தீவிர சிகிச்சைப் பிரிவில் சசிகலா; கொரோனா தொற்று இல்லை

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான வி.கே.சசிகலா மூச்சுத் திணறல் காரணமாக பெங்களூரு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறைத்தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் தண்டனைக் காலம் முடிந்து இம்மாதம் 27ஆம் தேதி விடுவிக்கப்படவுள்ளனர்.

சசிகலாவின் விடுதலைக்குப்பின் தமிழக அரசியலில் பெரும் மாற்றம் நிகழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சில நாள்களுக்குமுன் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சசிகலாவிற்கு அவர் அடைக்கப்பட்டிருந்த பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைச்சாலை வளாகத்தில் உள்ள மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

ஆனால், அதன்பின் மூச்சுத்திணறல் ஏற்படவே அவர் கடந்த புதன்கிழமை மாலை பெங்களூரு சிவாஜி நகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

“சசிகலா இங்கு வந்தபோது அவருக்கு மூச்சுத்திணறல் இருந்தது, காய்ச்சல் இல்லை. நிலைமை மோசமாகவில்லை என்றபோதும் அவரது உடல்நிலையைக் கண்காணிப்பதற்காக வியாழக்கிழமை காலையில் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டார். 

“அவருக்கு கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்குத் ‘தொற்று இல்லை’ எனத் தெரியவந்தது. அவரது உடல்நிலை மேம்பட்டு, இப்போது சீராக இருக்கிறார்,” என்று அரசு மருத்துவமனையின் தலைவர் டாக்டர் மனோஜ் குமார் தெரிவித்தார்.

இன்னும் இரண்டு, மூன்று நாள்களுக்கு சசிகலா மருத்துவமனையிலேயே இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சசிகலா சீரான உடல்நிலையுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் அவரது உடல்நிலையைக் கண்காணித்து வருவதாகவும் அவருடைய சகோதரி மகனும் அமமுக பொதுச் செயலாளருமான டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

“இரண்டாம்நிலைத் தொற்றுகளுக்காக அவருக்குச் செயற்கைச் சுவாசம் தேவைப்படுகிறது,’ என்றார் தினகரன். 

இதற்கிடையே, சிறையில் சசிகலாவிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு இருப்பது ஐயம் அளிப்பதாக இருக்கிறது என்று மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் தரப்பட்டுள்ளது.

கர்நாடக மனித உரிமைகள் ஆணையத்தில் அப்புகாரை அளித்திருக்கும் ராஜராஜன் எனும் வழக்கறிஞர், “சிறையில் இருந்து விடுதலையாக சில நாள்களே இருக்கும் நிலையில் சசிகலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அது குறித்து விசாரிக்க வேண்டும்,” என்று தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon