கொவிட்-19ஐ சுற்றி வலம் வரும் தவறான தகவல்களைத் தடுத்து நிறுத்தும் நோக்கத்தோடு சமூக ஊடகங்களான டுவிட்டர், ஃபேஸ் புக் நிறுவனங்கள் தங்களுடைய தளத்திலிருந்து மில்லியன் கணக்கான போலிச் செய்திகளை அகற்றி வருவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளேடு மூலம் தெரிய வருகிறது.
இரு நிறுவனங்களும் கிருமித்தொற்று குறித்த நம்பகமான தகவல்களுக்கு முன்னுரிமை வழங்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
தடுப்பூசியை போட்டுக் கொள்வதை ஊக்கப்படுத்துவது, உலக முழுவதும் தடுப்பூசி பரவலாக விநியோகிப்பது ஆகியவற்றில் நிறுவனங்கள் கவனம் செலுத்தி வருகின்றன.
ஏறக்குறைய 22,400 டுவிட்கள் அகற்றப்பட்டதாகவும் சர்ச்சைக்குரிய உள்ளடக்கங்களைக் கொண்டிருக்கும் 11.7 மில்லியன் கணக்கு கள் சரி பார்க்கப்பட்டு வருவதாகவும் டுவிட்டர் பேச்சாளர் ஒருவர் மார்ச் 18ஆம் தேதி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
சந்தேகத்துக்குரிய கணக்கு களின் உரிமையாளர்கள் தங்களுடைய கைத்தொைலபேசி அல்லது மின்னஞ்சல் வழி மறுவுறுதிப்படுத்த வேண்டும்.
அதன் பிறகே கணக்குகளைத் தொடர்ந்து பயன்படுத்த டுவிட்டர் நிர்வாகம் அனுமதியளிக்கும்.
இதற்கிடையே ஃபேஸ்புக் நிறுவனமும் கடந்த பிப்ரவரியிலிருந்து ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களிலிருந்து இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட உள்ளடக்கப் பதிவுகளை அகற்றியுள்ளது.
அவை அனைத்தும் கொவிட்-19 பற்றிய பொய்ச் செய்திகளாகும்.
உலக சுகாதார நிறுவனத்துடன் சேர்ந்து ஃபேஸ்புக் நிறுவனம் பொய்ச் ெசய்திகளின் பட்டியலைத் தயாரித்திருந்தது.
ஆரம்பத்தில் கிருமித் தொற்றின் தீவிரம், அந்த நோய் பரவும் விதம், பிளீச் (Bleach) நீரைக் குடித்தால் நோய் குணமாகும் என்ற உத்தரவாதம் போன்ற பொய்ச் செய்திகள் இடம்பெற்றிருந்தன.
தற்போது கிருமித் தொற்று மற்றும் தடுப்பூசிகள் பற்றி போலியான பதிவுகள் வெளிவருகின்றன. தடுப்பூசிகளுக்கு நோயை எதிர்க்கும் ஆற்றல் இல்லை, தடுப்பூசிகளுக்குப் பதிலாக நோய் வருவதே மேல், தடுப்பூசிகள் நச்சுத்தன்மை வாய்ந்தவை, ஆபத்தானவை போன்ற பொய்ச் செய்திகள் சமூக ஊடங்களில் பரப்பிவிடப்படுகின்றன.
டுவிட்டரும் தடுப்பூசி பற்றிய போலியான செய்திகளை அகற்றும் நடவடிக்கைகளை விரிவுபடுத்திஉள்ளது.
கொவிட்-19 பற்றிய தவறான செய்திகள், போலித் தகவல்கள் ஆகியவை உடனே அகற்றப்படும் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளேட்டிடம் பேசிய அதிகாரபூர்வ டுவிட்டர் பேச்சாளர் தெரிவித்து உள்ளார்.