தனித்த அடையாளத்துடன் சிங்கப்பூர் தமிழ் நாடகம்

சிங்கப்பூர் நான்கு மொழி, கலாசார சூழலில் தமிழ் நாடகத் துறையின் வரலாற்றையும் வளர்ச்சியையும் ஆவணப்படுத்துவதுடன் எதிர்காலம் குறித்து சிந்திக்கும் நோக்கத்திலும் ‘நாடகவாதி - நாடகமும் நாப்பழக்கமும்’ என்ற கருத்தரங்கை அகம் மேடைநாடக அமைப்பும் (AGAM Theatre Lab) அனைத்து கலாசார நாடகப் பள்ளியும் (Intercultural Theatre Institute) இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

சிங்கப்பூரில் தொடர்ந்து நாடகங்கள் மேடையேற்றப்படுகின்றன. இந்நாட்டில் நாடகத்துக்கான தேவை என்ன, இத்துறையின் எதிர்காலம் என்ன, மேலும் எவ்வாறு சுவாரசியமான முறையில் நாடகங்களைப் படைக்கலாம் போன்றவற்றை அறிந்துகொள்வதற்காக இந்தக் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டதாகத் தெரிவித்தார் இந்தப் புதிய அமைப்பின் நிறுவனரான திரு சுப்பிரமணியம் கணேசன், 34.

மூத்த நாடகக் கலைஞர் திரு இரெ. சோமசுந்தரம், பிரபல நாடகக் கலைஞர்களான திரு வடிவழகன் PVSS, குமாரி கிரேஸ் கலைச்செல்வி, கலைத்துறை விரிவுரையாளர் திரு ரத்தினவேல் சண்முகம் ஆகியோர் சிங்கப்பூரின் தமிழ் நாடகம் குறித்த பல்வேறு பரிமாணங்களை கருத்தரங்கில் பகிர்ந்துகொண்டனர்.

‘மூத்த குடிமக்களுக்கு மேடைநாடகத்தின் தேவை’ என்பது பற்றிப் பேசிய கலைத் துறையில் 54 ஆண்டு அனுபவம் பெற்ற 72 வயது திரு சோமசுந்தரம், அனுபவம் மிக்க மூத்த குடிமக்களை கலைத்துறையில் ஈடுபடுத்துவது அவர்களுக்கும் சமூகத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.

"இளையர்களுடன் சேர்ந்து கலைப் படைப்புகளை முதியவர்கள் படைக்கும்போது, அனுபவமும் புதிய திறன்களும் ஒன்றிணையும். அதனால் படைப்புகள் மேலும் சிறப்படையும். மூத்த குடிமக்களின் ஓய்வுக் காலத்தைப் பயனுள்ள வழியில் கழிக்கவும் இது உதவும். முதியவர்களுக்கான ஒரு கலை அமைப்பு உருவாக்க வேண்டும்," என்றார் அவர்.

மூத்த குடிமக்களின் பிரச்சினைகளையும் தேவைகளையும் பேசவும் கலைகள் தளமாக அமையும். அவர்களை மையமாகக் கொண்ட நாடகங்கள், கலைகளை உருவாக்க வேண்டும் என்றும் திரு சோமசுந்தரம் கூறினார்.

தமிழ் நாடகக் குழுக்களிடம் இருமொழிப் படைப்பு முக்கியவத்துவம் பெற்று வருவது குறித்துப் பேசிய குமாரி கிரேஸ் கலைச்செல்வி, அதனால் ஏற்படும் பயன்களை விளக்கினார்.

மற்ற மொழி பேசுபவர்களிடம் தமிழ் நாடகங்கள் சென்றடைய இந்த இருமொழி நாடகங்கள் உதவுகின்றன. ஆங்கிலத்தில் நாடங்களை மேடையேற்றும்போது, நமது சமூகம் பற்றி மற்ற இனத்தவர்களும் புரிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக அமையும் என்றார் அவர்.

சிங்கப்பூர் தமிழ் நாடகத்திற்கு தனி அடையாளம் உண்டு. நீண்ட வரலாற்றைக் கொண்ட சிங்கப்பூர் தமிழ் நாடகத் துறை. தமிழில் பலதரப்பட்ட, பல வகைமைகளில் நாடகங்கள் மேடையேற்றப்பட்டு வருகின்றன என்று குறிப்பிட்டார் பண்பட்ட நாடகக் கலைஞரான திரு வடிவழகன்.

தமிழ் நாடகம் என்பதும் தமிழில் நாடகம் என்பதும் வெவ்வேறானவை. தமிழ் மரபின் அடிப்படையில் படைக்கப்படுவது தமிழ் நாடகம் என்ற அவர், சீனம், மலாய், ஆங்கில நாடகங்களின் தாக்கம், குறிப்பாக, கோ பாவ் கூன் போன்ற முன்னோடிக் கலைஞர்களின் தாக்கம் சிங்கப்பூர் தமிழ் நாடகங்களுக்கு உண்டு என்றார்.

இத்துறையின் வளர்ச்சி தொடரும் என்பதற்கு இதில் ஈடுபாடுகொள்ளும் இளையர்களின் எண்ணிக்கையும் அவர்களது ஆர்வமும் சான்று என்ற அவர், சிங்கப்பூர் சார்ந்த கதைகளைச் சொல்ல மறந்துவிடக்கூடாது என்பதை வலியுறுத்தினார்.

"நமக்கென்று ஒரு வாழ்க்கைமுறை இருக்கிறது. நமது சமுதாயம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் உள்ளன. அவை குறித்து நம் நாடகங்கள் பேச வேண்டும்," எனக்கூறினார் திரு வடிவழகன்.

அத்துடன் நாடகத்துறைக்கு ஊடகங்களின் ஆதரவும் ஆவணப்படுத்தலும் அவசியம்.

தேசிய கலைகள் மன்றம் போன்ற நிதியாதரவு வழங்கும் அமைப்புகள் தமிழ் மேடை நாடகத் துறையில் நடப்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும் எனவும் திரு வடிவழகன் குறிப்பிட்டார்.

“இளைய தலைமுறையினர் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழி வடிவங்களிலும் அனைத்துச் சமூகத்தினரையும் ஒருங்கிணைத்து ஒரு புதிய சகாப்தத்தை தொடங்கியுள்ளனர்," என்று கூறினார் கருத்தரங்கில் பங்கேற்ற சிங்கப்பூரின் கலைத்துறையிலும் ஊடகத்துறையிலும் புகழ்பெற்ற கலைஞரான திரு எஸ்.எஸ்.சர்மா.

பல தலைமுறைகளைச் சேர்ந்த கலைஞர்களும் கருத்தரங்கில் கலந்துகொண்டு தமிழ் நாடகத்துறையின் எதிர்காலம் குறித்து கலந்துரையாடினர்.

இக்கருத்தரங்கை நடத்தவேண்டும் என்ற சிந்தனையை முன்வைத்த கலாசார நாடகப் பள்ளியின் இயக்குநரும் துணை நிறுவனருமான திரு டி.சசிதரன், தமிழ் நாடகங்கள் சிங்கப்பூர் வரலாற்றில் முக்கிய இடம்பிடித்துள்ளன என்றும் சிங்கப்பூரின் சமூக மேம்பாட்டிற்கு தமிழ் நாடகங்கள் முக்கிய பங்கு வகித்துள்ளன என்றும் கூறினார்.

சிங்கப்பூர் தமிழ் நாடகத்துறை குறித்து தொடர்ந்து இடம்பெற்று வரும் கருத்தரங்குகளின் தொடர்ச்சியாக அமைந்த இந்தக் கருத்தரங்கில் பகிரப்பட்ட கருத்துகள் தேசிய கலைகள் மன்றத்திடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் கூறினார் திரு கணேசன்.

இந்த ஆவணம் நூலகங்களிலும் கல்வி நிலையங்களிலும் இடம்பெறலாம் என்றும் நம்பிக்கை தெரிவித்தார் 15 ஆண்டுகளாக மேடை நாடகத் துறையில் ஈடுபட்டு வரும் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!