சிறந்த சீருடை அதிகாரிகளுக்கு அங்கீகாரம்

சிங்கப்பூர் பாதுகாப்புடன் இருப்பதை உறுதி செய்யும் உள்துறை அமைச்சின் சீருடைக் குழுக்களைச் சேர்ந்த சிறந்த அதிகாரிகளுக்கு ஒவ்வோர் ஆண்டும் விருதுகள் வழங்கப்படுகின்றன.

இவ்வாண்டு ஐந்து பிரிவுகளில் 777 பேருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் விருது பெற்ற இருவர் தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கின்றனர்.

சிறு வயதில் தாம் குடியிருந்த வீடமைப்புப் பேட்டையில் போலிஸ் அதிகாரிகள் கடமையாற்றுவதை ஆர்வத்துடன் பார்த்த 47 வயது திரு பாலமுருகன் பத்மநாதன்,

வருங்காலத்தில் தாமும் ஒரு போலிஸ் அதிகாரியாகப் பணியாற்ற ஆசைப்பட்டார்.

கடந்த 26 ஆண்டு களாக சிறந்த முறையில் ஆற்றிய சேவைக்கு வெகுமதியாக நீண்டகால சேவை விருது இவருக்குக் கிடைத்துள்ளது.

சொந்தத் தொழில் செய்துவந்த தமது தந்தை, கட்டொழுங்குடன் தம்மை வளர்த்ததாகக் கூறிய திரு பாலமுருகன், சமூகப் பணிகளில் சேர ஊக்குவித்ததாகவும் கூறினார்.

“நான் பயின்ற குவீன்ஸ்டவுன் தொடக்கப் பள்ளியில் சட்டாம் பிள்ளையாக இருந்தேன், காற்பந்து, ஹாக்கி போன்ற விளையாட்டுகளிலும் ஈடுபட்டேன். அப்போதிலிருந்தே என் வருங்காலத்திற்கான நல்ல அடித்தளம் உருவானது,” என்றார் இரண்டு சகோதரர்களுடனும் ஒரு சகோதரியுடனும் பிறந்த திரு பாலமுருகன்.

போலிஸ் அதிகாரிகளுக்கு, குறிப்பாக சிங்கப்பூர் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கொடுக்கும் மரியாதையே இவருக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

பிரச்சினைகளைக் கையாளும் திறன், நீக்குப்போக்கான அணுகுமுறை தலைமைத்துவம், சரியாக முடிவெடுத்தல் போன்ற பண்புகளை தமது பணியின் மூலம் வளர்த்துக்கொண்டதாகத் தெரிவித்தார்.

இரு பிள்ளைகளுக்குத் தந்தையான திரு பாலமுருகன் தற்போது பீஷான் அக்கம்பக்க போலிஸ் மையத்தின் கீழ் இயங்கும் சமூக குற்றக் கண்காணிப்புப் பிரிவின் தலைவராக உள்ளார்.

மிக முக்கிய பிரமுகர்களுக்கு மெய்காவல் வழங்கும் பிரிவில் முன்பு பணியாற்றிய திரு பாலமுருகன், சிங்கப்பூரின் முதல் பிரதமர் அமரர் லீ குவான் இயூ, தென்னாப்பிரிக்கவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா, புருணை சுல்தான் ஹசனல் போல்கியா, கம்போடிய மன்னர் நோரோடோம் சிஹானுக் போன்றோருடன் உறவாடுவதற்கான வாய்ப்பைப் பெற்றதாகவும் கூறினார்.

“நான் சாதாரணமாக இவர்களுடன் பேச முடியாது. விவரம் தெரிந்து பேசவேண்டும். இதற்காகவே நான் காலையில் ஒரு மணி நேரத்திற்கு முன்கூட்டியே எழுந்து செய்தித்தாள் வாசிப்பேன்,” என்று அவர் நினைவுகூர்ந்தார்.

விருது கிடைத்தது குறித்து மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும் மக்களுக்கு மிக உபயோகமான இந்த வேலையைத் தொடர்ந்து சிறப்பாக செய்ய தமக்குக் கிடைத்த விருது ஊக்கமளிப்பதாகவும் இவர் கூறுகிறார்.

ரவிச்சந்திரன் ராமு

போதைப் பொருள் புழக்கத்திற்கு அடிமையாகிய அண்டை வீட்டார், பெற்றோர் போதைப் பொருள் புழங்கியதால் குடும்பத்தைச் சுயமாக நிர்வகிக்க வேண்டிய நண்பர் என தமக்குத் தெரிந்த சிலர் இந்தக் கொடிய பழக்கத்தால் பாதிப்படைவதைக் கண்ட ரவிச்சந்திரன் ராமு, 49, போதைப் பொருள் புழக்கத்தை எதிர்க்க முடிவு செய்தார்.

1998 ஆம் ஆண்டில் திரு ரவிச்சந்திரன், தமது 26 வயதில் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவில் சேர்ந்தார்.

நீண்டகால சேவை மற்றும் செயல்திறனுக்கான விருதை இம்மாதம் பெற்றது குறித்து கருத்து ரைத்த திரு ரவி, “எனது மனதிற்கு மிக நெருக்கமான இந்த விருது, போதைப்பொருள் இல்லாத சிங்கப்பூருக்கான எனது முயற்சிகளையும் பங்களிப்பையும் ஆதரிக்கிறது,” என்றார்.

“மக்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை உருவாக்குவது எனக்குப் பிடித்திருக்கிறது. போதைப் புழங்கிகளுடன் உரையாடி அவர்களை மெல்ல நல்வழிக்குத் திருப்புவதற்காக பேசப்படும் ஒவ்வொரு வார்த்தையும் ஏதேனும் ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும்,” என்று அவர் கூறினார்.

‘யெஸ்’ (YES) எனப்படும் இளையர் மேம்பட்ட கண்காணிப்புத் திட்டத்தின்கீழ் 21 வயதுக்கும் குறைவான இளைய போதை புழங்கிகளைக் கண்காணிக்கும் பணியில் தற்போது திரு ரவிச்சந்திரன் ஈடுபடுகிறார்.

இத்தகைய இளையர்களைப் பற்றிய பரவலான மனப்போக்கு தவறானது என்கிறார் திரு ரவிச்சந்திரன்.

“இவர்களில் பலர் தீயவர்கள் என்றும் திருந்தவே மாட்டார்கள் என்றும் சிலர் நினைக்கக்கூடும். ஆனால் இந்த இளையர்களில் பெரும்பாலானவர்கள் அறியாமையாலும் கூடா நட்பின் தவறான ஊக்குவிப்பாலும் போதைப்பொருளுக்கு அடிமையாகின்றனர்.

“தம்மைப் போன்ற அதிகாரிகளின் ஆதரவாலும் வழிகாட்டுதலாலும் இந்த இளையர்கள் மீண்டும் சரியான பாதைக்குத் திரும்பக் கூடும்,” என்று அவர் கூறினார்.

இத்தகைய பணியில் நேரம் காலம் பாராமல் கவனம் செலுத்தி வரும் திரு ரவிச்சந்திரன், தமது குடும்பத்தினரின் ஆதரவால் தமது வேலையைச் சிறப்பாக செய்ய முடிந்ததாகக் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!