கை ஏந்திய மெர்லின் பாட்டி ஆங்கிலம் கற்பிக்கிறார்

முகம்மது ஆஷிக் என்பவர் சென்னை மாநகரில் தற்செயலாக மூதாட்டி ஒருவரைச் சந்தித்தார். அந்த மூதாட்டி பிழைப்புக்காக மற்றவர்களிடம் கை ஏந்துபவர்.

இந்தச் சந்திப்பு பெசன்ட் நகர் கடற்கரையில் கடந்த மாதம் 9ஆம் தேதியன்று நிகழ்ந்தது.

இவ்வுலகில் மனிதத் தன்மை, இரக்க குணம், தாராள மனம் கொண்டவர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்பதை உணர்த்தும் விதமாக இந்தச் சந்திப்பு இருக்கப்போகிறது என்று அப்போது யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

அடுத்து நடந்தவை பலரது மனங்களை நெகிழவைத்துள்ளன.

முதுமைக் காலத்தில் மற்றவர்களிடம் கை ஏந்தி பிழைப்பு நடத்திய 81 வயது திருவாட்டி மெர்லினின் வாழ்க்கைக் கதை சோகம் நிறைந்தது.

மியன்மாரைச் சேர்ந்த திருவாட்டி மெர்லின் 1996ஆம் ஆண்டில் இந்தியர் ஒருவரைத் திருமணம் செய்து சென்னைக்குக் குடிபெயர்ந்தார்.

ஆனால் விதி அவரது வாழ்க்கையோடு விளையாடியது. அவரது குடும்பத்தினரில் பலர் மாண்டனர். தமது கணவர், மகன், மாமியார் என அனைவரும் இறந்த பிறகு திருவாட்டி மெர்லின் தனிமையில் வாடினார். தங்குவதற்கு இடம் இல்லாமலும் ஆதரவளிக்க யாருமில்லாமலும் தவித்தார்.

உயிர் பிழைக்க வேறு வழியின்றி பணத்துக்காகவும் உணவுக்காகவும் மற்றவர்களிடம் கை ஏந்தினார்.

2018ஆம் ஆண்டிலிருந்து அவர் தெருத் தெருவாக அலைந்தார். அன்றாட வாழ்க்கை அவருக்குப் போராட்டமாக மாறியது. பல இரவுகள் தூங்காமல் கண்ணீர் வடித்ததாக திருவாட்டி மெர்லின் கூறினார்.

திரு ஆஷிக்குடனான சந்திப்பின்போது திருவாட்டி மெர்லினின் வாழ்க்கைக் கதை வெளிச்சத்துக்கு வந்தது.

திருவாட்டி மெர்லினிடம் பேசிக்கொண்டிருந்த திரு ஆஷிக் அவர் ஆங்கிலத்தில் மிகச் சரளமாகப் பேசுவதை உணர்ந்தார். தமது உச்சரிப்புப் பிழைகளை அவர் திருத்தியதாக திரு ஆஷிக் தெரித்தார். திருவாட்டி மெர்லின் மியன்மாரில் இருந்தபோது ஆசிரியராகப் பணிபுரிந்தவர் என்பது அவருக்குத் தெரியவந்தது.

அவரது வாழ்க்கைக் கதையைப் பற்றி தெரிந்துகொண்ட திரு ஆஷிக் அதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடிவெடுத்தார்.

ஒரு சேலையை அவருக்குக் கொடுத்தார். அத்துடன் நின்றுவிடாமல் மாணவர்களுக்கு ஆங்கிலப் பாடத்தில் துணைப் பாட வகுப்புகள் நடத்த ஊக்குவித்து அதற்குத் தேவையான ஏற்பாடுகளுக்கான செலவுகளையும் திரு ஆஷிக் ஏற்றார்.

‘இங்கிலிஷ் வித் மெர்லின்’ எனும் இன்ஸ்டகிராம் பக்கத்தையும் அவர் தொடங்கினார்.

உதவி செய்வதற்காகத் தொடங்கிவைக்கப்பட்ட இந்த இன்ஸ்டகிராம் பக்கம் இணையவாசிகளிடையே பிரபலமடைந்தது.

அதில் மெர்லின் பாட்டியைக் ‘கதாநாயகி’யாகக் கொண்ட காணொளி காட்டுத் தீயைப் போல பரவியது. அந்தக் காணொளியை இதுவரை ஏறத்தாழ 30 மில்லியன் பேர் இன்ஸ்டகிராமில் பார்த்துவிட்டதாக என்டிடிவி செய்தி நிறுவனம் கூறியது.

@englishwithmerlin எனும் இன்ஸ்டகிராமை மில்லியன்கணக்கானோர் பின்தொடர்ந்தனர்.

அதுமட்டுமல்லாது, தமது முன்னாள் வீட்டு உரிமையாளரின் குடும்பத்தைத் திருவாட்டி மெர்லின் மீண்டும் சந்திக்க சிலர் உதவினர்.

திருவாட்டி மெர்லினுடன் மீண்டும் தொடர்பு கிடைத்ததை அடுத்து, அவரது முன்னாள் வீட்டு உரிமையாளரின் குடும்பத்தினர் அவரைச் சென்னை ராயப்பேட்டையில் உள்ள முதியோர் இல்லத்தில் சேர்க்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர்.

திருவாட்டி மெர்லினின் முன்னாள் வீட்டு உரிமையாளரின் மகனான திரு லோகு பத்மநாபன், சிறு வயதில் திருவாட்டி மெர்லினிடம் பாடம் கற்றவர்.

“பிஹைண்ட்வூட்ஸ் எனும் பிரபல தமிழ் பொழுதுபோக்கு இணையத்தளத்தைச் சேர்ந்த தினேஷ் குமார் எனது நண்பர். அவரது உதவியுடன் மெர்லின் பாட்டியைத் தேடிச் சென்றேன். அவரைக் கண்டுபிடித்துப் பேசினோம். நான் யார் என்பதை அவருக்கு எடுத்துச் சொன்னேன். அவருக்கு ஞாபகம் வந்தது. இதை தினேஷ் தமது கைப்பேசியில் பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்தார்,” என்றார் திரு லோகு பத்மநாபன்.

திருவாட்டி மெர்லினின் மகள் சென்னையில் வசித்துவரும்போதிலும் அவரால் தமது தாயாருக்கு உதவிக் கரம் நீட்ட முடியாத நிலைமை என்றார் திரு லோகு பத்மநாபன்.

“திருவாட்டி மெர்லினின் மற்ற உறவினர்களின் இருப்பிடத்தை கண்டுபிடித்தோம். ஆனால் முதியோர் இல்லத்தில் தங்க மெர்லின் பாட்டி விரும்புகிறோர். 1996ஆம் ஆண்டிலிருந்து 2003ஆம் ஆண்டு வரை எங்கள் குடும்பமும் மெர்லின் பாட்டியின் குடும்பமும் மிகவும் நெருக்கமாக இருந்தது. வீதி வீதியாக அலைந்து அங்கேயே தங்கிய அவலநிலை அவருக்கு ஏற்பட்டது பற்றி நினைக்கும்போது மனம் வலிக்கிறது. நாங்கள் எங்கள் புதிய வீட்டுக்குக் குடிபுகுந்ததும் அவரையும் எங்களுடன் அழைத்துச் செல்வோம்,” என்றார் திரு லோகு பத்மநாபன்.

இது ஒருபுறம் இருக்க, திருவாட்டி மெர்லின், அடிப்படை ஆங்கில உரையாடல்கள் தொடர்பாக கற்பிப்பதையும் சிறுவர்களுக்கு ஆங்கிலக் கதை சொல்வதையும் காட்டும் காணொளிகளை திரு ஆஷிக் பதிவேற்றம் செய்துள்ளார்.

இங்கிலிஷ் வித் மெர்லின் இன்ஸ்டகிராம் பக்கத்தைத் தொடர்ந்து நடத்தி திருவாட்டி மெர்லினுக்கு ஆதரவாக இருக்கப்போவதாக அவர் தெரிவித்தார்.

இன்ஸ்டகிராமில் மில்லியன்கணக்கான ரசிகர்கள் திருவாட்டி மெர்லினுக்கு இருப்பதாக அவரிடம் கூறியதுபோது வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தில் நுழைந்திருக்கும் அம்மூதாட்டியால் நம்ப முடியவில்லை.

“உண்மையாகவா? சத்தியமாக? பொய் சொல்லாதே,” என்றார் அவர்.

தாம் செய்வது மில்லியன்கணக்கானோருக்குப் பிடித்திருந்தால் மேலும் பல காணொளிகளை வெளியிடப்போவதாகக் கூறினார்.

ஆசிரியர் பணி தமது ரத்தத்தில் ஊறிய ஒன்று என்றும் அதை உயிர் உள்ள வரை செய்யப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!