட்டில் ஆங்கிலமே புழங்குகிறார்கள். 12 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு வேலைக்கு வந்தபோது அந்தக் குடும்பத்தாருடன் சரியாக, சரளமாக பேச முடியாமல் சிரமப்பட்டார் ஸ்ரீதேவி.

“எனக்கு ஓரளவு ஆங்கிலம் புரியும், ஆனால் பேசத் தெரியாது. சொன்னதைச் செய்துவிடுவேன். உணவு, தண்ணீர், விளையாட்டுப் பொருள் கேட்டால் எடுத்து கொடுப்பேன், ஆனால் பதில் சொல்லமாட்டேன்,” என்றார் ஸ்ரீதேவி.

இல்லப் பணிப்பெண்களுக்கு இலவசமாக நடத்தப்படும் ‘வுமன் ஆஃப் சக்தி’ (சக்தி) அமைப்பின் ஆங்கிலப் பாட வகுப்புகளைப் பற்றி நண்பர்கள் மூலம் அறிந்த ஸ்ரீதேவி, ஓராண்டுக்கு முன் அந்த வகுப்பில் சேர்ந்தார். இப்போது அவர் ஆங்கிலத்தில் தயக்கமின்றி உரையாடுகிறார். வீட்டில் உள்ள சிறுவருக்கு ஆங்கிலப் பாடம் கற்றுக்கொடுக்கும் அளவுக்கு அவர் முன்னேற்றம் அடைந்துள்ளார்.

ஆங்கில வாக்கியங்களை அமைக்கும் திறன் மேம்பட்டுள்ளது என்றும் கடைக்குச் சென்று மளிகைப் பொருட்கள் வாங்குவது, வேறு இனத்தவர்களோடு பேசு வது போன்ற தினசரி நடவடிக்கை கள் மேலும் எளிதாகியுள்ளது என்றும் குறிப்பிட்டார் ஸ்ரீதேவி.

சென்ற ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட சக்தி அமைப்பு ஒவ்வொரு மாதமும் முதல், மூன்றாம் ஞாயிற்றுக் கிழமைகளில் வெளிநாட்டுப் பணிப்பெண்களுக்கு ஆங்கிலப் பாட வகுப்புகளை நடத்துகிறது.

இந்த அமைப்பின் நடவடிக்கைகளால் ஸ்ரீதேவி உட்பட இந்தியாவையும் இலங்கையையும் சேர்ந்த 35 வெளிநாட்டுப் பணிப்பெண்கள் பயனடைகிறார்கள். அந்தக் குழுவை வழிநடத்துபவர்களில் ஒருவராகவும் பொருளாளராகவும் இருக்கிறார் ஸ்ரீதேவி.

இந்த அமைப்பு தொண்டூழியர்களால் தொடங்கப்பட்டது. 25 வயதான குமாரி அ.ஆர்த்தி, 29 வயதான குமாரி வைஷ்ணவி நாயுடு ஆகிய இருவரும் ஆங்கிலப் பாட ஆசிரியர்களாக சேவையாற்றி வருகின்றனர்.

“ஏறத்தாழ 20 ஆண்டுகளாக பணிப்பெண்ணுடன் வளர்ந்தேன். அவரை என் தாயார் போன்று பார்க்கிறேன். அவர் 15 வயதில் திருமணம் செய்து 28 வயதில் சிங்கப்பூருக்குப் பணிபுரிய வந் தார். அப்போது அவர் எதிர்நோக்கிய பிரச்சினைகள் இன்றும் நம் சமுதாயத்தில் பரவலாக இருக்கின்றன,” என்றார் ஆர்த்தி.

பல்கலைக்கழகத்தில் படித்து வரும் ஆர்த்தி தென்னிந்தியப் பணிப்பெண்களை மையமாகக் கொண்ட ஆராய்ச்சியில் ஈடுபட்டு உள்ளார்.

அதற்காக சில பணிப்பெண்களைப் பேட்டி கண்டபோது அவர்களது சிரமங்களை அறிந்து கொண்டார் ஆர்த்தி.

அவர்களுக்கு உதவும் நோக்கத்தில், ஆர்வமுள்ள சில தொண்டூழியர்களை இணைத்தார். அமைப்பில் உறுப்பினர்களாக இணைந்த பணிப்பெண்கள் அமைப்பை வளர்த்தனர். தொண்டூ ழியர்கள் மற்றும் உறுப்பினர்களின் கூட்டு முயற்சியால் ‘வுமன் ஆஃப் சக்தி’ அமைப்பு தற்போது வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது.

“சக்தி அமைப்பு பல விதங்களில் வெளிநாட்டுப் பணிப்பெண்களுக்கு உதவி வந்தாலும், பல பணிபெண்களுக்கு ஓய்வு நாள் கிடைக்காமல் போவதும் உண்டு. பணிப்பெண்ணை வெளியே அனுப்ப அச்சங்கொள்ளும் முத லாளிகளுக்கு, இத்தகைய ஒரு பாதுகாப்பான அமைப்பு நல்ல ஊக்குவிப்பாக இருக்கும்,” என்றார் ஆர்த்தி.

தொடக்கத்தில் வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்களுக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுக்கும் நோக்கத்தில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு தற்போது கலை, இலக்கியம், ஆரோக்கியம், சட்டமும் உரிமையும் குறித்த விழிப்பு உணர்வு, சமூகமும் சமூகநலமும், ஆராய்ச்சியும் பரிந்துரைப்பும் போன்ற அம்சங்களில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்து வருகிறது.

“ஆங்கிலம் கற்பதுடன் அமைப்பின் பெண்களுக்கு மற்ற நடவடிக்கைகளிலும் ஆர்வம் இருப்பதை அறிந்தோம். அதைப் பூர்த்திசெய்ய மேலும் 5 பிரிவுகளை உருவாக்கினோம்,” என்றார் வைஷ்ணவி.

வெவ்வேறு நிகழ்ச்சிகளை நடத்த அவ்வப்போது மற்ற தொண்டூழியர்களும் உதவுகின்றனர்.

உதாரணத்திற்கு, மருத்துவர்களான நந்தினி ஸ்ரீநிவாசனும் இளம்பிறை இளங்கோவனும் நீரிழிவு, புற்றுநோய், மனநோய் ஆகியன குறித்த சுகாதாரப் பயிலரங்குகளை நடத்தியுள்ளனர்.

“இதற்கு முன் பெரும்பாலும் கோயிலுக்குச் செல்வது, தேக்கா பகுதிக்குச் சென்று பொருட்கள் வாங்குவது, சாப்பிடுவது என்று நாள் கழிந்துவிடும். பயனுள்ள வழியில் நேரத்தைச் செலவிட வாய்ப்புகள் கிடைத்ததில்லை. ஆனால் இப்போது சக்தி அமைப்பின் வகுப்புகளுக்கும் நிகழ்வுகளுக்கும் செல்வது எனக்கு பயனுள்ளதாக இருக்கிறது, பல நண்பர்கள் கிடைத்துள்ளனர். நான் பங்கேற்கும் வகுப்புகளில் எடுக்கும் படங்களையும் காணொளிகளையும் நான் வேலைபார்க்கும் குடும்பத்தாரிடம் காட்டுவேன். அவர்களும் என்னை ஊக்குவிக்கிறார்கள்,” என்றார் கடந்த 14 ஆண்டுகளாக சிங்கப்பூரில் பணிப்பெண்ணாக பணிபுரியும் திருமதி சாந்தி குருமூர்த்தி, 46.

அமைப்பு தொடங்கியதிலிருந்து ஆங்கில வகுப்புகளை நடத்தும் மற்றொரு தொண்டூழியர் குமாரி சிந்தூரா காளிதாஸ், 30. ஆங்கில துணைப்பாட ஆசிரியரான இவர், பெரும்பாலும் இளையர்களுக்கு கற்றுத் தருகிறார்.

“பிறந்ததிலிருந்து ஆங்கிலம் பயன்படுத்தும் மாணவர்களுக்கு கற்றுக் கொடுப்பதற்கும் அடிப்படை ஆங்கிலம் தெரியாமல் இருக்கும் பணிப்பெண்களுக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுப்பதிலும் பெரும் வித்தியாசம் உண்டு. இருப்பினும் அந்தச் சவாலை ஏற்றுக்கொண்டு பாடம் நடத்துகிறேன்.”

“இந்த வகுப்புகளில் அன்றாடப் பயன்பாட்டுக்குத் தேவையான ஆங்கிலத்தைக் கற்றுத்தருகிறோம். வாக்கிய அமைப்பு சரியாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. ஆனால் அவர்கள் பேசும் ஆங்கிலம் மற்றவருக்குப் புரிய வேண்டும். அந்த வகையில் இந்தப் பெண்கள் பெருமளவில் முன்னேற்றம் கண்டுள்ளனர். கற்க இன்னும் அதிகம் இருந்தாலும் அடிப்படை அளவில் ஆங்கிலத்தைப் பயன்படுத்தும் ஆற்றலைப் பெற்றுள்ளார்கள்,” என்றார் குமாரி சிந்தூரா.

‘வுமன் ஆஃப் சக்தி’ அமைப்பிற்குப் பக்கபலமாக, குடியேறிகளின் பொருளியல் நிலைக்கான மனிதாபிமான அமைப்பு (ஹோம்), தேசிய தொண்டூழியர்கள் கொடை நிலையத்தில் (என்விபிசி) அமைந் திருக்கும் ‘எ குட் ஸ்பேஸ்’, ‘ஐடா’ என்ற அறநிறுவனம், இந்திய மரபுடைமை நிலையம், ‘சிங்லிட் ஸ்டேஷன்’ ஆகிய அமைப்புகள் ஆதரவளிக்கின்றன.

“ஹோம் அமைப்பின்கீழ் சக்தி அமைப்பு அங்கீகரிக்கப்பட்டு உள்ளது. ஹோம் அமைப்பின் இலக்குகளோடு இணைந்து நாங்கள் செயல்படுகிறோம். ‘எ குட் ஸ்பேஸ்’ அமைப்பின் உதவியால் கற்றலுக்கு ஏற்ற வகுப்பறை வசதி கிடைத்துள்ளது. இவர்களைப் போன்ற பங்காளிகளால்தான் எங்களால் தொடர்ந்து இயங்க முடிகிறது,” என்று விளக்கினார் ஆர்த்தி.

இந்த அமைப்பைத் தொண்டூழியர்கள் தொடங்கியிருந்தாலும் பல நடவடிக்கைகளை அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்களே ஏற்பாடு செய்கிறார்கள் என்றும் எதிர்காலத்தில் இந்த அமைப்பு தன்னிச்சையாகச் செயல்பட திட்டங் கள் வகுத்து வருவதாகவும் விளக்கினார் வைஷ்ணவி.

“இந்தோனீசியா, பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பணிப்பெண்களுக்கு சிங்கப்பூரில் பல உதவிக் குழுக்கள் உள்ளன. பணிப்பெண்களே சொந்த முயற்சியில் அவற்றை ஏற்பாடு செய்வதுண்டு. அவர்கள் சரளமாக ஆங்கிலம் பேசுவது இதற்கு முக்கிய காரணம். ஆனால் தென்னிந்தியப் பணிப்பெண்களில் பலருக்கு ஆங்கிலம் தெரியாது. அத்துடன் அவர்கள் வெவ்வேறு மொழிகளைப் பேசுகின்றனர். தற்போது இதுபோன்ற குழுவை நிர்வகிக்க தொண்டூழியர்கள் அவசியம் தேவை,” என்றார் வைஷ்ணவி.

“தொண்டூழியர்களின் உதவியின்றி இயங்கும் ஓர் அமைப்பாக அமைய வேண்டும் என்பது எங்களது இலக்கு. இந்த அமைப்பின் நடவடிக்கைகளை அதன் உறுப்பினர்களாக இருக்கும் பணிப்பெண்களே நடத்தும் முயற்சிகள் தொடர்ந்தால் நீண்டகாலத்திற்கு இந்த அமைப்பு நிலைத்திருக்கும். நாம் உதவும் பெண்களின் எண்ணிக்கை சிறிதளவுதான். மேலும் பல பெண்கள் இந்த அமைப்பில் சேர்ந்து பயனடைய வேண்டும்,” என்றார் வைஷ்ணவி.

சில புள்ளிவிவரங்கள்...

* சிங்கப்பூரில் கிட்டத்தட்ட 250,000 வெளிநாட்டு இல்லப் பணியாளர்கள் வேலை பார்க்கிறார்கள்.

* 2017ல், சிங்கப்பூரில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களில் பெண்களின் விகிதம் 55.9%ஆக இருந்தது.

* அண்மையில் வெளிநாட்டு பெண் ஊழியர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், 20% பெண்கள் தனிமை உணர்வை வெளிப்படுத்தியுள்ளனர் என்று கண்டறியப்பட்டது.

* அளவிற்கு அதிகமாக வேலை வாங்குவது, தரக்குறைவாக திட்டுவது, சம்பளம் குறித்த சர்ச்சைகள் ஆகியவை வெளிநாட்டுப் பணிப்பெண்கள் எதிர்நோக்கும் மூன்று முக்கிய பிரச்சினைகள் என்று ஹோம் கண்டுபிடித்துள்ளது.

* சிங்கப்பூர் வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், 24% ஊழியர்களுக்கு குறைந்த மன ஆரோக்கியம் இருப்பது, 51% ஊழியர்கள் தரக்குறைவான பேச்சை எதிர்கொள்வது, 40% ஊழியர்களுக்கு வாரத்திற்கு ஒரு நாள்கூட ஓய்வு கிடைக்காமல் இருப்பது ஆகிய குறைபாடுகள் கண்டறியப்பட்டன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!