தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியலை அக்கட்சித் தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்டார். சென்னை கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலினும் திருவாரூர் தொகுதியில் கருணாநிதியும் போட்டியிடுகின்றனர். 1957ல் தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் களம்கண்ட தட்சிணாமூர்த்தி என்ற முத்துவேல் கருணாநிதி இதுவரை தோல்வியே காணாதவர். இந்தியாவின் பழுத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான இவர் தற்போது 13வது முறையாகப் போட்டியிடுகிறார்.
கருணாநிதியோடு இணைந்து அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய பேராசிரியர் அன்பழகன் 2011 தேர்தலில் தோல்வியடைந்தார். இந்த தேர்தலில் தனது பேரனுக்கு வழிவிட்டுள்ள அவர், போட்டியிட வில்லை. கருணாநிதி 92 வயதிலும் தேர்தல் களத்தில் நிற்கிறார். 173 இடங்களுக்கான வேட்பாளர் பெயர்களை திமுக நேற்று அறிவித்தது. இதில் பரபரப்பாக பேசப்பட்டதுபோல் ஆர்.கே.நகரில் குஷ்பு போட்டியிடவில்லை.
முன்னதாக, புதுச்சேரியில் காங்கிரஸ் 21 தொகுதிகளிலும் திமுக ஒன்பது தொகுதிகளிலும் போட்டியிட முடிவாகியுள்ளது. அதேநேரத்தில் மக்கள் தேமுதிகவிற்கு மூன்று இடங்கள் திமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கில் சந்திரகுமார், மேட்டூரில் பார்த்திபன், கும்மிடிப்பூண்டியில் சேகர் ஆகியோர் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.