வூஹான் கொரோனா: பயம் வேண்டாம்; சுத்தமே காக்கும் கவசம்

உலகப் பொருளியல், பல பிரச்சினைகளில் சிக்கி நிச்சயமில்லாத நிலையில் இருந்து வருகின்ற ஒரு நேரத்தில், திடீரென்று கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் கொரோனா கிருமி தலைதூக்கி புதிய பயத்தைக் கிளப்பிவிட்டுள்ளது.

அந்த நாட்டில் ஒரே வாரத்தில் சுமார் 9,700 பேர் இந்தக் கிருமி பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். சுமார் 259 பேர் மாண்டுவிட்டனர். சீனாவின் வூஹான் மாநிலத்தில் இருந்து கிளம்பிய அந்தக் கிருமிகள், உலகம் முழுவதும் பரவி வருகின்றன.

மற்ற பல நாடுகளிலும் ஏறக்குறைய 100 பேருக்கும் அதிக மக்களை கொரோனா கிருமி தொற்றி இருக்கிறது. ஜப்பான் முதல் அமெரிக்கா, இந்தியா வரை பல நாடுகளைச் சேர்ந்த மக்களையும் கொரோனா கிருமி விடவில்லை.

இந்த நிலவரங்களை எல்லாம் கருத்தில்கொண்டு அனைத்துலக அவசரநிலையை உலக சுகாதார நிறுவனம் பிரகடனப்படுத்தி உள்ளது. சீனாவில் இருந்து வரும் தகவல்களைப் பார்க்கையில், கொரோனா கிருமி பாதிக்கப்பட்டவர்களில் ஏறக்குறைய 2 விழுக்காட்டினர் மட்டுமே மாண்டு இருக்கிறார்கள் என்பது தெரியவருகிறது.

இந்தப் புதிய கிருமி முன்பு பயங்கரமாகத் தலைவிரித்தாடிய சார்ஸ், மெர்ஸ் போன்ற கிருமிகள் தொற்றிய அளவை விஞ்சிவிட்ட போதிலும் அவற்றைவிட மோசமானவையாக இருக்காது என்றே தெரிய வந்துள்ளது.

இருந்தாலும் கொரோனா கிருமி எந்த அளவுக்கு ஆபத்தானது, அதன் தாக்கம் எந்த அளவுக்கு இருக்கும் என்பதை எல்லாம் உறுதியாகக் கூற மேலும் பல வாரங்களாகும் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

இந்த இடைப்பட்ட காலத்தில் பல நாடுகளும் வூஹான் கொரோனா கிருமியைத் தவிர்த்துக்கொள்ள ஏராளமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

வூஹான் கொரோனா கிருமி சிங்கப்பூரிலும் 18 பேரை தொற்றி இருக்கிறது. இவர்களில் 16 பேர் வூஹான் மாநிலத்தில் இருந்து வந்ததவர்கள். இவர்களில் இருவர் சிங்கப்பூரர் என்றும் இவர் வூஹானிலிருந்து ஸ்கூட் விமானத்தில் வியாழக்கிழமை அழைத்து வரப்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிருமி பாதித்த அனைவரும் தனித்தனியாக வைக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் குணமடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உலகளவில் சுத்தமான நாடு என்று புகழப்படும் சிங்கப்பூர், ஏற்கெனவே சார்ஸ் கிருமி தொற்றியபோது கற்றுக்கொண்ட பாடங்களையும் மனதில்கொண்டு உடனடி நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை முழுமூச்சாக எடுத்து உள்ளதும் எடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

நேற்று முதல் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா நான்கு முகக்கவசங்கள் வழங்கப்படுகின்றன. போதிய முகக்கவசங்கள் இருப்பதாகவும் அரசாங்கம் உறுதி கூறி இருக்கிறது.

இதன் தொடர்பில் பொய்த் தகவல்களை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்டு உள்ள அரசு, பல தடவை பொய்ச் செய்திகள் தலைகாட்டி இருப்பதால் போலிச் செய்திகளுக்கு எதிரான சட்டத்தை இதில் பயன்படுத்தியும் இருக்கிறது.

சிங்கப்பூருக்கு வரும் அனைத்து வழிகளிலும் சுற்றுப் பயணிகள் உள்ளிட்ட அனைவருக்கும் உடல் வெப்பநிலை உட்பட மருத்துவப் பரிசோதனைகள் 24 மணி நேரமும் நடத்தப்படுகின்றன. சீனாவில் கடந்த 14 நாட்கள் தங்கிவிட்டு வருவோர் யாராக இருந்தாலும் சிங்கப்பூருக்குள் வருவதற்குத் தடை விதிக்கப்படும். அவர்கள் இடைவழியாகவும் சிங்கப்பூர் வந்து செல்ல தடை விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

தொற்றுநோய்க் கிருமியைத் தடுப்பதற்கு அரசாங்கம் இப்படி எந்த அளவுக்குத் தீவிர முயற்சிகளை மேற்கொண்டாலும் இந்தப் போரில் முழு வெற்றி கிட்டவேண்டுமானால் அதற்குத் தனிப்பட்ட ஒவ்வொருவரின் பழக்கவழக்கங்களும் மிக முக்கியமானவை.

இதில் சுத்தம் பெரும் வெற்றியைத் தரும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. வைரஸ் கிருமிகள் பரவுவதைத் தடுப்பதற்குப் பொதுமக்கள் ஏழு செயல்களைச் செய்தால் நல்ல பலன் இருக்கும் என்று அரசாங்க இணையத் தளங்களில் வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டு இருக்கின்றன.

உயிரோடு இருக்கும் விலங்குகளை நெருங்காதீர்கள், சரியாக சமைக்கப்படாத அல்லது பச்சையான இறைச்சியைச் சாப்பிடாதீர்கள், கூட்டம் நிறைந்த இடங்களைத் தவிர்த்துக்கொள்ளுங்கள், யாராவது நோய்வாய்பட்டு இருந்தால் அவர்களுக்கு அருகே செல்லாதீர்கள், கைகளைப் பல தடவை சோப்பு போட்டு கழுவுங்கள், இருமல், மூக்கு ஒழுகு தல் போன்ற சுகாதாரப் பிரச்சினை இருந்தால் முகக்கவசம் அணிந்து கொள்ளுங்கள்.

இருமல் வந்தால் வாயை மெல்லிழைத்தாளால் மூடியபடி இருமுங்கள். பிறகு அந்தத் தாளை உடனடியாக உரிய இடத்தில் போட்டுவிடுங்கள். உடல்நிலை சரியில்லை என்றால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.

சுத்தமான பழக்கவழக்கங்களைக் கடைப்பிடியுங்கள். வீடுகளில் கதவுகளைத் காற்றோட்டமாகத் திறந்து வையுங்கள். தரையைச் சுத்தப்படுத்தி வையுங்கள் என்றெல்லாம் ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டு உள்ளன.

வூஹான் கொரோனா கிருமியை ஒடுக்க அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளில் தனிநபர்களும் சேர்ந்துகொண்டால் அந்தக் கிருமியை சிங்கப்பூரில் தடுத்து ஒழித்துவிடலாம் என்பது திண்ணம்.

வூஹான் கொரோனா கிருமியை நினைத்து மக்கள் எந்த விதத்திலும் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை.

என்றாலும் ஒவ்வொருவரும் சுத்தத்தைக் கடைப்பிடித்து நடந்துகொள்வது எப்போதுமே முக்கியமானது என்பதால் இப்போதைய காலகட்டத்தில் அந்தப் பழக்கத்தைச் செவ்வனே கடைப்பிடிக்க வேண்டியது இன்னும் முக்கியமானதாகிறது. சுத்தமே காக்கும் கவசம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!