பிள்ளைகளுடன் உடற்பயிற்சி செய்யும் தாய்மார்கள்

கி.ஜனார்த்தனன்

இளம் பிள்ளைகள் வழக்கமாக தரைத்தளத்திலோ விளையாட்டு மைதானங்களிலோ ஓடி ஆடி மகிழ்வது வழக்கம். ஆனால் தற்போதைய கொரோனா கிருமிப் பரவலை முறியடிப்பதற்கான அரசாங்கத்தின் அதிரடித் திட்டத்தால் பிள்ளைகள் உட்பட பலரும் வீட்டிலேயே பொழுதைக் கழிக்க வேண்டியுள்ளது. இருந்தபோதும் ஆறு வயது அலெக்சிஸ் வாமன் விநோத்தும் மூன்று வயது அலெனா ரிஷிகா வினோத்தும் வீட்டிலேயே உடற்பயிற்சி செய்து வருகின்றனர்.

இணையம் மூலமாக பிறருக்கு உடற்பயிற்சி சொல்லிக் கொடுக்கும் தாயாரும் சிறப்புக் கவனம் தேவைப்படும் மாணவர்களுக்கு சொல்லித்தரும் ஆசிரியருமான 33 வயது ரேச்சல் மெக்டெலின், இந்தப் பிள்ளைகளுக்கு உடற்பயிற்சி கற்றுத் தருகிறார்.

“உடற்பயிற்சி செய்வது உடலுக்கு மட்டுமின்றி மனதிற்கும் நல்லது. அதே நேரத்தில் குடும்பத்தினர் ஒன்றாக உடற்பயிற்சி செய்யும்போது ஒற்றுமை அதிகரிக்கிறது. மேலும் இளமையிலேயே தொடங்கும் நல்ல பழக்கங்கள் முதுமை வரை தொடரும்,” என்றார் திருமதி ரேச்சல்.

உடலை அங்குமிங்கும் அசைத்தல், யோகாசனம் அல்லது ‘மியூசிக்கல் சேர்ஸ்’, ‘மிஸ்டர் உல்ஃப்’, ‘டான்ஸ் அன்ட் ஃப்ரீஸ்’ உள்ளிட்ட விளையாட்டுகளில் ஈடுபடும் அந்த பிள்ளைகள் உற்சாகம் அடைகின்றனர்

“அம்மா, அப்பாவுடன் யோகா செய்வேன். எனக்கு உடற்பயிற்சி மிகவும் பிடிக்கும்,” என்று மூன்று வயது அலெனா கொஞ்சும் மழலை வார்த்தைகளில் தமிழ் முரசிடம் தெரிவித்தார்.

திருமதி ரேச்சலைப் போல திருமதி காமினி பிள்ளையும் தமது இரண்டு பிள்ளைகளுடன் வீட்டிலேயே உடற்பயிற்சி செய்து வருகிறார். ‘ஸூம்’ உள்ளிட்ட தளங்களில் நடத்தப்படும் வகுப்புகளின்மூலம் ஸூம்பா, யோகாசனம் போன்ற பயிற்சிகளை வாரத்திற்குக் குறைந்தது மூன்று நாட்கள் தம் பிள்ளைகளுடன் செய்வதாகக் கூறினார்.

தமது நடவடிக்கைகளை தம் மூத்த மகள் இரண்டு வயது ரியா அக்ஷரா பின்பற்றுவதாகக் கூறும் அந்தத் தாயார், பெற்றோர்கள் அனைவரும் தங்கள் பிள்ளைகளுக்காக முடிந்தவரை உடற்கட்டுடன் இருக்கவேண்டும் என தெரிவித்தார்.

“என் பிள்ளைகள் இவற்றை உடற்பயிற்சியாகவே நினைக்கவில்லை. இவற்றை விளையாட்டாக நினைப்பதால் மகிழ்ச்சியுடன் இந்த உடற்பயிற்சியில் ஈடுபடுகின்றனர்” என்கிறார் திருமதி காமினி.

உடற்பயிற்சி மட்டுமின்றி நல்ல உணவு முறையும் முக்கியம் எனக் கூறும் திருமதி காமினி, இதற்காக கவனமாகத் திட்டமிடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.