அறுபதுகளிலும் மலையேறுவார், தொலைதூரம் ஓடுவார்

அறுபதுகளிலும் மலையேறுவார், தொலைதூரம் ஓடுவார்

2 mins read
880d5cb5-2d1f-4f06-b9de-d6525e6e6abf
2018ல் ஜப்பானிலுள்ள ஃபூஜி மலையில் ஏறிய அஞ்சலி இயோ. - படம்: அஞ்சலி இயோ

மெதுவோட்டப் பழக்கத்தை 50 வயதுக்குப் பிறகு மேற்கொண்ட அஞ்சலி இயோ, 60, இப்போது நெட்டோட்டத்திலும் மலையேற்றத்திலும் பங்கெடுத்து வருகிறார்.

திருவாட்டி அஞ்சலி கடந்த 10 ஆண்டுகளாக தன் உழைப்பாலும் விடாமுயற்சியாலும் ‘சிங்கப்பூர் நாயகி’ (எஸ்ஜி ஹீரோயின்) என்ற அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 7) இவரும் வேறு நான்கு பெண்களும் தங்களின் சாதனைகளுக்காக விருது பெற்றனர்.

இளம் வயதில் திடல்தட நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த திருவாட்டி அஞ்சலி, திருமணத்திற்குப் பிறகு உடற்பயிற்சி செய்யவில்லை.

தகவல் தொழில்நுட்ப நிபுணராகப் பணியாற்றும் திருவாட்டி அஞ்சலி, வேலையுடன் பிள்ளைகளைப் பார்த்துக்கொள்வதற்கே நேரம் சரியாக இருந்ததாகக் கூறினார்.

உடல்நோவால் பாதிக்கப்பட்ட தம் கணவர், இரண்டு அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டதைக் கண்டு உடல்நலம் குறித்து இனியும் மெத்தனமாக இருக்கப்போவதில்லை என முடிவெடுத்தார்.

சமூக ஊடகங்களின் மூலமாக மெதுவோட்டக் குழுக்களில் திருவாட்டி அஞ்சலி சேர்ந்து புது நண்பர்களைச் சந்தித்தார். பின்னர் 2014ல் அவர் ஐந்து கிலோமீட்டர் நெட்டோட்டங்களில் ஓடி, பிறகு 10 கி.மீ. ஓடத் தொடங்கி, விருதுகளைக் குவித்தார்.

கிருமித்தொற்று காலத்தில் யூடியூப் காணொளிகளைப் பார்த்து உடற்பயிற்சி செய்தார் திருவாட்டி அஞ்சலி.
கிருமித்தொற்று காலத்தில் யூடியூப் காணொளிகளைப் பார்த்து உடற்பயிற்சி செய்தார் திருவாட்டி அஞ்சலி. - படம்: கி.ஜனார்த்தனன்

“கொவிட்-19 கிருமிப்பரவலின்போதுகூட நான் யூடியூப் காணொளிகளைப் பார்த்து உடற்பயிற்சி செய்வேன்,” என்று அவர் கூறினார்.

அப்போது புக்கிட் தீமாவில் மலையேறத் தொடங்கிய திருவாட்டி அஞ்சலி, பின்னர் கினபாலு, ஃபூஜி போன்ற மலைகளிலும் ஏறத் தொடங்கினார்.

தாய்லாந்து, நேப்பாளம் போன்ற நாடுகளுக்கும் இவரது பயணம் தொடர்ந்தது.

தம்முடன் வருபவர்கள் 30, 40 வயது மதிக்கத்தக்கவர்கள் என்றாலும் அதுகுறித்து தான் கூச்சப்படுவதில்லை என்று அஞ்சலி கூறினார். தன்னைப் பொறுத்தவரை தனக்கு வயது 30தான் என்று புன்னகையுடன் கூறினார் அவர்.

குறிப்புச் சொற்கள்