புதுடெல்லி: நடப்பு நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 11.8 விழுக்காடு அளவுக்கு சுருங்கும் என அண்மைய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அனைத்துலக மதிப்பீட்டு ஆய்வு முகமைகளில் ஒன்றான ஃபிட்ச் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது.
தற்போதைய அறிகுறிகளை வைத்துப் பார்க்கும்போது இந்தியாவின் பொருளாதார மீட்சி நடவடிக்கையானது வலுவிழந்து காணப்படுவதாகச் சொல்கிறார் ஃபிட்ச் தலைமைப் பொருளாதார வல்லுநரான சுனில்குமார்.
நடப்பு காலாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 11.8 விழுக்காடு அளவுக்கு சுருங்கும் என்றும் அடுத்தடுத்து வரும் மேலும் இரு காலாண்டுகளில் 6.7 விழுக்காடு மற்றும் 5.4 விழுக்காடு என்றளவில் பொருளாதாரம் சுருங்கும் என்றும் சுனில்குமார் தெரிவித்துள்ளார்.
இதற்கு முந்தைய ஆய்வின்போது இந்தியப் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 5.3 விழுக்காடு அளவுக்குச் சுருங்கும் என ஃபிட்ச் கணித்திருந்தது.
கடந்த நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 4.2 விழுக்காடு வளர்ச்சி கண்டிருந்தது.
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் பொருளாதாரம் 2.3 விழுக்காடு அளவுக்கு சுருங்கியது இந்தியாவுக்குப் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
நிபுணர்கள் கணித்ததைவிட இது மிக அதிக பாதிப்பாகும்.