35 சிறார்கள் முதல்நிலை ஊழியர்களுக்கு நடன அர்ப்பணிப்பு

கிருமிப் பரவலால் பலரின் உணர்வுகள் தளர்த்தப்பட்டுள்ள இந்த நேரத்தில் மனம் தளராமல் கலைகளைத் தொடர்ந்து பயின்று வருகிறார்கள் ஸ்ரீ செண்பக விநாயகர் கோயில் இசை மற்றும் நடன கழகத்தைச் சேர்ந்த சிறுவர்கள்.

முதல்நிலை துறை ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வண்ணம் ஓர் நடன காணொளியை நடன ஆசிரியர் திருமதி மஞ்சு ராஜே‌ஷ் 35 சிறுவர்களை வைத்து தயாரித்துள்ளார்.

ஐந்து முதல் ஒன்பது வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் ஆடிய இந்தக் காணொளி ஏறக்குறைய மூன்று வாரங்களுக்கு முன் ‘ஃபேஸ்புக்’, ‘யூடியூப்’ ஊடகங்களில் பதிவு செய்யப்பட்டது. ‘ஃபேஸ்புக்’கில் இந்தக் காணொளி கிட்டத்தட்ட 4,500 முறைகள் பார்வையிடப்பட்டுள்ளன.

‘சைவம்’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற ‘அழகே அழகே’ என்ற பாடலுக்கு திருமதி மஞ்சு வடிவமைத்த நடன அமைப்புக்கு சிறுவர்கள் நடனமாடினார்கள்.

“இந்த நோய்க் கிருமித் தொற்று காலங்களில் முதல்நிலை துறை ஊழியர்களின் பங்கு பெரிதும் பாராட்டப்பட்டது. அவர்களுக்கென ஒரு படைப்பை அர்ப்பணிக்க விரும்பினோம். உலகத்தில் உள்ள அனைத்துமே அழகு என்ற அர்த்தம் கொண்டுள்ள ‘அழகே அழகே’ பாடலை இந்த படைப்புக்குத் தேர்வு செய்தோம்,” என்றார் மஞ்சு, 38.

காணொளியை எடுக்க இரண்டு நாட்கள், தயாரிப்புக்கு இரண்டு நாட்கள் என ஏறத்தாழ நான்கு நாள் முயற்சியில் காணொளியைத் தயாரித்ததாக குறிப்பிட்டார் மஞ்சு.

“வழக்கமாக மேடையில் நடனம் படைப்பதுடன் முடிந்துவிடும். இந்த புதிய முயற்சிக்கு சில நொடிகள் மட்டுமே ஆடவேண்டி இருந்தாலும், காணொளியாக தயாரிப்பதால் அது தவறில்லாமல் செய்யவேண்டிய கட்டாயம் இருந்தது.

“கடினமாக இருந்தாலும் இறுதியில் வெளியிடப்பட்ட காணொளி எங்களுக்கு நிறைவைத் தந்தது. சமூக ஊடகத்தில் பலரும் அதைப் பார்த்து, பாராட்டியது எங்கள் முயற்சிகளுக்குக் கிடைத்த பலன்,” என்றார் நான்கு ஆண்டுகளாக நடனம் கற்று வரும் ஹாசினி ராஜ்பாபுவின், 7, தந்தையான

திரு ராஜ்பாபு திருச்சி சிவகுமார், 35.

ஸ்ரீ செண்பக விநாயகர் கோயில் இசை மற்றும் நடன கழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக நடனம் கற்றுக்கொடுத்து வரும் திருமதி மஞ்சுவிற்கு தற்போது கிட்டத்தட்ட 80 மாணவர்கள் உள்ளனர். தொடர்ந்து இக்கழகத்தின் வகுப்புகள் இணையம்வழி நடத்தப்பட்டு வருகின்றன. ஃபேஸ்புக்: https://www.facebook.com/ 100003106689749/posts/2891064684340393/?d=w

யூடியூப்: https://youtu.be/iVs848tahuA