பெய்ஜிங்: தலைநகர் பெய்ஜிங் உட்பட சீனாவின் பல பகுதிகளில் மீண்டும் கொவிட்-19 தொற்று பரவத் தொடங்கியுள்ளது.
இதனால், வரும் நாள்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
அண்மைய தொற்றுப் பரவலால் 11 மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதற்கு உருமாறிய ‘டெல்டா’ கிருமியே காரணம் எனக் கூறப்படுகிறது.
சீனா தனது எல்லைகளை மூடியுள்ள நிலையில், பெரும்பாலும் உள்ளூர்ச் சுற்றுப்பயணிகள் மூலமாக அங்குத் தொற்று பரவி வருவதாகச் சொல்லப்படுகிறது.
சீனாவில் நேற்று திங்கட்கிழமை புதிதாக 39 பேர்க்குக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அவர்களில் 35 பேர் சமூகத்தில் இருப்பவர்கள்.
மற்ற நாடுகளைக் காட்டிலும் சீனாவில் கொரோனா பாதிப்பு மிகக் குறைந்த அளவிலேயே இருந்தாலும், அறவே தடுக்கும் அணுகுமுறையைச் சீனா கையாண்டு வருகிறது. அதாவது, ஒருவர் பாதிக்கப்பட்டாலும்கூட தனிமைப்படுத்தல், அந்தக் குடியிருப்புப் பேட்டையையே முடக்கநிலையில் வைத்தல் எனக் கடுமையான நடவடிக்கைகளைச் சீனா எடுத்து வருகிறது.
உட்புற மங்கோலியாவைச் சேர்ந்த ஈஜின் வட்டாரத்தில் முடக்கநிலை அறிவிக்கப்பட்டுள்ளதால் கிட்டத்தட்ட 35,000 பேர் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.