இந்தியாவின் ‘பழங்கால ராணுவம்’ குறித்த கேலிகள், கேள்விகள்

 

புதுடெல்லி (நியூயார்க் டைம்ஸ்): பெருகிவரும் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுக்குள் வைக்க இந்தியாமீது அமெரிக்கா வைத்திருந்த நம்பிக்கையை ஆட்டங்காண வைத்தது ஒரு நிகழ்வு.

இந்தியாவின் போர்விமானி அபிநந்ததின் எம்ஐஜி-21 விமானத்தை பாகிஸ்தானிய போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தியதை அடுத்து அவர் அந்நாட்டில் பிடிபட்டார். இறுதியில் அவர் பாதுகாப்பாகத் தாயகம் திரும்பியபோதும், அவர் ஓட்டிய விமானமோ அதோகதி. கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவும் பாகிஸ்தானும் இவ்வாறு வான்வழியாக மோதியது இதுவே முதன்முறை. தனது இராணுவப் படையின் பாதி அளவையும் தனது ராணுவ நிதி ஒதுக்கீட்டில் கால் பகுதியையும் கொண்டுள்ள பாகிஸ்தானிடம் விமானத்தை இழந்து நிற்கிறது இந்தியா. 

இந்தியாவின் ராணுவப் படை அவல நிலையில் இருப்பதாக நியூயார்க் டைம்ஸ் கடந்த வாரம் தெரிவித்தது. இந்தியாவின் ராணுவக் கருவிகளில் 68 விழுக்காடு ‘பழங்கால ராணுவக் கருவிகள்’ என்று கூறப்படும் அளவுக்குப் பழைமை வாய்ந்தவை என்று நியூயார்க் டைம்ஸின் கட்டுரை குறிப்பிட்டுள்ளது.

இந்திய ராணுவத்திற்கு நிதி பெரும் சவாலாக உள்ளது. 2018ஆம் ஆண்டில் இந்தியா, தனது ராணுவத்திற்கு 45 பில்லியன் அமெரிக்க டாலரை ஒதுக்கியது. அதே ஆண்டில் சீனா தனது ராணுவத்திற்கு ஒதுக்கியுள்ள தொகை 175 பில்லியன் டாலர். 

இந்திய ராணுவத்திற்கான வரவு செலவு ஒதுக்கீட்டில் பெரும்பங்கு துருப்பினரின் சம்பளத்திற்குப் பயன்படுகிறது. 14 பில்லியன் டாலர் மட்டும் புதிய ராணுவக் கருவிகளைத் தருவிப்பதற்காகப் பயன்டுத்தப்படுகிறது. சர்வாதிகாரச் சக்தியைக் கொண்டுள்ள சீன அரசாங்கம், வெகு சுலபமாகத் தனது ராணுவக் கொள்கைகளை வகுக்கலாம். இந்தியாவின் தாராளமான ஜனநாயக முறையால் தேசிய திட்டங்கள் குறித்த நாடாளுமன்றக் கலந்துரையாடல்களில் இழுபறிக்கு மேல் இழுபறி நிலவுகிறது.  ராணுவம் சார்ந்த எந்தச் செலவு முடிவுகளையும் மாற்றுவது இந்தியாவில் சுலபமன்று.

 பிரான்சிலிருந்து 36 ரஃபேல் விமானங்களைப் பெற முயலும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இந்திய எதிர்க்கட்சியினர் கேள்விகளால் விளாசித்து வருகின்றனர். விமான ஒப்பந்தத்தில் ஊழல் இருப்பதாகக் கூறி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முதலான எதிர்க்கட்சித் தலைவர்கள் அதனைத் தட்டிக்கழித்துள்ளனர். இதனை இப்போது சாதகமாகப் பயன்படுத்தியுள்ளார் திரு மோடி. ஒருவேளை விமானி அபிநந்தன் ரஃபேல் விமானத்தைப் பயன்படுத்தி இருந்தால் எதிரிகளிடம் பிடிபடாமல் தப்பித்திருக்கலாம் என்ற கருத்தை எழுப்பியுள்ளார். ரஃபேல் இல்லாத குறையை இப்போது இந்தியா உணர்ந்துள்ளது,” என அவர் சொன்னார்.