சர்ச்சையைக் கிளப்பிய அமலாவின் ‘ஆடை’ பட சுவரொட்டி

இயக்குநர் விஜய்யுடன் ஏற்பட்ட திருமண உறவை முறித்துக் கொண்ட பிறகு நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் அமலா பால். நயன்தாரா வழியைப் பின்பற்ற தொடங்கியுள்ள அமலா பால், கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாகத் தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில், ‘மேயாத மான்’ படத்தை இயக்கிய ரத்ன குமார் இயக்கத்தில் ‘ஆடை’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கி றார்.

இந்தப் படத்தில் நடிக்க உடல், மன பலம் கூடுதலாக இருக்க வேண்டும். அதை எல்லாம் புரிந்து நடிக்க சம்மதம் தெரிவித்தார் அமலா. மேலும் இப்படத்தில் அமலா பாலுக்கு ஜோடி கிடையாது என்கிறது படக் குழு. இன்றைய தலைமுறையை இலவச போன் தகவல்கள் சீரழித்து வருவதைத் தோலுரிக்கும் படம் தான் ஆடை என்கிறார் இயக்குநர் ரத்னகுமார். இந்நிலையில், இப்படத்தின் முதல் சுவரொட்டியை இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டார். ஆங்கிலத் தலைப்பைக் கொண்ட சுவரொட்டியை ‘பாகுபலி’ புகழ் நடிகர் ராணா வெளியிட்டார். அது சினிமா ரசிகர்களிடையே பெரிய வரவேற்பையும் விமர்சனங் களையும் பெற்றுள்ளது.

ஏனெனில் இச்சுவரொட்டியில் அமலா பால் இதுவரை இல்லாத அளவுக்குக் கவர்ச்சியாக போஸ் கொடுத்திருக்கிறார். அமலா பால் இப்படி அதீத கவர்ச்சி காட்டி நடித்துள்ளது கோலிவுட்காரர்களையே வியக்க வைத்துள்ளது.