கிருமி தொற்றிய வெளிநாட்டு ஊழியர்களுக்கு மருத்துவமனையில் இதமளித்த ஓவியக்கலை

வெளிநாட்டு ஊழியரான கந்தசாமி சக்திவேல், 41, கொவிட்-19 பரிசோதனைக்காக கடந்தாண்டு டான் டோக் சேங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டபோது, அவருக்குள் ஒரே படபடப்பு. அப்போது அவர் உணர்ந்த அந்த பயத்தைத் தணிக்க ஓவியக்கலை கைகொடுத்ததாக அவர் கூறினார். தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தின் விருத்தாசலம் தாலுகாவைச் சேர்ந்த திரு சக்திவேல், 2003ஆம் ஆண்டு கப்பல் துறையில் பணியாற்ற சிங்கப்பூர் வந்தார். சென்ற ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதியன்று அவருக்கு மயக்கம், குமட்டல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டன. டான் டோக் சேங் மருத்துவமனைக்கு மருத்துவ வண்டி வழி திரு சக்திவேல் அனுப்பப்பட்டார். அவருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டபோதும் விரைவில் குணமடைந்தார். கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு எக்ஸ்போ பராமரிப்பு வளாகத்திற்கு அவர் மாற்றப்பட்டார்.

மருத்துவமனையில் இருந்தபோது திரு சக்திவேலின் உடல்நிலையை மட்டுமின்றி அவரது மனநிலையையும் சுகாதார ஊழியர்கள் பராமரித்து வந்ததாக அவர் தெரிவித்தார். மருத்துவமனையிலிருந்து வெளியேறுவதற்கு முன்னதாக ஒருநாள் ஓவியம் வரையும் வாய்ப்பு அவருக்குக் கிட்டியது.
திரு சக்திவேலும் வேறு சில ஊழியர்களும் வண்ணப் பென்சில்கள், சாயங்கள் கொண்டு ஓவியம் வரைந்தனர். மருத்துவ ஊழியர்கள் சிலரும் தங்கள் கைவண்ணத்தில் ஓவியங்களை உருவாக்கினர். மொத்தம் 80 ஓவியங்கள் அந்த மருத்துவமனையில் பிப்ரவரி 6ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை காட்சிக்கு வைக்கப்பட்டன. இதுவரை ஓவியம் வரைந்ததே இல்லை என்று கூறிய திரு சக்திவேல், அந்த வாய்ப்பு தமக்கு கிடைத்ததில் பெருமிதம் அடைவதாகக் கூறினார்.

“எனக்கு ஒரு பொறுப்பைத் தந்ததுபோல உணர்ந்தேன். எந்தச் சலிப்புமின்றி நான் மகிழ்ச்சியுடன் என்னையே வரைந்தேன்,” என்று 11 வயது மகனுக்குத் தந்தையான சக்திவேல் கூறினார்.

மனதில் உணர்ச்சிகளை அடக்கி வைத்திருந்ததால் அவற்றை ஓவியம் வழி வெளிப்படுத்த முடிந்ததாக அவரைப் பராமரித்து வந்த மருத்துவச் சமூக ஊழியர் லீ சிங் ஹுவே, 26, தமிழ் முரசிடம் தெரிவித்தார். ஆரம்பத்தில் திரு சக்திவேல் மிகவும் அமைதியாக இருந்ததாகவும் அவர் மனம்விட்டுப் பேச சில காலம் ஆனதாகவும் அவர் கூறினார்.

“கிருமியால் பாதிக்கப்பட்ட இவரைப் போன்ற ஊழியர்களின் மன உளைச்சலைக் குறைப்பதற்காக மனநல ஆலோசனை, உரையாடல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் என்னைப் போன்ற சமூக ஊழியர்கள் ஈடுபட்டனர்,” என்றார் அவர். வெளிநாட்டு ஊழியர்களுக்கும் பெரும்பாலான சிங்கப்பூரர்களுக்கும் இடையே உரையாடல்கள் எளிதில் நடைபெற முடியாததால் ஓவியங்களின் வாயிலாக ஊழியர்களின் உணர்ச்சிகளைப் பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம் என்றார் குமாரி லீ.

“இத்தகைய ஊழியர்களுடன் பெரும்பாலான சிங்கப்பூரர்கள் பழகும் வாய்ப்பு அதிகம் அமைவதில்லை. மனிதர்கள் உணர்வுபூர்வமாக இணையும் ஓர் அனுபவத்தை இந்த ஓவியங்கள் ஏற்படுத்தித் தருகின்றன,” என்று அவர் கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!