77 வயதில் துடிப்போடு செயல்படும் ‘தப்லா முருகையா’

இசை. வாழ்க்கைத் தத்துவங்கள். இரண்டும் 77 வயது திரு நாகலிங்கம் வீரமுத்துவுக்கு மகிழ்ச்சி தருபவை. ‘VN Lingam Acronyms’ எனும் ஃபேஸ்புக் பக்கத்தில் வாழ்க்கைத் தத்துவங்களை சுவாரஸ்யமான சுருக்கக்குறியீடுகள் வழியாக மக்களிடம் பரப்பி வருகிறார்.

தொழிலில் பெருந்தோல்வி, கல்லீரல் புற்றுநோய் என்று வாழ்க்கையில் அடுத்தடுத்து ஏற்பட்ட சோதனைகளால் பெரும் மனச்சோர்வுக்கு உள்ளானார் திரு நாகலிங்கம்.

அந்தச் சோர்விலிருந்து விடுபட்டு, மகிழ்ச்சியான வாழ்க்கையை மீட்டெடுக்க வாழ்க்கைத் தத்துவங்களும் இசையும் அவருக்குக் கைகொடுத்தன.

பத்து வயதிலிருந்து தப்லா வாசிக்கத் தொடங்கிய திரு லிங்கம், முருகையா என்ற புனைபெயரில் ஃபெப்ரா, சங்கம் பாய்ஸ், மறுமலர்ச்சி முதலிய இசைக்குழுக்களில் வாசித்துள்ளார்.

‘தப்லா முருகையா’ அந்தக் காலத்தில் மிகப் பிரபலமான பெயர். தாய்லாந்து, மலேசியா, இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வாசித்துள்ளார்.

சிங்கப்பூரின் இசைத்திறனை உலகிற்குத் தெரியப்படுத்திய ‘வசந்தம் பாய்ஸ்’ குழுவின் முகமது நூர், முகமது பஷீர், முகமது ரஃபி, ‘மறுமலர்ச்சி’ குழுவின் தலைவர் ரவிஷங்கர் ஆகியோரின் குருவாக விளங்கியவர் திரு லிங்கம்.

ஒன்பது பிள்ளைகளைக் கொண்ட குடும்பம். அவரது தந்தையும் இரண்டு அண்ணன்களும் இளம்வயதில் மரணமடைய, மூன்றாவது மகனான திரு லிங்கத்துக்கு குடும்பப் பொறுப்பை ஏற்க வேண்டிய நிலை. உயர்நிலை இரண்டோடு படிப்பை நிறுத்தி பகுதிநேர வேலைகளுக்குச் சென்று குடும்பச் செலவுகளைப் பார்த்துக்கொண்டார்.

22 வயதில் பாதுகாவல் துறையில் வேலைக்குச் சென்றார். பிறகு எரிவாயு, விமானப் பழுதுபார்ப்புத் துறைகளில் பணியாற்றியபின் 35 வயதில் சொந்த ஒப்பந்த வணிகத்தைத் தொடங்கினார். மூன்று ஆண்டுகளில் அவரது வணிகம் நொடித்துப்போனது. கிட்டத்தட்ட அரை மில்லியன் வெள்ளி நஷ்டம் ஏற்பட்டது.

அதனால் பெரும் மனச்சோர்வுக்கு உள்ளானபோதும் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும் என்ற உந்துதலை அவர் விடவில்லை. வாடகை உந்துவண்டியை ஓட்டும் உரிமம் பெற்று, ஓட்ட ஆரம்பித்தார். அப்போதுதான் வாழ்க்கைத் தத்துவங்களில் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது.

தமிழ் (TAMIL - Tamil is a Marvelous Indian Language, தமிழ் அம்மாவின் மொழி, ஆதி மொழி, ஆரம்ப மொழி, ஆசை மொழி, அஞ்சா மொழி), குடும்பம் (FAMILY - Father And Mother I Love You), ஊடகம் (MEDIA - Making Every Drama in Action) போன்ற சொற்களின் எழுத்துகளைக் கொண்டு ஊக்கவரிகளை உருவாக்கினார்.

அவற்றை மற்றவர்களிடம் பகிர நினைத்து சமூக வலைத்தளங்களில் பதிவிடத் தொடங்கினார்.

இடையில் திரு லிங்கத்துக்கு மற்றொரு சோதனையாக கல்லீரல் புற்றுநோய் ஏற்பட்டது. அதற்காக சென்ற ஆண்டு அறுவை சிகிச்சை செய்துகொண்டார். இன்னும் சிகிச்சை பெற்று வருகிறார் திரு லிங்கம். உடல்நிலை குன்றிய இவருடைய மனைவியும் குணமடைந்து வருகிறார்.

தன் வலிகளை மறக்க திரு லிங்கத்துக்கு இசை துணைபுரிகிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தோ பாயோ சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழுவின் இசை ஆர்வக் குழுவில் இணைந்தார். தொடர்ந்து புக்கிட் பாஞ்சாங், யூ டீ இசை ஆர்வக் குழுக்களிலும் சேர்ந்து மிகுந்த ஈடுபாடு காட்டி வருகிறார்.

தப்லா வாசித்துக் கொண்டிருந்த திரு லிங்கம், தற்போது பாடவும் செய்கிறார். திரு லிங்கத்தை ‘நம்பிக்கை நாயகன்’ என்று வர்ணித்தார் அவருடன் இணைந்து பாடும் திருமதி ஜெயந்தி.

“நம்பிக்கை என்பது HOPE - Holding onto Positive Energy,” என்ற திரு லிங்கம், தம் மனைவி, மகன், மருமகள், மூன்று பேரன், பேத்திகளுக்காக தன் உடலையும் மனதையும் ஆரோக்கியத்துடன் வைத்திருக்க விரும்புகிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!