சாதிக்கத் துடிக்கும் லவின் ராஜ்  

உயரம் கிட்டத்தட்ட இரண்டு மீட்டர். வயது 19. பெயர் லவின் ராஜ். இந்தியர்கள் அதிகம் ஈடு படாத கூடைப்பந்து விளையாட்டில் தன் திறமையாலும் உயரத்தாலும் கொடி கட்டிப் பறக்கத் தொடங்கி உள்ளார் லவின்.

ஆசிய அளவிலான கூடைப் பந்து போட்டி ஒன்றில் இடம்பெறும் ‘சிங்கப்பூர் சிலிங்கர்ஸ்’ குழுவிற் காக லவின் தற்போது விளையாடி வருகிறார். பயிற்சி விளையாட்டாள ராக சிலிங்கர்ஸ் அணியில் சேர்ந்த லவின், தற்போது தொழில் ரீதியான ஆட்டக்காரராக முன் னேறியுள்ளார். கடந்த 13 ஆண்டு களாக சிலிங்கர்ஸ் அணியில் பங் காற்றி வரும் பொது நிர்வாகியும் துணைப் பயிற்றுவிப்பாளருமான திரு மைக்கல் ஜான்சன், 56, லவி னின் வளர்ச்சியைக் கண்கூடாகப் பார்த்து வருகிறார்.

“நம் குழுவில் சேர்ந்ததிலிருந்து லவின் பலவகையிலும் முன்னேற் றம் அடைந்துள்ளார். லவின் நல்ல குணம் படைத்தவர். இளையரான இவர், எதிர்காலத்தில் மேலும் பல வெற்றிகளைக் குவிக்கச் சாத்தியம் உண்டு,” என்றார் திரு மைக்கல்.

இவ்வாறு தேசிய அளவில் கூடைப்பந்து விளையாட்டில்  தடம் பதித்து வரும் லவின், அனைத் துலக போட்டிகளிலும் பங்கேற்கத் திட் டமிட்டுள்ளார்.  “சிங்கப்பூரர்கள் சிலர் சாதித்தது போல நானும் அனைத்துலக அளவில் விளை யாட விருப்புகிறேன். இது என் இலக்குகளில் ஒன்று.

“என்பிஏயில் அதிகாரபூர்வ ஆட்டக்காரராக விளையாட ஆசை உள்ளது. ஆனால் இதைப் பற்றி இப்போதைக்கு நான் எதார்த்தமா கத்தான் யோசிக்க வேண்டும். என்னால் முடிந்த இலக்குகளை முதலில் அடையவேண்டும்,” என் றார் லவின்.

என்பிஏ போட்டியில் ஆகச் சிறந்த ஆட்டக்காரர்களில் ஒரு வரான திரு ‌‌ஷக்கில் ஓ’நீல் தன் முன்மாதிரி என்கிறார் லவின். 

“‌‌‌‌ஷக்கில் ஒரு கைதேர்ந்த ஆட் டக்காரர். அவர் வழியில் நின்று பந்தைத் தடுப்பது என்பது மிகவும் கடினம். மற்ற ஆட்டக்காரர்கள் அவ்வாறு தடுக்க முயன்றாலும் எளிதில் அவர்களைச் சமாளித்து விடுவார். அதனால் அவர் எனக்கு ஒரு முக்கிய ஊக்குவிப்பாளராக இருக்கிறார்,” எனக் குறிப்பிட்டார் லவின். தன் திறமை மேன்மேலும் வளரவேண்டும் என்பதுடன் தான் இன்னும் நிறைய முயற்சி செய்ய வேண்டும் என்பதையும் லவின் அறிந்திருக்கிறார். 

“தற்போது எனக்குப் போதிய அனுபவம் இல்லை. அத்துடன் நீண்ட நேரத்திற்கு ஓடும் ஆற் றலும் விரைவாக ஓடும் தன்மையும் குறைவு. இதனால் நான் நினைப் பது போல் மிகச் சிறப்பாக விளை யாட முடிவதில்லை. நான் மேலும் பயிற்சி எடுத்து, எடையைக் குறைத்தால் இன்னும் சிறப்பாக விளையாடி என் குழுவிற்கு மேலும் சிறப்பாகப் பங்களிக்கலாம்,” என் றார் லவின். கிட்டத்தட்ட 4.5 கிலோ எடையில் பிறந்த லவின், ஏழு வயதில் 1.4 மீட்டர் உயரத்தில் இருந்து பிறகு ஒன்பது வயதில் கிட்டத்தட்ட 1.5 மீட்டர் உயரத்தை எட்டினார். ‘ஃபர்ஸ்ட் தோ பாயோ’ தொடக்கப்பள்ளியில் லவின் படித் தபோது அங்கு அவரின் வகுப்பு ஆசிரியர் திருவாட்டி லிம் கூறிய ஆலோசனைப்படி தொடக்கநிலை ஒன்றிலிருந்தே லவின் கூடைப் பந்து விளையாடத் தொடங்கினார்.

“தொடக்கநிலை மூன்று வரை கூடைப்பந்து விளையாட்டில் எனக்கு ஆர்வமில்லை. அதன்பின் மேல்நிலை வகுப்பு மாணவர்கள் விளையாடிய ஆட்டம் ஒன்றைப் பார்த்தபிறகுதான் கூடைப்பந்து விளையாட்டை  ஒரு கை பார்க்க வேண்டும் என்று முடிவு எடுத் தேன்,” என்றார் லவின். ‘பார்க்கர்’ சாலையில் அமைந்துள்ள ‘ஆங் கிலோ சீன’ பள்ளியில் லவின் கூடைப்பந்து விளையாட்டில்  சிறந்து விளங்கினார்.

பயிற்றுவிப்பாளர்களின் வழி காட்டுதலால் கூடைப்பந்து விளை யாட்டில் நன்கு தேறிய லவின், முன்னாள் தேசிய குழுப் பயிற்று விப்பாளரான ஃப்ராங்க் ஆர்செகோ வின் பார்வையில் பட்டார். தேசிய குழுவோடு சேர்ந்து பயிற்சியில் ஈடுபட அவர் லவினுக்கு அழைப்பு விடுத்தார். சாதாரண நிலைத் தேர்வு முடிந்ததும் லவின் தேசிய குழுவோடு இணைந்து பயிற்சி களைத் தொடங்கினார்.  

லவின் 16 வயதாக இருந்த போது தென்கிழக்காசிய பகுதிக் குரிய ‘சிபா’ போட்டிகளில் கலந்து கொண்டார். பிலிப்பீன்ஸில் நடந்த போட்டிகளில் மியன்மார் அணியை சிங்கப்பூர் அணி 85-32 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தியது. அந்த ஆட்டத்தில் லவின் 19 புள்ளிகளைப் பெற்று தன் குழு வெற்றி பெற கைகொடுத்தார்.  

ரிபப்ளிக் பலதுறைத் தொழிற் கல்லூரியில் விளையாட்டு, பொழுதுபோக்கு நிர்வாகம் தொடர் பில் பட்டயக்கல்வியை மேற்கொள் கிறார் லவின். ஒவ்வொரு வார நாளும் அவருடைய பாடங்கள் காலை 9.45 மணிக்குத் தொடங் குகின்றன. கூடைப்பந்துப் பயிற்சி முடிந்து உறங்கச் செல்வதற்குக் கிட்டத்தட்ட அதிகாலை இரண்டு மணியாகிவிடும். இதனால் களைப்பு ஏற்பட்டாலும் விளையாட் டில் உள்ள ஆர்வம் தனக்கு உந்து தலாக இருந்து வருவதாக லவின் ராஜ் கூறினார்.