மலேசியா: அன்வாருக்கு எதிராக எவ்வித பாலியல் வழக்குகளும் இல்லை

கோலாலம்பூர்: கெஅடிலான் ரக்யாட் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு எதிராக எந்தவொரு பாலியல் வழக்கும் இல்லை என்றும் அன்வாரின் முன்னாள் உதவியாளர், அன்வார் மீது சுமத்திய குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்குப் போதுமான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என்று மலேசியாவின் தலைமைச்சட்ட அதிகாரி அலுவலகம் நேற்று தெரிவித்தது.

அன்வாரின் முன்னாள் உதவியாளரான 26 வயது முகம்மது யூசோப் ராவ்தே, அப்போது துணைப் பிரதமராக இருந்த 72 வயது அன்வார் இப்ராகிம் மீது 2018ஆம் ஆண்டு தம்மை வலுக்கட்டாயமாக பாலியல் உறவு வைத்துக்கொள்ளும்படி கட்டாயப்படுத்தியதாகக் குற்றம் சாட்டினார். அந்தக் குற்றச்சாட்டை மறுத்த அன்வார், 

அரசியல் ரீதியாக தம்மை இழிவுபடுத்தும் வகையிலேயே தம்மீது இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் போதிய ஆதாரங்கள் இல்லாததல் வழக்கு விசாரணையைத் தொடரமுடியாது, எனவே இத்துடன் இந்த வழக்கு விசாரணை நிறைவுபெறுகிறது என்று அந்நாட்டின் தலைமைச் சட்ட அதிகாரி எங்கு நோர் ஃபைஸா அட்டெக் கூறினார்.

காவல்துறையினரால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை மிகவும் கவனமாக சீராய்ந்து பார்த்ததில், அவை யாவும் இந்த வழக்குடன் ஒத்துப்போகாத முரண்பாடுகளைக் கொண்டவையாக இருந்தது தெரியவந்தது. 

இவற்றை மட்டும் ஆதாரமாக வைத்துக்கொண்டு யார் மீதும் வழக்குத் தொடரமுடியாது என்று, அந்த அதிகாரி ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

தலைமைச்சட்ட அதிகாரி, அந்த அறிக்கையில் அன்வாரின் பெயரையோ குற்றம் சுமத்தியவர் பெயரையே தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. 

ஆனால், ஓர் அரசியலில் நன்கு எல்லாராலும் அறியப்பட்ட ஒருவர் மீது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் குற்றம் சுமத்தப்பட்டது என்று மட்டும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தலைமைச் சட்ட அதிகாரியின் இந்த அறிக்கை குறித்து திரு அன்வார் மற்றும் திரு முகம்மது யூசோப் ஆகியோரின் வழக்கறிஞர்கள் எவ்விதக் கருத்தும் தெரிவிக்கவில்லை.