மலேசியா: ஆளும் கூட்டணியில் முறிவு ஏற்படும் எதிர்பார்ப்பு அதிகரிப்பு

கோலாலம்பூர்: மலேசியாவின் பல்வேறு அரசியல் கட்சிகள் நேற்று தங்கள் கூட்டங்களைத் தனித்தனியே நடத்தின. ஆளும் கூட்டணியில் முறிவு ஏற்பட்டு, புதிய அரசியல் கூட்டணி அமைவதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்று அரசியல் கவனிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கூட்டங்களுக்குப் பிறகு மலேசியப் பிரதமர் டாக்டர் மகாதீர் முகம்மது, மலேசிய மாமன்னரைச் சந்திக்க அனுமதி கோருவார் என்றும் ஆளும் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியின் நம்பத்தகுந்த தகவல்கள் கூறுகின்றன.

“இதுவரை எல்லாம் சிறப்பாக முடிவடைந்தன. நாங்கள் தயார்நிலையில் இருக்கிறோம். மாமன்னரைச் சந்திக்கும் நிகழ்வு இன்று நிகழலாம்,” என்று பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறினார்.

“அனைத்து கூட்டங்களும் முடிவடைந்த பிறகு இன்று இரவு 11 மணிக்கு ஒரு முக்கியமான அறிவிப்பு வெளியாகலாம்,” என்று மற்றொரு அதிகாரி தெரிவித்தார்.

பெட்டாலிங் ஜெயாவில் பிரிபூமி பெர்சத்து மலேசியா கட்சியின் (பெர்சத்து) தலைமையகத்தில் நேற்றுக் காலை 9 மணியிலிருந்து கட்சி உறுப்பினர்கள் கூடத் தொடங்கினர்.

பிரதமர் மகாதீர் காலை 9.10 மணிக்கும் அதற்கு சில நிமிடங்கள் கழித்து உள்துறை அமைச்சர் முஹைதீன் யாசினும் வந்து சேர்ந்தனர்.

அதன் பின்னர் கட்சியின் தலைமைச் செயலாளர் மர்சுக்கி யஹ்யா, இளையர் அணித் தலைவர் சையது சாதிக் சையது அப்துல் ரஹ்மான், நெகிரி செம்பிலான் பெர்சத்து பிரிவின் டாக்டர் ரயிஸ் யத்திம் ஆகியோரும் வந்தனர்.

இந்தக் கூட்டம் நடைபெறும் இடத்துக்கு சில கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள ஒரு ஹோட்டலில் பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் முகம்மது அஸ்மின் அலியின் ஆதரவாளர்களுடன் அமைச்சர்கள் சைஃபுதின் அப்துல்லா, ஸுரைடா கமாருதின், பாரு பியான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரஷிட் ஹஸ்னோன், மரியா சின் அப்துல்லா ஆகியோரும் ஒரு கூட்டத்தில் ஒன்றுகூடினர்.

ஹம்சா ஸைனுதின் உட்பட பெர்சத்து கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கதாக அமைந்தது.

அம்னோ கட்சியின் உச்ச ஆட்சி மன்றக் கூட்டமும் நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு புத்ரா உலக வர்த்தக மையத்தில் நடைபெற்றதாகத் தகவல் வெளியானது.

இதற்கிடையே, பெர்சத்து கட்சியின் கூட்டம் நேற்று பிற்பகல் 3 மணிக்கு சற்று முன்னதாக முடிந்தது. பிரதமர் மகாதீர் வெளியில் காத்துக்கொண்டிருந்த செய்தியாளர்களிடம் கையசைத்துவிட்டு காரில் புறப்பட்டார்.

அடுத்து வெளியே வந்த பெர்சத்து கட்சியின் துணைத் தலைவர் முக்ரிஸ் மகாதீர், “கூட்டத்தில் வழக்கமான விவகாரங்கள் பற்றித்தான் பேசினோம்,” என்றார். அது பற்றி மேல் விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை.

பெர்சத்து தலைவர் டாக்டர் மகாதீர், பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் அஸ்மின் அலியின் பிரதிநிதிகள், அம்னோ, பாஸ் கட்சிகளின் பிரதிநிதிகள் ஆகியோரைச் சந்தித்து புதிய கூட்டணி அரசாங்கத்தை அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருவதாக மற்றொரு தகவல் வெளியானது.

இதற்கிடையே, நிலைமையை அணுக்கமாகக் கண்காணித்து வருவதாக பிகேஆர் கட்சியின் தலைவர் அன்வார் இப்ராஹிமின் ஆதரவாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

இதற்கிடையே, புதிய அரசாங்கக் கூட்டணி அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, மாமன்னரைச் சந்திக்க ஐந்து மலேசியக் கட்சித் தலைவர்களுக்கும் ஒரு துணைத் தலைவருக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாமன்னரைச் சந்தித்தவர்களில் திரு முஹைதீன் யாசின், திரு அஸ்மின் அலி, அம்னோ தலைவர் டாக்டர் அகமது ஸாஹிட் ஹமிடி, பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் உள்ளிட்டோர் அடங்குவர் எனக் கூறப்பட்டது. நாட்டில் நிலவும் ஆக அண்மைய அரசியல் நிலவரம் குறித்து மாமன்னரிடம் எடுத்துரைக்க அவர்கள் அவரைச் சந்தித்ததாகச் சொல்லப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!