தலைமுறைகளாகத் தொடரும் ஆசிரியர் பணி

வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற தமிழாசிரியர் திரு சு.நல்லுராஜின் குடும்பத்தினர் பல தலைமுறைகளாகக் கற்பித்தல் துறையில் ஈடுபட்டு வருகின்றனர். 

தமது தந்தை திரு நல்லுராஜ் விருது பெறுவதையும் தமிழ்மொழி துறையில் பங்காற்றிய முன்னோடித் தலைமுறையினரை நினைவுகூரும் காணொளியில் தமது தாத்தாவான காலஞ்சென்ற திரு ரா.சுப்பையா நாயுடு அங்கீகரிக்கப்படுவதையும் கண்டுகளித்தார் திரு நல்லு தினகரன், 32. 

“குடும்பத்தில் மூன்றாவது தலைமுறை ஆசிரியராக இருக்க பெருமையாக உள்ளது. என் தாத்தாவும் தந்தையும் எனக்கு முன்

மாதிரியாக இருக்கிறார்கள். என் பணியை மேம்படுத்துவதற்கு அவர்களின் அறிவுரைகள் எனக்குப் பயனளித்துள்ளன,” என்றார் ஐந்து ஆண்டுகளாக புவியியல் துறையில் ஆசிரியராகப் பணியாற்றி வரும் திரு நல்லு தினகரன்.  

திரு நல்லு தினகரனின் மனைவி திருமதி துர்கா தேவியும் ஆசிரியராகப் பணியாற்றுகிறார். 

“ஆசிரியர் தொழில் என்பது சமூகத்திற்கு ஆற்றும் ஒரு தொண்டு என்று எனது தந்தை எப்போதுமே வலியுறுத்துவார். 

“நாங்கள் பெறும் சம்பளத்தைவிட அடுத்தடுத்த தலைமுறை யினரை உருவாக்கும் பொறுப்புதான் மனதிற்கு நெகிழ்ச்சி தருகிறது,” என்றார் ஆசிரியர் தினகரன்.

புவியியல் துறையில் சிறந்து விளங்க சொந்த முயற்சி எடுத்து ஆராய்ச்சி செய்வது, நூல்கள் வாசிப்பது போன்ற உத்திகளைக் கையாள தமது தந்தை தமக்கு அறிவுறுத்தியதாக திரு தினகரன் கூறினார்.

“இரு வாரங்களுக்கு முன்பு எனது தந்தை வீட்டு அறை ஒன்றில் உள்ள பொருட்களை அப்புறப்படுத்தும்போது கற்பித்தலுக்கு உதவும் சில வளங்களை நான் வாசிப்பதற்காக ஒதுக்கிவைத்தார்,” என்றார் அவர்.

தம் தந்தையின் ஊக்கத்தால் அடுத்த ஆண்டு தாம் முதுகலைப் பட்டப் படிப்பை மேற்கொள்ள போவதாகத் தெரிவித்தார் திரு நல்லு தினகரன்.
 

Loading...
Load next