புல்புல் புயல்: ஒடிசாவில் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன

புவனேஸ்வர்: வங்கக் கடலில் உருவான ‘புல்புல்’ புயல், ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தை நோக்கி சென்று நேற்று காலை அதிதீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. 

இதன் காரணமாக மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர ஒடிசாவில் காற்றுடன் கூடிய கனமழை நீடிக்கிறது. 

படம்: ஏஎஃப்பி
படம்: ஏஎஃப்பி

இந்நிலையில் ஒடிசாவின் கடலோர மாவட்டங்களில் நேற்றும் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. 

இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் வசித்த மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

ஜெகத்சிங்பூர், கேந்திரபாரா, பத்ரக் ஆகிய மாவட்டங்களில் சூறைக்காற்றினால் ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் விழுந்த மரங்களை அகற்றி போக்குவரத்தை  சீரமைக்கும் பணியில் பேரிடர் மீட்பு படையினர் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் புயல் மழை தொடர்பான விபத்துகளில் உயிரிழப்பு எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

நிலைமையை அரசு உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் பாதிப்புகளைத் தடுக்க தேவையான நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தலைமைச் செயலாளர் அசித் திரிபாதி கூறினார்.