முழுவதும் சத்தான முளைகட்டிய பயறுகள்

ஈரச்சந்தைகள் முதல் சமையலுக் குத் தேவையான காய்கறிகளை விற்கும் பேரங்காடிகள் வரை தவறாமல் கிடைக்கும் ஒருவகை உணவுப்பொருள் ‘தவ்கே’ எனப்படும் முளைக்கட்டிய பயறு. சிங்கப்பூரில் பெரும்பாலும் சோயா பயறு அவ்வாறு முளையாக விற்கப் படுகிறது. நம் சமையலில் அன்றாடம் பயன்படுத்தும் கொண்டைக் கடலை, பாசிப்பயறு, கொள்ளு, தட்டைப்பயறு, மொச்சைப்பயறு, போன்ற பயறு வகைகளையும் கம்பு, கேழ்வரகு, கோதுமை போன்ற தானியங்களையும் முளை கட்டி உணவாகப் பயன்படுத்தலாம். சிலருக்கு சோயா பொருட்களால் ஒவ்வாமை ஏற்படக்கூடும். அத்தகையோரும் மற்ற பயறுகளை முளைகட்டி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

‘முளைகட்டிய பயறுகளுக்கு அப்படி என்ன சிறப்பு’ என்ற வினா நம்மிடையே எழக்கூடும். அனைத்து வயதினரும் சாப்பிட ஏற்ற அற்புதமான உணவுப் பொருளான முளைகட்டிய உணவில் சாதாரண பயறுகளைவிட ஊட்டச்சத்துகள் அதிகம். வைட்டமின் ‘ஏ’, ‘பி’, ‘சி’, ‘கே’ இவற்றில் ஏராளமாகப் பொதிந்துள்ளன. புரதச்சத்து இவற்றில் அதிகமாக உள்ளது. நியாசின், தையமின் போன்ற சத்துகளுடன் ஆன்டிஆக்ஸிடென்டுகளும் இவற்றில் அதிக அளவு உள்ளன. மேலும், ஒமேகா அமிலம், இரும்புச் சத்து, துத்தநாகம் போன்ற சத்துகளும் இவற்றில் நிறைந்து உள்ளன.

பயறுகள், தானியங்களை முளைகட்ட வைப்பது மிகவும் சிரமமான காரியமல்ல. அவற்றை எட்டு முதல் 12 மணி நேரம் வரை தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். நன்கு ஊறிய பயறுகளில் தண்ணீரை வடித்துவிட்டு, அவற்றைப் பருத்தித் துணியில் கட்டி தனியாக வைத்துவிடவேண்டும். அடுத்த 12 மணி நேரத்துக்குள் அவை முளைகட்ட ஆரம்பித்துவிடும். பெரும்பாலும் இவற்றைப் பச்சையாகவே சாப்பிடலாம். சுவையாக இருக்கும். பச்சை வாசனை பிடிக்காதவர்கள், வாணலியில் சிறிது எண்ணெய்யைக் காயவைத்து அதில் கடுகு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து, முளைகட்டிய பயறையும் சேர்த்து கிளறி உடனே இறக்கிவிட வேண்டும்.

முளைகட்டிய பயறுகளை அதிகம் வேகவைப்பதோ அல்லது பொறிப்பதோ அவற்றில் உள்ள சத்துகளைச் சிதைத்துவிடும்.
பொதுவாக, முளைகட்டிய பயறுகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தருவதுடன், உடல் எடையைக் குறைக்கவும் உதவுகின்றன. 

பலர் காலை உணவாகவோ அல்லது நொறுக்குத் தீனியாகவோ முளைகட்டிய பயறுகளை உட்கொள்கின்றனர்.
அவை பார்வைத்திறனை மேம் படுத்துவதுடன் சருமத்துக்கும் புத்துணர்வு அளிக்கின்றன. இவற் றில் அதிக அளவில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால், உடலில் சுரப்பிகளைச் சீராகச் செயல்பட வைக்கின்றன. இவற்றில் உள்ள பொட்டாசியம் உடலில் ரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது. இவற்றில் இருக்கும் வைட்டமின் ‘பி’, நியாசின், தைய மின் போன்ற சத்துகள் உடலில் ரத்த விருத்தியையும் ஏற்படுத்து கின்றன. உயர் ரத்த அழுத்தம், ரத்தசோகை போன்றவற்றைத் தவிர்க்க இவை உதவக்கூடும். 

வைட்டமின் ‘இ’ சத்து இவற் றில் அதிகமிருப்பதால் கருப்பை, சினைப்பையை சீராக இயங்கச் செய்யும். முளைகட்டிய பாசிப்பயறில் அதிகப் புரதச்சத்து இருப்பதால், வளரும் குழந்தைகளுக்கு அது நல்ல ஊட்டச்சத்தைக் கொடுக்கும். சருமப் பளபளப்புக்கு உதவுவதுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் முளைகட்டிய வெந் தயத்தை ஒரு கிண்ணம் அளவுக்கு சாப்பிட்டு வர, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.  

முளைகட்டிய கொள்ளு உடல் சூட்டைத் தணிப்பதுடன் தொப்பை யைக் கரைத்து உடல் பருமனைக் குறைக்கிறது. உடல் மெலிவாக இருப்பவர்கள் தினமும் 100 கிராம் முளைகட்டிய எள், வேர்க்கடலை சாப்பிட்டு வர, உடல் எடை கூடும்; உடல் வலுப்பெறும். 
முளைகட்டிய கம்பு உடலுக்கு பலம் கூட்டும். ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்கள் தினமும் சாப்பிட்டு வர உடல் உறுதியாகும். முளைகட்டிய கம்புடன் தேங்காய்த் துருவல், சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம்; அரைத்து, காய்ச்சி கஞ்சியாகவும் குடிக்கலாம். 
கேழ்வரகை எட்டு மணி நேரம் ஊறவைத்து ஈரத்துணியில் கட்டி முளைகட்ட வைக்கலாம். அப்படியே பச்சையாகவும் சாப்பிடலாம். அரைத்துப் பாலாகவும், கூழாகவும், கஞ்சியாகவும் சாப்பிடலாம். இது உடலுக்கு பலம் கூட்டும். ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்கள் தினமும் சாப்பிட்டு வர உடல் உறுதியாகும்.

முளைகட்டிய பயறுகள், தானியங்களின் செரிமானம் தாமதப்படும் என்பதால் வயிற்றுக்கோளாறு உள்ளவர்களும் வயதானவர்களும் மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகு இவற்றை உட்கொள்ளலாம்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!