கொரோனா கிருமித்தொற்றால் பொதுவாக நுரையீரலும் இதயமும் பெரிதும் பாதிப்புக்குள்ளாவதாகக் கூறப்பட்டாலும் சிறுகுடல், பெருங்குடல் உட்பட உடலின் அனைத்து பாகங்களும் அந்தக் கிருமித்தொற்றால் பாதிப்புக்கு உள்ளாவதாக ஹைதராபாத் உட்பட இந்தியாவின் 5 நகரங்களைச் சேர்ந்த ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உடல் உள்ளுறுப்புகளின் திசுக்களை ஆராய்ந்த ஆய்வாளர்கள் சிறுநீரகம், இனப்பெருக்க உறுப்புகள், மூளை ஆகிய பாகங்களும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
நாக்பூர், பட்னா, டியோகர் ஆகிய நகரங்களில் இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைகள், ஹைதராபாத்தில் உள்ள இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, சண்டிகாரில் உள்ள உயர் கல்வி மருத்துவக் கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கிட்டத்தட்ட 45 ஆய்வு வெளியீடுகளை ஆராய்ச்சி செய்தனர்.
“கொவிட்-19 பெரும்பாலும் சுவாசப் பாதை, நோயெதிர்ப்புத் திறன், இதயச் செயல்பாடு, சிறுநீரகம், உணவுப் பாதை, இனப்பெருக்க உறுப்புகள், நரம்பு அமைப்பு, தோல், நகம், கூந்தல், நாளமில்லாச் சுரப்பிகள் என உடலின் கிட்டத்தட்ட அனைத்து பகுதிகளையும் பாதிக்கிறது. வயதானவர்களுக்கும் வேறு உடல்நலப் பிரச்சினை உள்ளவர்களுக்கும் இந்த பாதிப்பு அதிகமாக இருக்கிறது,” என்று அந்த ஆய்வாளர்கள் கிளினிக்கல் பதாலஜியில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.