முட்டை ஏற்றுமதியை மலேசியா நிறுத்தக்கூடும்; தட்டுப்பாடு ஏற்படாது என சிங்கப்பூர் நம்பிக்கை

முட்டை ஏற்றுமதியை குறைக்கவோ நிறுத்தவோ இருப்பதாக மலேசியா எச்சரித்துள்ளதைத் தொடர்ந்து சிங்கப்பூரின் உணவு கண்காணிப்பு அமைப்பான வேளாண் உணவு, கால்நடை மருத்துவ ஆணையம் கருத்துரைத்துள்ளது.

மலேசியாவின் உள்நாட்டுத் தேவைகளுக்காக முட்டையின் ஏற்றுமதியை குறைக்கவோ நிறுத்தவோ இருப்பதாக அந்நாட்டு உள்நாட்டு வர்த்தக, பயனீட்டாளர் விவகார அமைச்சர் சைஃபுதீன் நசுடியொன் இஸ்மாயில் இவ்வார தொடக்கத்தில் கூறியிருந்தார். 

சிங்கப்பூரில் முட்டை விநியோகம் இதுவரையில் பாதிக்கப்படாமல் இருப்பதாக நேற்று சிங்கப்பூர் வேளாண் உணவு, கால்நடை மருத்துவ ஆணையம் கூறியுள்ளது. சிங்கப்பூர் இறக்குமதியாளர்கள் மலேசியாவிலிருந்து வழக்கமாகப் பெறும் முட்டைகளைப் பெற்று வருவதாக அது கூறியது. 

மொத்த முட்டை விநியோகத்தில் சுமார் 73% மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. சுமார் 25% முட்டைகள் சிங்கப்பூரிலேயே தயாராகின்றன. 
சிங்கப்பூர் தயாரிப்புகள் உட்பட மேலும் பல வகைகளிலும் பல இடங்களிலிருந்தும் முட்டைகள் இறக்குமதியாகின்றன என ஆணையம் தெரிவித்துள்ளது. 

தாய்லாந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட பண்ணைகளிலிருந்து ஒரு விழுக்காட்டுக்கும் குறைவான முட்டைகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. 

இதற்கு முன்னர் 2004ஆம் ஆண்டு ஹெச்5என்1 சளிக்காய்ச்சல் ஏற்பட்டபோது மலேசியாவின் கிளந்தான் மாநிலத்திலிருந்து வரும் முட்டைகளின் இறக்குமதியைத் தடைசெய்தது. முட்டைகளை வேறு வழிகளின் மூலம் இறக்குமதி செய்தாலும் அவை விலைகளை உயர்த்தும் என நம்பப்படுகிறது. சென்ற முறை முட்டை விலைகள் மூன்று மடங்கு உயர்ந்து 70 காசுகளுக்கு விற்கப்பட்டன. 

நேற்றைய நிலவரம் வரையில் பிரதான பேரங்காடிகளில் முட்டைகளின் விநியோகமோ விலைகளோ மாற்றம் இல்லாமல் இருந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியிருந்தது.   

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்