லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத் தொடரின் லீக் பட்டியலில் இரண்டாவது நிலையில் இருக்கும் டோட்டன்ஹம், லிவர்பூல் குழு வுடனான நேற்றைய ஆட்டத்தை சமனில் முடித்தது. அதனால், பட்டியலில் முதல் நிலையில் இருக்கும் லெஸ்டர் குழுவுக்கு நெருக்கடியை அதிகரிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டது டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர். ஸ்பர்ஸ் குழுவின் கோல் காப்பாளர் ஹூகோ லோரிஸ், லிவர்பூல் வீரர்கள் போட முயன்ற 4 கோல்களைச் சிறப்பாக தடுத்து ஆடிய தால் ஆட்டம் வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிந்தது. ஆனால், பிற்பாதி ஆட்டத்தில், கிடைத்த கோல் போடும் வாய்ப்பை ஸ்பர்ஸ் தவறவிட்டதால் வெற்றி பறிபோனது. எரிக் டயர் கடத்திய பந்தை சன் ஹியூங்மின் கோல் கம்பத்துக்கு அப்பால் அடித்ததால் ஸ்பர்ஸ் கோல் போடும் வாய்ப்பை நழுவவிட்டது.
மேலும் ஸ்பர்ஸ் குழுவின் எரிக்சன், டெம்பலே அடித்த பந்தை கோலாக விடாமல் தடுத்து விளையாடினார் லிவர்பூல் குழுவின் கோல்காப்பாளர். கோல் எதுவும் போடாமல் முடிந்தது முதல் பாதி ஆட்டம். ஆனால், பிற்பாதி ஆட்டம் தொடங்கியவுடன் முதல் கோலை போட்டார் லிவர்பூல் குழுவின் கோட்டின்யோ. 51வது நிமிடத்தில் அவர் அடித்த கோலை 63வது நிமிடத்தில் சமன் செய்தார் ஸ்பர்ஸ் குழுவின் கேன். அதனால் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. ஆட்டம் குறித்து பேசிய லிவர்பூல் நிர்வாகி, யர்கன் க்ளோப், "டோட்டன்ஹம் குழு பட்டத்தை வெல்லுவதற்காகப் போராடுகிறது. நாங்கள் மூன்று புள்ளிகள் பெறுவதற்காகப் போராடுகிறோம்," என்றார் அவர். இத்தொடரின் மற்றோர் ஆட்டத்தில், போர்ன்மத் குழுவை 4-0 என்ற கோல்கணக்கில் வென்றது மான்செஸ்டர் சிட்டி.
லிவர்பூல் குழுவின் பிலிப்பே கோட்டின்யோவும் டோட்டன்ஹம் ஸ்பர்சின் ஹேரி கேனும். படம்: ராய்ட்டர்ஸ்