சுடச் சுடச் செய்திகள்

கார்கோ விமானத்தில் கடத்தியதாக ஸ்வப்னா வாக்குமூலம்; ரூ. 1 கோடி, 1 கிலோ தங்கம் பறிமுதல்

கேரளா தங்கம் கடத்தல் வழக்கில் ஸ்வப்னாவிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து சட்டவிரோதமாக 30 கிலோ தங்கம் கேரளாவுக்கு கடத்திய வழக்கில் அண்மையில் தூதரக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ் பெங்களூருவில் என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

இந்த விவகாரத்தில் 20-க்கும் மேற்பட்டோர் கைதாகியுள்ளனர். ஸ்வப்னாவை என்ஐஏ அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த விசாரணை முடிவடைந்ததை அடுத்து, நீதிமன்றத்தில் நேற்று ஸ்வப்னாவை அதிகாரிகள் முன்னிலைப்படுத்தினர். ஸ்வப்னா சுரேஷ், அவருடன் கைதுசெய்யப்பட்ட சந்தீப் நாயர் ஆகியோரை ஆகஸ்ட் 21ஆம் தேதிவரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

திருவனந்தபுரம் பாரத ஸ்டேட் வங்கியில் ஸ்வப்னா சுரேஷின் தனி பாதுகாப்புப் பெட்டகத்தைச் சோதனை செய்ததில் 1 கிலோ தங்கம் மற்றும் ஒரு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக என்ஐஏ அதிகாரிகள் நேற்று நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்தனர். 

இந்நிலையில் என்ஐஏ அதிகாரிகள் ஸ்வப்னாவிடம் விசாரணை நடத்தியபோது, ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் உதவியுடன் தங்கம் கடத்தப்பட்டதாக ஸ்வப்னா வாக்குமூலம் அளித்துள்ளார். 

மேலும் கார்கோ விமானத்தில் காய்கறிகள் கொண்டு செல்லும் கண்டெய்னர்கள் மூலம் பணம், நகை கடத்தப்பட்டதாக ஸ்வப்னா தகவல் அளித்துள்ளார். 

கடத்தல்களில் ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளுக்கும் தொடர்புடையதால் விசாரணை தீவரமடைந்துள்ளது.

 

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon