ஆண்டவன் கணக்கு

“இன்றிலிருந்து இரண்டாவது நாளில் இறந்து விடுவாய்!!” மீண்டும் அதே குரல் கேட்டது. நடு நிசி தூக்கத்திலிருந்து பாலா பதறியெழுந்தான். மின்விசிறி சுற்றிக்கொண்டிருந்தும், வியர்வை முத்துக்களால் குளித்திருந்தான். நம்ப முடியவில்லை, கடந்த ஒரு வாரமாய் தவறாமல் அந்தக் குரல் ஒவ்வொரு நாள் இரவு தூங்கும் போது கேட்கிறது. முதல் நான்கு நாட்கள் அலட்சியமாக எண்ணிய பாலா, அந்தக் குரல், நாட்களைச் சரியாகக் கழித்துக் கொண்டு சொல்வதால் கிலி கொண்டான்.

“ஒரு வேளை இது உண்மையாக இருக்குமோ? நான் இறந்து விடுவேனா, முப்பத்திரண்டு வயது சாகும் வயதா? கல்யாணம் ஆகாமலே நம்ம கதை முடிந்து விடுமா?” எண்ண ஓட்டங்கள் அவனின் தூக்கத்தைக் கெடுத்தது.

உடனே அந்த இரவு நேரத்திலேயே கூகுளைக் குடைந்து தேடினான், படித்த பல்வேறு செய்திகள் மேலும் அவனைக் குழப்பின. போதாத குறைக்கு ‘சாட் ஜி.பி.டி’-யைக் கேள்விக் கணைகளால் பலவாறு துளைத்தான். பாலாவின் பரிதவிப்பு கூடி மேலும் சளைத்ததைத் தவிர வேறு பயன் கிடைக்கவில்லை.

கோவிட் காலத்தில் கூட அவனுக்கு இப்படி மரண பயம் ஏற்படவில்லை. அந்த இரவு முழுவதும் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தான்.

காலையில் தனது வீட்டின் பக்கத்து அறை நண்பர்களிடம் நடந்ததைச் சொன்னபோது, கேலி செய்தார்கள்.

சிறிது கலக்கத்தோடு அலுவலகம் சென்றான். “என்ன பாலா தவக் கலை தெரியுற முகத்தில் என்ன சவக் கலை?” என்று உடன் வேலை செய்பவர்கள் எதுகை மோனையோடு கிண்டல் செய்தனர். குழப்பம் தாங்காமல் ஊரில் இருக்கும் அவனது அம்மாவிடம் பேசினான். “பாலா, கல்யாணம் பண்ணிட்டா எல்லாம் சரியாயிரும், “ என்று தன் பங்கிற்குச் சொல்ல வெறுப்பின் உச்சிக்குச் சென்றான் பாலா.

அலுவலகத்தின் அருகில் இருந்த மருத்துவமனைக்குச் சென்றான். மருத்துவரிடம் எல்லாவற்றையும் சொன்னான். அவர் எல்லாவற்றிக்கும் தூக்கமின்மை தான் காரணமாக இருக்கும், மூன்று நாட்கள் மருந்து சாப்பிட்டு சரியாக வில்லையென்றால் மீண்டும் வருமாறு சொன்னார். “ஆனா இரண்டு நாட்களில் இறந்து விட்டால் ?” என்று பயத்தோடு பாலா கேட்க, “அதெல்லாம் ஒன்றும் இல்லை, முதலில் பயத்தை விடுங்க” என்று சொல்லி “அப்படி மூன்று நாட்களில் சரியாக வில்லையென்றால் மன நல மருத்துவருக்கு எழுதித் தருகிறேன்” என்று உறுதி அளித்தார். சற்று ஆறுதல் அடைந்தவனாய் அன்றைய பொழுதைக் கழித்தான்.

அன்று இரவு தூங்கப்போகும் தனது கல்லூரி நண்பர்கள் வாட்சப் குழுவில் வழக்கமாய் இரவின் மடியில் என்ற தலைப்பில் நண்பன் ஒருவன் தினந்தோறும் நல்ல பாட்டு ஒன்றை அனுப்புவான். அதை சொடுக்கி கேட்டான். “போனால் போகட்டும் போட, இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா….” என்று ஆரம்பித்தவுடன் சட்டென நிறுத்தி பாட்டு போட்டிருக்கான் பாரு என்று எல்லா மொழிகளிலும் அவன் நண்பனை மனத்தில் திட்டித் தீர்த்தான்.

ஒரு மாதிரி தேற்றிக் கொண்டு, மருந்து சாப்பிட்டு, “இன்று இரவு மட்டும் அந்தக் குரல் கேட்கவே கூடாது” என்று எல்லா கடவுள்களையும் வணங்கிப் பின் படுத்தான் பாலா.

புரண்டு புரண்டு படுத்தவன் மருந்து வேலை செய்ய ஆரம்பித்தவுடன் அவனையறியாமல் கண்ணயர்ந்தான். ஆனால் அதிகாலை இரண்டு மணியளவில் “இன்று நீ இறந்து விடுவாய்” என்று குரல் கேட்க, ‘அட்ரினல்’ சுரப்பி அதிகமாக வேலை செய்தது போலும், பயத்தில் சிறுபிள்ளை போல் மெத்தையை நனைத்து விட்டான்.

அதன்பின் தூக்கம் வரவில்லை, தூங்கிக் கொண்டிருந்த தொலைக்காட்சியை ‘ரிமோட்’டைக் கொண்டு தனது துணைக்காக எழுப்பினான். “தி லாஸ்ட் டே” என்ற ஆங்கிலப் படம் ஓடுவதைக் கண்டவுடன் உடனே தொலைக்காட்சிப் பெட்டியை நிறுத்தினான். “என்ன நடக்குது இங்கே?” குழப்பத்தின் உச்சிக்கே சென்றுவிட்டான்.

நாற்காலியில் அமர்ந்த நிலையிலேயே தூங்கிவிட்டான். காலையில் முழித்தபோது, நாற்காலியில் அமர்ந்த நிலையிலேயே தூங்கிப் போயிருந்ததையும் அதைவிட புதிதாய் அவன் நெற்றியில் ஒரு வெள்ளி காசு வைக்கப் பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியானான்.

“மன்னிச்சுக்கோ சகோ, வாய் பிளந்து கண்மூடி நீங்க இருந்த நிலையில விளையாட்டுக்காக இந்தக் காசு வச்சு ஒரு படமும் எடுத்தேன், இந்த பாருங்க, அப்படியே பொணம் மாதிரியே இருக்கீங்க” என்று வீட்டின் பக்கத்து அறை நண்பன் சொல்ல, பாலாவுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது.

“நானே இன்று செத்து விடுவேனோ என்று பயத்துல இருக்கும் போது, இப்படி விளையாடுறீங்களே சகோ” என்று கடிந்து கொண்டே நொந்து போனான் பாலா. “விடுங்க பாலா, கனவு, உள்ளுணர்வு, ஒலி என்று இதுக்கெல்லாம் பயப்படாதீங்க, கவலையை மறக்கணுமா வாங்க கொஞ்சம் தண்ணி அடிக்கலாம் “என்று மது போத்தலைக் காட்டி அந்த பக்கத்து அறை நண்பன் சொன்னான்.

“இல்ல மனசு சரியில்ல, அப்புறம் பாக்கலாம்” என்று குளிக்க கிளம்பினான் பாலா.

காலைக் கடன்களை முடித்தபின் அன்றைய தமிழ்முரசு நாளிதழைப் படிக்க பக்கத்தைப் புரட்டினான். “இன்று இப்படம் கடைசி” என்ற திரைப்படச் செய்தி முதலில் தெரிந்தது. “ஏன் இது கண்ணில் படுகிறது?” என்று நொந்துகொண்டே மற்ற பக்கங்களைப் புரட்டியபோது பிரசித்தி பெற்ற அந்த சக்தி உபாசகர் சைனாடவுன் மாரியம்மன் கோவிலுக்கு காலை வருகை புரிவதைப் படித்தான்.

உடனே அவசரமாய்க் கிளம்பினான். பக்கத்து அறை நண்பன் எட்டிப் பார்க்க, “சகோ, நான் போறேன்” என்று பாலா சொல்லி வீட்டுக் கதவைத் திறந்தான். “சகோ, போயிட்டு வரேன்னு சொல்லுன்னு நீங்க எப்பவுமே எங்களிடம் சொல்லுவீங்க, இன்னிக்கு நீங்களே இப்படி சொல்லுறீங்களே?” என்று பதிலுரைத்தான் அந்த நண்பன்.

“சரிதான், நான் வரேன்” என்று கிளம்பிய பாலா “எல்லாமே தப்பாவே நடக்குதே” என மனத்தில் எண்ணியபடியே எம்.ஆர்.டி நோக்கி நடந்தான்.

மாரியம்மன் கோவிலுக்குச் சென்று, அந்த சக்தி உபாசகரைச் சந்திக்க அனுமதி கேட்டு, காத்திருந்து அவரிடம் நடந்த அனைத்தையும் கொட்டித் தீர்த்தான். அமைதியாய்க் கேட்ட அவர், அவனது பிறந்த தேதி, இடம் மற்றும் சில விவரங்களை கேட்டார். பின்னர் கண்மூடி சிறிது நேரம் இருந்தார். அந்தச் சில நிமிடங்களில் சார்ஜ் போன அலைபேசி வைத்திருப்பவன் போல பரிதவித்தான்.

கண் திறந்தவர், “மகனே மனத்தைத் தேற்றிக்கொள், விதி வலியது. சித்தம் செயல் அதுவானால் அது நடந்தே தீரும், தடுக்க முடியாது” என்றார்.

அதைக்கேட்டு மேலும் அதிர்ச்சி ஆனவன், “உங்களை மட்டும்தான் மலை போல நம்பியிருக்கேன். கை விட்டுடாதீங்க.” சொல்லும் போதே அழுது விட்டான் பாலா. அந்த நிலையிலேயே “ அந்தக்காலத்தில் சாவித்திரி தனது கணவனை சாவிலிருந்து எமனிடமிருந்தே காப்பாற்றினாளே, அதுபோல் ஏதாவது எனக்கு நடக்குமா? அல்லது ஏதாவது பரிகாரம் உண்டா?, உங்கள் சக்தியால், யோக வலிமையால் ஏதாவது உதவ முடியுமா?” என்று அழுது மன்றாடினான்.

உபாசகர் மீண்டும் தவநிலைக்குச் சென்றார். பாலாவிற்கு பாதி உயிர் அப்பொழுதே பதற்றத்திலேயே போய்விட்டது. அவரையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அந்த உபாசகர் கண் திறந்தவுடன், “உனக்கு ஓர் உபாயம் சொல்கிறேன்” என்றவுடன் தான் பாலா தன் நிலைக்குத் திரும்பினான்.

“என் தவவலிமையால் ஒரு காலயந்திர மருந்தைத் தருகிறேன். இதைச் சாப்பிட்டபின் நீ கடந்த காலத்திற்குச் சென்று விடலாம். ஆனால் எந்தத் தேதி, எந்த இடம் என்பதை நீ தேர்வு செய்ய முடியாது,” என்று சொன்னார்.

“அய்யா, நீங்கள் என்ன சொன்னாலும் கேட்கிறேன். நீங்கள் கொடுக்கும் கால யந்திர மருந்தை நான் எடுத்துக் கொள்கிறேன், உடனே தாருங்கள்” என்றான் பாலா.

“முழுவதும் கேள் மகனே” என்றபடியே “இங்கிருந்து வெளியே சென்றபின் நீ பார்க்கும் முதல் நபரிடம் அவருக்குப் பிடித்த கடந்த காலத் தேதியை ஒரு சீட்டில் எழுதச் சொல், அதே போல் நீ சந்திக்கும் இரண்டாவது நபரிடம் அவருக்குப் பிடித்த இடத்தை மற்றொரு சீட்டில் எழுதச்சொல், அவை இரண்டையும் நீ பார்க்கக் கூடாது. அவற்றைச் சட்டைப்பையில் வைத்து இந்த மருந்தைச் சாப்பிட்டால், நீ அந்தத் தேதியில் அந்த இடத்திற்குப் போய் விடுவாய்,” என்றார் அந்த சக்தி உபாசகர்.

“அப்படியே செய்கிறேன் அய்யா,” என்றான் பாலா.

“மகனே, நான் சொன்ன விதிமுறைகளை நீ மீறக் கூடாது. மீறினால் இந்தக் காலயந்திரம் வேலை செய்யாது. சரியா?” கேட்டார்.

“நன்றாகப் புரிந்தது, நான் விதிகளை மீறமாட்டேன்” என்றான் பாலா .

உடனே மீண்டும் தவநிலைக்குச் சென்றார். பின்னர் தன் பையிலிருந்து இரண்டு சிறிய வேற்றுத் தாள்களையும் அந்த மாத்திரையையும் கொடுத்தார்.

கண்ணீர்மல்க வாங்கிக்கொண்டு, அவரை வணங்கி நன்றி சொல்லி, நம்பிக்கையுடன் வெளியே வந்தான். ஒருவித பரவச நிலையில் பாலா இருந்தான். உபாசகர் சொன்ன விதிமுறைகளை மனத்தில் நிறுத்தினான்.

முதலில் பார்த்த அந்த சீனப் பெரியவருக்கு ஐம்பது வயது இருக்கும். அவரிடம் “அய்யா எனக்கு உங்களின் சிறு உதவி தேவை. உங்களுக்குப் பிடித்தமான தேதி மாதம் மற்றும் வருடத்தை இந்தச் சீட்டில் எழுதித் தர முடியுமா? அந்தத் தேதியை என்னிடம் சொல்லாதீர்கள். எழுதிய பின் மடித்து என்னிடம் கொடுக்க முடியுமா?” என்று வேண்டுகோள் விடுத்தான் பாலா.

முதலில் தயங்கிய அவர் பின்னர் “சரி இது எனது முதல் பையனின் பிறந்த தேதி” என்று சொல்லியபடியே எழுதி மடித்துக் கொடுத்தார். பாலாவின் மனத்தில் சிறிது மகிழ்ச்சி ஏற்பட்டது, “முதல் பையன் என்றால் குறைந்தது இருபது வருடங்களுக்கு முன்னால் பிறந்திருப்பான்…” என்று எண்ணியபடியே அவருக்கு நன்றி சொல்லி வாங்கிச் சட்டைப் பையில் வைத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தான்.

இரண்டாவது நபரைச் சந்தித்தான். அந்த நடுத்தர வயது மலே அங்கிளிடம் “உங்களிடம் ஒரு உதவி வேண்டும். உங்களுக்குப் பிடித்தமான எதாவது நாட்டின் இடம் மற்றும் ஊர் எழுதித் தர முடியுமா? ஆனால் அந்த இடத்தை என்னிடம் சொல்லாதீர்கள், எழுதியபின் மடித்துத் தாருங்கள்” என்று கேட்டான்.

அவர் “எனக்குப் பிடித்த நாடு அமெரிக்கா” என்று சொல்லியபடியே இடம், ஊர் எழுதிக்கொடுத்தார். அவருக்கும் நன்றி கூறி அதையும் சட்டைப்பையில் வைத்துக் கொண்டான் பாலா.

இப்பொழுது அவனுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. சற்று நிதானமாக ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து அந்த காலயந்திர மருந்தை எடுத்தான். எல்லாக் கடவுள்களையும், உயிர்காக்க உதவிய அந்த உபாசகரையும் மனத்தில் எண்ணி, அம்மா மற்றும் நண்பர்களை ஒருமுறை நினைத்துக் கொண்டான். கண்களை மூடிக்கொண்டு அந்த மருந்தை வாயில் போட்டுகொண்டு முழுங்கினான்.

அந்த மாயம் நிகழ்ந்தது அங்கே!!, பாலா அங்கிருந்து மறைந்தான்.

பாலா கண்ணைத் திறந்த போது ஆச்சரியமானான்.

விண்ணைமுட்டும் ஓர் உயரமான அலுவலகக் கட்டிடத்தின் ஒரு தளத்தில் இருப்பதை உணர்ந்தான். அருகில் இருந்தவர்கள் “ப்ளாக் பெர்ரி” அலைபேசியை வைத்திருந்தனர். இவன் கையில் ஐபோன் இருப்பதைப் பார்த்து அவர்கள் வியந்து பார்த்தனர்.

அவனுக்குப் பூரிப்பு தாங்கவில்லை. காலயந்திரம் வேலை செய்து தனது உயிரைக் காத்து விட்டது என்று எண்ணியபடியே அந்த உபாசகருக்கு மனத்தில் நன்றி கூறினான்.

மெதுவாக சட்டைப் பையிலிருந்து அந்த இரண்டு சீட்டுகளையும் எடுத்துப் பார்த்தான். முதல் சீட்டில் தேதி: செப்டம்பர்-11-2001 எழுதப்பட்டிருந்தது, இரண்டாவது சீட்டில் இடம்: ‘ட்வின் டவர், நியூயார்க்’ என்றிருந்தது. அனிச்சையாக அவன் கண்ணாடி வழியே பார்த்த போது ஒரு விமானம் கட்டடம் நோக்கி வருவதை உணர்ந்தான்.

R. சியாம்குமார்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!