மகாதீரின் பதவி விலகலை ஏற்ற மாமன்னர்

டாக்டர் மகாதீரின் பதவி விலகலை மாமன்னர் அப்துல்லா ரியாத்துடின் ஏற்றுக்கொண்டார்.

எனினும், அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் வரை டாக்டர் மகாதீரை இடைக்காலப் பிரதமராக அவர் நியமித்தார்.

டாக்டர் மகாதீர் இன்று மாலை 5 மணியளவில் மாமன்னரைச் சந்தித்த பிறகு அரசாங்கத் தலைமைச் செயலாளர் முகம்மது ஸுக்கி அலி இந்தத் தகவலை இன்று உறுதிப்படுத்தினார்.

மலேசியப் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது தனது பதவி விலகல் கடிதத்தை அரசரிடம் இன்று பிற்பகல் ஒரு மணிவாக்கில் சமர்ப்பித்தார். மேலும், பெர்சாத்து கட்சியின் தலைவர் பதவியிலிருந்தும் விலகியுள்ளதாகவும் அவர் அறிவித்தார்.

26 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட டாக்டர் மகாதீரின் பிரிபூமி பெர்சாத்து மலேசியா கட்சி பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக இன்று அறிவித்தது.

திரு அன்வார் இப்ராகிமின் பிகேஆர் கட்சியைச் சேர்ந்த 11 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அந்தக் கூட்டணியிலிருந்து விலகி தனிக் குழுவை உருவாக்கியுள்ளனர்.

பிகேஆர் கட்சியின் துணைத் தலைவரும் மலேசியாவின் பொருளியல் விவகார அமைச்சருமான திரு அஸ்மின் அலி, வீடமைப்பு மற்றும் உள்ளூர் அரசாங்க அமைச்சரான ஸுரைடா கமாருதின் ஆகியோரின் தலைமையில், அவர்கள் உட்பட 11 பேர்  பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியிலிருந்து வெளியேறினர்.

அதனையடுத்து, நாடாளுமன்றத்தில் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி பெரும்பான்மை பலத்தை இழந்திருக்கிறது. தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சி கவிழ்ந்திருப்பதையே இது காட்டுகிறது.

#மலேசியா #மகாதீர் #பதவிவிலகல்