மலேசியா: சீன ஆதரவுத் திட்டங்கள் ரத்து

கோலாலம்பூர்: சீனாவின் ஆதர வுடன் நடத்தப்பட இருந்த எண்ணெய், எரிவாயுக் குழாய்கள் திட்டங்களை மலேசியா ரத்து செய்துள்ளது. கடந்த மே மாதத்தில் தேசிய முன்னணி கூட்டணி எதிர்பாராத் தோல்வி அடைந்ததை அடுத்து புதிய அரசாங்கம் அப்பணிகளை நிறுத்தி வைத்தது. $4.1 பில்லியன் பெறுமானமுள்ள அந்த மூன்று எண்ணெய், எரிவாயுக் குழாய்த் திட்டங்களைத் தற்போது மலேசிய அரசாங்கம் ரத்து செய்துள்ளது.

திட்டங்கள் ரத்து செய்யப் படுவதை அத்திட்டங்களுடன் தொடர்புடைய சீன அமைப்பு களுக்கு மலேசிய நிதி அமைச்சர் லிம் குவான் எங் கடிதம் அனுப்பியதாக தி ஃபைநேன்‌ஷியல் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்தது. ரத்து செய்யப்பட்ட திட்டங்களில் மலாக்கா மாநிலத்தை ஜோகூரில் உள்ள ஓர் எண்ணெய் சுத்திகரிப்பு, ரசாயன ஆலையுடன் இணைக்கும் திட்டமும் ஒன்று. திட்டங்களை ரத்து செய் ததற்காக மலேசியா செலுத்த வேண்டிவரும் கட்டணங்கள் குறித்து அமைச்சர் லிம் தகவல் வெளியிடவில்லை.