டெட்ராய்ட்: அமெரிக்க அதிபர் வேட்பாளர் போட்டியில் குடியரசுக் கட்சியின் சார்பில் டோனல்ட் டிரம்ப் மிச்சிகன், மிஸ்ஸிசிப்பி, ஹவாயி ஆகிய இடங்களில் வெற்றிபெற்றுள்ளார். ஜனநாயகக் கட்சியின் சார்பில் மிச்சிகனில் நடைபெற்ற பிரசாரத்தில் ஹில்லரி கிளிண்டனைப் பின்னுக்குத் தள்ளி பெர்னி சாண்டர்ஸ் வெற்றிபெற்றுள்ளார். ஹில்லரி கிளிண்டன் மிஸ்ஸிசிப்பியில் வெற்றி பெற்றிருந்தாலும் சாண்டர்சின் வெற்றி அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தி யுள்ளது. டிரம்ப் மிச்சிகனில் வெற்றிபெற்றதை அடுத்து அவரது வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளதாகக் கவனிப்பாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டிரம்புக்கு எதிரானவர்கள் அவரது முன்னேற்றத்தைத் தடுப்பதற்கான புதிய உத்திகளைக் கையாள வேண்டிய கட்டாயத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மிச்சிகனில் தாமடைந்த வெற்றி அம்மாநிலத்தில் தமது வாய்ப்புகளைக் காட்டுவதாக குடியரசுக் கட்சியைச் சேர்ந்த சாண்டர்ஸ் குறிப்பிட்டார். ஹில்லரி கிளிண்டனுக்கு மிச்சிகனில் வலுவான போட்டி இருக்கும் என முன்பே எதிர்பார்க்கப்பட்டது. அதனை அடுத்து அவருடைய கணவரும் முன்னாள் அதிபருமான பில் கிளிண்டன், மகள் செல்சி கிளிண்டன் ஆகியோர் மிச்சிகனில் கடந்த சில நாட்களாக பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தனர். இருப்பினும் சாண்டர்ஸ் மிச்சிகனில் வெற்றிபெற்றதை அடுத்து வேறு சில மாநிலங்களிலும் அவர் வெற்றிபெறுவதற்கான வலுவான சாத்தியக்கூறுகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.