சுடச் சுடச் செய்திகள்

கள ஆய்வு: காஷ்மீர் செல்லும் 36 மத்திய அமைச்சர்கள்

ஸ்ரீநகர்: காஷ்மீரில் இயல்பு  நிலை திரும்பி வரும் நிலையில் மத்திய அமைச்சர்கள் பலர் அங்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர். 

காஷ்மீரில் பல்வேறு  பகுதிகளுக்கும் சென்று நிலைமையை ஆய்வு செய்வதுடன், பொது மக்களையும் அமைச்சர்கள் சந்தித்துப் பேச உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வழிவகை செய்த 370ஆவது சட்டப் பிரிவை மத்திய அரசு கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் ரத்து செய்தது. மேலும் காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்துள்ளது. 

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அங்கு போராட்டங்கள் வெடித்தன. இதனால் காஷ்மீரில் அரசியல் கட்சித் தலைவர்கள் முதல் பல்வேறு தரப்பினரும் கைது செய்யப்பட்டனர். சிலர் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர். 

ஒட்டுமொத்த காஷ்மீரும் பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏறத்தாழ 5 மாதங்களுக்குப் பிறகு காஷ்மீரில் இணையச்சேவை மீண்டும் வழங்கப்படுகிறது. மேலும் அங்கு அமலில் இருந்த கட்டுப்பாடுகள் பலவும் தளர்த்தப்பட்டு வருகின்றன.

இதையடுத்து மத்திய அமைச்சர்கள் 36 பேர் காஷ்மீருக்குச் செல்ல இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 18ஆம் தேதி முதல் மத்திய அமைச்சர்கள் ஒவ்வொருவராக காஷ்மீருக்குச் சென்று அங்குள்ள நிலைமையை ஆய்வு செய்கின்றனர். மொத்தம் 52 இடங்களில் பொதுமக்களைச் சந்தித்துப் பேச உள்ள மத்திய அமைச்சர்கள் அவர்களிடம் குறைகளைக் கேட்டறிகின்றனர்.

“18ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை காஷ்மீரில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மத்திய அமைச்சர்கள் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து இரு யூனியன் பிரதேசங்களிலும் உள்ள பல்வேறு பகுதிகளுக்குச் செல்கின்றனர். அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு நிலவரம் உள்ளிட்ட பல்வேறு நிலவரங்கள் குறித்து அமைச்சர்கள் குழு ஆய்வு மேற்கொள்ளும்,” என மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே அண்மையில் காஷ்மீரில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அனைத்துலக குழு அங்கு இயல்பு வாழ்க்கை இன்னும் முற்றிலுமாகத் திரும்பவில்லை என்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுச் சிறையில் இருப்பதை ஏற்க இயலாது என்றும் தெரிவித்துள்ளது.

காஷ்மீரில் தற்போது கடும் பனிப்பொழிவு நீடித்து வருகிறது. இதனால் போக்குவரத்து முடங்கியுள்ளது. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஷமீனா என்ற பெண்ணுக்கு திடீர் பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து நூறு ராணுவ வீரர்களும் முப்பதுக்கும் மேற்பட்ட பொதுமக்களும் அப்பெண்ணை சுமார் நான்கு மணி நேரம் மாறிமாறி, சுமந்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு சுகப்பிரவசம் ஆனது. ராணுவ வீரர்களையும், உதவிக்கரம் நீட்டிய பொதுமக்களையும் பிரதமர் மோடி பாராட்டி உள்ளார்.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon