ஆப்பிரிக்க நாடுகளுக்கு நீங்கள் செல்வீர்களா?

ஆப்பிரிக்க கண்டத்தின் கிழக்குப் பகுதியிலுள்ள கென்யாவின் தலைநகர் நைரோபியை சிலர் கேலியாக ஆங்கிலத்தில் ‘நைரோபரி’ என்று அழைப்பர் (‘ரோபரி’ என்றால் ஆங்கிலத்தில் கொள்ளை). கொள்ளை, தாக்குதல், கார் திருட்டு போன்ற அநேக குற்றங்கள் நிகழும் இடமாக இந்நகரம் கருதப்படுகிறது. ஆயினும், இவையெல்லாம் தாண்டி அந்நாட்டைப் பார்த்தால் ஒருவர் அதன் இயற்கை எழிலில் சொக்கிப் போகலாம் என்று எழுத்தாளர் திருவாட்டி ஜெஸ்லின் சியா தெரிவித்தார். 2016ஆம் ஆண்டில் அவர் சிறிய சுற்றுப்பயணக் குழுவுடன் அங்கு சென்றார். உலகத்தர சஃபாரி பயணங்கள், வியக்கத்தக்க மாஸாய் பழங்குடியினர், பசுமையான காடுகள், அழகிய கடற்கரைகள் ஆகியவற்றை இங்கு வருவோர் காணலாம். 

கென்யாவைச் சுற்றிப்பார்ப்பதற்கு கிட்டத்தட்ட $4,376 தேவைப்படலாம்.

கென்யாவைப் போல் பலர் அதிகமாகச் சென்றிராத மற்றொரு நாடு சோமாலியா. உலகில் ஆகக் குறைந்த சுற்றுப்பயணிகள் வருகையளிக்கும் 15 நாடுகளில் சோமாலியாவும் ஒன்று. ஆயினும் 10,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த குகை ஓவியங்கள், பண்டைய நாகரிகங்களின் சாயல்களைக் கொண்ட கட்டடக் கலை, ஏடன் வளைகுடா ஆகியவை சுற்றுப்பயணிகளைக் கவர்ந்துள்ளன. 

ஆப்பிரிக்காவில் வன்முறை, பஞ்சம், பட்டினி, நோய் ஆகியவை நிறைந்திருப்பது போல ஊடகங்கள் காட்டினாலும் அதன் மீதான தனது ஈர்ப்பு எள்ளளவும் குறையவில்லை என்று பிரிட்டனைச் சேர்ந்த திருவாட்டி ஹெலன் டேவிஸ் தெரிவித்தார். டான்சேனியா, உகாண்டா, போட்ஸ்வானா, மலாவி உள்ளிட்ட நாடுகளுக்கு அவர் சென்றிருக்கிறார். “ஆப்பிரிக்காவில் இருக்கும் புத்தாக்கம், விருந்தோம்பல் பண்பு, சமூக உணர்வு வேறெங்கும் இருப்பது போல் எனக்குத் தோன்றவில்லை,” என்று அவர் கூறுகிறார்.

ஆப்பிரிக்காவில் சவால்மிக்க பல்வேறு சூழல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தாலும் வலுவான நட்புகள் பல தமக்கு உருவாகியுள்ளதாக திருவாட்டி டேவிஸ் கூறினார். 

நீங்கள் எப்படி? வாய்ப்புக் கிடைத்தால் செல்வீர்களா?