உயிரிழந்த மணமகனுக்கு கொரோனா தொற்றா? திருமணத்தில் பங்கேற்ற 100க்கு மேற்பட்டோருக்கு கொவிட்-19

கொரோனா கிருமித் தொற்றுக்கான அறிகுறிகளைப் பொருட்படுத்தாமல் திருமண நிகழ்வில் பங்கேற்ற மணமகன் அடுத்து இரு தினங்களில் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருமணத்துக்கு வந்த நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியாகி உள்ளது.

பீகாரைச் சேர்ந்த 30 வயதான அந்த ஆடவருக்கு கடந்த ஜூன் 15ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இதில் ஊரடங்கு விதிமுறைகளை மறி நூற்றுக்கும் அதிகமானோர்  கலந்து கொண்டனர்.

இந்நிலையில் திருமணம் முடிந்த இரு தினங்களில் மணமகன் உயிரிழந்தார். பிரேதப் பரிசோதனை செய்யப்படாமலேயே அவரது இறுதிச்சடங்கு நடைபெற்று, உடல் தகனம் செய்யப்பட்டது.

இதுகுறித்துத் தகவல் அறிந்த பீகார் சுகாதாரத் துறை அதிகாரிகள் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு திருமணத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டனர்.

இதில் நூற்றுக்கும் அதிகமானோருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டது உறுதியானது. மணமகனுக்கு கொரோனா தொற்று இருந்ததா என்பது தெரியாத நிலையில் மணமகளுக்கு முதற்கட்ட பரிசோதனையில் கொவிட்-19 பாதிப்பு இல்லை எனத் தெரியவந்துள்ளது.

கொரோனா கிருமித் தொற்றுக்கான அறிகுறிகள் இருந்ததையும் மீறி மகனுக்குத் திருமணம் செய்து வைத்த பெற்றோர் மற்றும் திருமணத்தில் பங்கேற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online