மார்சிலிங்-இயூ டீ குழுத் தொகுதியில் மக்கள் செயல் கட்சியும் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியும் மீண்டும் மோதுகின்றன. நான்கு உறுப்பினர்களைக் கொண்ட மசெக அணிக்குத் தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங், 47, தலைமை ஏற்றுள்ளார்.
மனிதவள மற்றும் தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது, 45, இரண்டு தவணை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ள அலெக்ஸ் யாம், 39, புதுமுகம் ஹானி சோ 33, ஆகியோர் இதர உறுப்பினர்கள்.
ஆளும் கட்சியுடன் மோதும் ஜனநாயகக் கட்சி கடைசி நேரத்தில் தன் திட்டத்தை மாற்றி பெஞ்சமின் ப்வீ என்பவரைக் களம் இறக்கியது. முன்னாள் அரசு ஊழியரான இவர், ஏற்கெனவே இரண்டு பொதுத் தேர்தல்களில் போட்டியிட்டவர்.
இவருடைய அணியில் குங் வாய் யீன், 38, பிரைன் லிம், 43, தமன்ஹுரி அபாஸ் 49, ஆகியோர் உள்ளனர்.
மார்சிலிங்-இயூ டீ குழுத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் யார் என்பது நேற்று உறுதியான பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வோங், கொவிட்-19க்கு எதிரான மிக முக்கிய போராட்டத்தைத் தொடர உங்கள் ஆதரவு எங்களுக்கு முக்கியம் என்று குறிப்பிட்டார்.