ஹாலந்து டிரைவ் புளோக் 36ல் இருக்கும் ஃபேர்பிரைஸ் கடையில் இருந்த தள்ளுவண்டிகள் சென்ற வியாழக்கிழமை மாயமாகிவிட்டன. அடுத்த நாளன்று அந்தக் கடையில் 'தள்ளுவண்டிகள் திருடப்பட்டுவிட்டதால் வாடிக்கை யாளர்களே, சிரமத்திற்கு மன்னித்துக் கொள்ளுங்கள்' என்ற அறிவிப்பு இடம்பெற்றது. தள்ளுவண்டிகள் மாயமாகி இருக்கும் சம்பவம் தொடர்பில் போலிசிடம் புகார் தெரிவிக்கப்பட்டு இருப்பதாக ஃபேர்பிரைஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இந்த விவகாரம் பற்றி போலிஸ் புலன்விசாரணை நடந்து வருவதால் மேற்கொண்டு தகவல் எதையும் தெரிவிக்க முடியாத நிலையில் இருப்பதாகவும் அந்தப் பேச்சாளர் கூறினார்.
இதர கடைகளிலிருந்து தள்ளுவண்டிகள் கொண்டுவரப்பட்டு அந்த ஃபேர்பிரைஸ் கடையில் வாடிக்கையாளர்களுக்கு வழக்கமான வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. அந்தக் கடையில் 15 தள்ளுவண்டிகள் இருக்கும். இருந்தாலும் தள்ளுவண்டிகளைப் பொருட்களுடன் தள்ளிக்கொண்டு கார்ப்பேட்டை அல்லது பக்கத்தில் உள்ள வீடுகளுக்குச் செல்லும் வாடிக்கையாளர்களில் பலர் அவற்றைக் கொண்டுவந்து ஒப்படைப்பதில்லை என்று தெரிவிக்கப்பட்டது.