பொன் சுந்தரராசுவின் வாழ்க்கைப் பயணம் நூல்வெளியீடு

உள்ளூர்த் தமிழ் எழுத்தாளர் பொன் சுந்தரராசுவின் வாழ்க்கை வரலாற்று நூல் இம்மாதம் 1ஆம் தேதி வெளியிடப்பட்டது. ஆங்கில மொழியில் அமைந்த அந்நூல் தேசிய நூலக வாரிய அரங்கில் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் ஏற்பாட்டில்  நடைபெற்றது.

‘டிஸ்லெக்சியா’ உடற்குறையுடைய பள்ளி மாணவர்களின் நடனத்துடன் தொடங்கிய நிகழ்ச்சியில் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் செயலாளர் திருமதி கிருத்திகா வரவேற்புரை நிகழ்த்தினார். லீ குவான் இயூ பொதுக் கல்விக் கழகத்தின் சார்பு நிலை விரிவுரையாளர் திரு கே. கேசவபாணி முதன்மையுரையாற்றினார். அவர் தம் உரையில், “இந்நூல் வெளியீட்டின் மூலம் ஈட்டப்படும் தொகையில் பெரும்பகுதி, சிங்கப்பூர் ‘டிஸ்லெக்சியா’ சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கப்படும். அத்தொகை தமிழ்ப் படிப்பதில் சிரமத்தை எதிர்நோக்கும் பிள்ளைகளுக்கு உதவிபுரிவதற்கான ஆய்வுக்குப் பயன்படுத்தப்படும். 

“ஒரு சிறிய தொகை எழுத்தாளரின் துணைவியார் தமிழ்நாட்டில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்களுக்குச் செலவிடக் கொடுக்கப்படும்,” என்று அறிவித்தார்.

சிங்கப்பூர்ப் பல்கலைக்கழக இலக்கியப் பிரிவின் தலைவர் இணைப் பேராசிரியர் சித்ரா சங்கரனின் வாழ்த்துரையும் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் துணைத் தலைவர் திரு நா ஆண்டியப்பனின் நூல் பற்றிய கருத்துரையும் இடம்பெற்றன. 

பின்னர், சிறப்பு விருந்தினரான திரு ஆர் தினகரனின் சிறப்புரைக்குப் பின்னர் அவர் நூலை வெளியிட திரு கேசவபாணி முதல் நூலைப் பெற்றுக் கொண்டார். இறுதியில் நூலாசிரியர் திரு பொன் சுந்தரராசு ஏற்புரையாற்றினார். 

இந்த நூல் வெளியீட்டன்று கிடைத்த $6,000யுடன் நல்லுள்ளம் கொண்டோர் அளித்த நன்கொடையையும் சேர்த்து மொத்தம் $19,000 நிதி திரட்டப்பட்டது. 

செலவு போக எஞ்சிய தொகை $10,000. அதில் சிங்கப்பூர் ‘டிஸ்லெக்சியா’ சங்கத்திற்கு $8,000மும் ஆதரவற்ற குழந்தைகளின் உதவிக்கு $2,000மும் ஒதுக்கப்பட்டது என்று கூறிய திரு பொன் சுந்தரராசு, நூல் வெளியீட்டின் மூலம் கிடைத்த தொகை அறச்செயல்களுக்குப் பயன்பட்டதை எண்ணி மகிழ்வதாகக் குறிப்பிட்டார்.