தென் கொரியாவில் 1,000 பேர் பாதிப்பு; மேலும் பரவும் அபாயம்

தென்கொரியாவில் கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தையும் தாண்டிவிட்டது. 

இதனால் உலகம் முழுவதும் அந்த கிருமி அதிவேகத்தில் பரவலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

அந்நாட்டில் நேற்று 169 பேருக்கு கிருமி தொற்றியது உறுதி செய்யப்பட்டது. இவர்களுடன் சேர்த்து மொத்தம் 1,146 பேர் கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு வாரத்திற்கு முன்பு 51 கிருமித் தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியிருந்தன. ஆனால் தற்போது மூன்று மடங்கு வேகத்தில் தென் கொரியாவில் கிருமி பரவி வருகிறது.

கொரோனா கிருமிக்கு சீனா மட்டுமல்லாமல் உலகின் மற்ற பகுதிகளைச் சேர்ந்த 2,700 பேர் பலியாகிவிட்டனர்.

ஆசியா நாடுகளில் சீனாவில் மட்டும் 78,000 பேர் கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்ததாக 2வது நிலையில் தென்கொரியா உள்ளது.

இந்த நிலையில் சிங்கப்பூர் உட்பட பல நாடுகள் தென்கொரியாவுக்குப் பயணம் மேற்கொள்ள கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

இதனால் தென்கொரியாவில் ஏராளமான விமானச் சேவைகளும் சுற்றுப் பயணங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

டேகு நகரில்தான் பெரும்பாலோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த நகரத்தில் கிருமி பரவலைக் கட்டுப்படுத்த அரசாங்கம் பல முயற்சிகளை எடுத்து வருகிறது. 

ஆனால் அதையும் மீறி கட்டுக்கடங்காமல் மற்ற இடங்களுக்கும் கிருமி பரவி வருகிறது.