அதே உறுதி, அதே ஒற்றுமை; அடுத்த பயணம் தொடக்கம்

ஒற்றுமையான மக்கள், திட்டவட்டமான உறுதி - இரண்டும் இருந்தால் ஒரு நாடு வெற்றி பெற்று சாதனைகளைப் படைக்கும் என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டு சிங்கப்பூர்.
ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதம், ஜித் மிரட்டல்கள், சகிப்புத்தன்மை இல்லாத போக்கு, இனப் பதற்றங்கள் ஒரு பக்கம்; அரசியல் பிணக்குகள், அவநம்பிக்கையுடன் கூடிய அடுத்த தலைமுறை இவை எல்லாம் மறுபக்கம் என்று உலகின் பல்வேறு சமூகங்களும் தேங்கி நிற்கின்றன.
வளங்கள் மண்டிக்கிடக்கின்ற, பெரும் நிலபரப்பைக் கொண்டுள்ள நாடுகள் பலவும் தடுமாறி நிற்கையில், மக்களை மட்டும் வளமாகக் கொண்டுள்ள சிங்கப்பூர் வாழ்ந்து காட்டுவது இதனால்தான்.
ஐக்கியமாக, நம்பிக்கை மிக்கதாக எதிர்காலத்தில் திடமான உறுதியுடன் சிங்கப்பூர் திகழ்வதற்கு காரணமும் இதுதான். சிங்கப்பூரின் இந்த ஐக்கியமும் உறுதியும் இன்று நேற்று தோன்றியன அல்ல. 1965ல் நாடு சுதந்திரம் அடைந்தபோதே பிறந்தவை இவை.
இன்று இன்னும் பலத்துடன் இவை மக்களுடன் இரண்டறக் கலந்து உறுதியாக, உறுதுணையாகத் தொடர் கின்றன. இதைத்தான் 2016 புத்தாண்டுச் செய்தியில் பிரதமர் லீ சியன் லூங் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
நவீன சிங்கப்பூரின் 50வது ஆண்டான சென்ற ஆண்டில் இடம்பெற்ற நான்கு சம்பவங்கள் தமக்கு இதை உணர்த்துவதாக அவர் தெரிவித்து இருக்கிறார்.
சிங்கப்பூரை உருவாக்கிய தலைவர் லீ குவான் இயூ கடந்த மார்ச் 29ல் மறைந்தபோது சிங்கப்பூரர்கள் ஐக்கியத் தைப் புலப்படுத்தி, அடுத்த 50 ஆண்டு காலத்தில் சிங்கப் பூரை இன்னும் சிகரத்துக்குக் கொண்டு செல்ல எடுத்துக் கொண்ட உறுதி;
பொன்விழா ஆண்டுக் கொண்டாட்டங்களில் மிளிர்ந்த இன, சமய, மொழி நல்லிணக்கம்; தேசிய தின அணி வகுப்பில் இளையரிடம் காணப்பட்ட எதிர்கால நம்பிக்கை, உறுதி, திட்டவட்ட தீர்மானம்;
செப்டம்பர் 11ல் நடந்த பொதுத் தேர்தலில் மக்கள் செய்த முடிவு. அடுத்த அத்தியாயத்தை எழுதப்போகும் தாங்கள், யார் தலைமையில் அதை சரித்திரச் சாதனையாக்க முடியும் என்பதை மக்கள் முடிவு செய்த விதம்; இந்த நாலும் தனக்கு அசைக்க முடியாத நம்பிக்கையைத் தந்து இருப்பதாக திரு லீ குறிப்பிட்டு இருக்கிறார்.
புதிய ஆண்டு சவால்மிக்கதாகத்தான் இருக்கும். பயணம் சுலபமாக இருக்காது. சவால்கள், ஏமாற்றங்கள், கவலைகள் இருக்கவே செய்யும். இருந்தாலும் ஒருவர் மற்றொருவர் மீது அக்கறைகொண்டு, எல்லாரையும் அரவணைத்து செல்லும் நம் பாணி தொடரும் வரையில், நாம் ஐக்கியமாக வெற்றிகளைத் தொடர்ந்து குவித்து கொண்டாட முடியும் என்பதில் ஐயமில்லை என்று அவர் தெரிவித்து இருக்கிறார்.
சிங்கப்பூர் கடந்த 50 ஆண்டுகளில் நிகழ்த்திய சாதனைகள், வளர்ந்த நாடாக அது உருவாகிய வரலாறு எல்லாம் உலகுக்கு நல்ல பாடமாக ஆகி இருக்கின்றன.
அதன் அடுத்த 50 ஆண்டுகால வரலாறு இப்போது தொடங்குகிறது. முதல் 50 ஆண்டுகளில் சிங்கப்பூரர்கள் கொண்டிருந்த திட்டவட்டமான உறுதி, ஐக்கிய உணர்வு ஆகியவற்றின் உதவியுடன் மக்கள் புறப்படுகிறார்கள்.
இன்று அதிக எதிர்பார்ப்புகள் இருந்தாலும் அன்று இல்லாத வளங்கள் இன்று அதிகம் இருக்கின்றன. சூழல் வேறுபட்டு இருந்தாலும் இனம், மொழி, சமய பாரபட்சமில்லா நிலை, தகுதிக்கு முன்னுரிமை, எல்லாரையும் உள்ளடக்கிய சமூகம் போன்ற அடிப்படையான பண்புகள் நன்கு வேர் ஊன்றி வலுவாக வளர்ந்து இருக்கின்றன.
எல்லாவற்றையும் மொத்தமாகப் பார்க்கையில் சிங்கப்பூர் 1965ஐப் போலவே, அதே உறுதியுடன் அதே ஒற்றுமையுடன் தனது அடுத்த 50 ஆண்டுப் பயணத்தைத் தொடங்குகிறது. தொடக்கம் சிறப்பாகவே இருக்கிறது.
உலகம் எப்படி இருந்தாலும் உலகப் பொருளியல் ஏற்றத் தாழ்வுகளைச் சந்தித்தாலும் பயங்கரவாதம் போன்ற மிரட் டல்கள் இடம்பெற்றாலும் ஒற்றுமையும் உறுதியும் உள்ள வரை, தோல்வியைச் சிங்கப்பூர் தோற்கடித்துவிடும் என்பது உறுதி.
இந்த உறுதியை சிங்கப்பூர் மக்கள் ஒற்றுமை மூலம் பலப்படுத்தும் பாங்கு நாட்டுக்குப் பல சாதனைகளை தொடர்ந்து குவிப்பதோடு, நாடு தனது 100வது ஆண்டு விழாவை 100க்கு 100 வெற்றி விழாவாக ஆக்கும் என்பது திண்ணம். நம்பிக்கையுடன் தொடரட்டும் சிங்கப்பூரின் அடுத்த 50 ஆண்டு வெற்றிப் பயணம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!